|
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெற்று வரும் கடுமையான போரில் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியாவுக்கு முழு விபரமும் தெரியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார். கொழும்புக்கு சென்றுள்ள சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவை சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார். கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பில் சிவ்சங்கர் மேனனுடன் கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் அலோக் பிரசாத் மற்றும் தூதரகத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுவின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் சிவ்சங்கர் மேனன் தெரிவித்த விடயங்கள் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல் தருகையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வருகின்றது. போர் நடவடிக்கையினால் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற அழிவுகளை இந்தியா தடுத்து நிறுத்தும். உயிரிழப்புகள், சேதங்கள், மக்கள் இடப்பெயர்வுகள் பற்றிய விபரங்கள் எல்லாவற்றையும் இந்தியா அறிந்து வைத்திருக்கின்றது என சிவ்சங்கர் மேனன் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நேர்மையான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று சிவ்சங்கர் மேனனிடம் கோரிக்கை விடுத்ததாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். வடக்கு - கிழக்கில் பேரினாலும் துப்பாக்கிச் சூட்டினாலும் மற்றும் ஆட்கடத்தல், காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளினாலும் இன விருத்தி வயதுடைய இளைஞர்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனர் என்று சிவ்சங்கர் மேனனுக்கு சுட்டிக்காட்டியதாகவும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் கூறினர். |
No comments:
Post a Comment