Thursday, January 8, 2009

இன்னொரு கடிதம்: கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்...

கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது.

விரைவில், முல்லைத்தீவும் வீழலாம்.

ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு முடிந்துவிட்டது. அவர்களால் இனி மீள எழுந்து வர முடியாது. புலிகளால் தமிழர்களுக்கு இனி ஆகப் போவதும் எதுவும் இல்லை எனும் விதமாக ஏளனக் கதைகள் பேச ஆரம்பித்து விட்டனர்.

இப்படியானவர்கள் மீது எமக்கு எந்தக் கோபமும் இல்லை, அவர்களுக்காக எதையும் எழுத நான் இங்கே வரவும் இல்லை. ஆனால், வெளிநாட்டுத் தமிழர்களில் அடுத்த பகுதியினர் மிகப் பெரும் பகுதியினர் ஒரு பக்கம் திகைப்பிலும், கவலையிலும், மறுக்கம் புலிகள் ஏதாவது செய்தே ஆவார்கள் என்ற நம்பிக்கையிலும் இருக்கின்றோம்.

அப்படியான எமக்காகவே நான் இங்கே எழுதுகின்றேன். ஊர் ஊராகச் சிங்களப் படைகள் பிடித்துச் செல்வதைப் பார்த்து வரும் தோல்விக் கவலைகளும் அவ்வப்போது இறந்து கிடக்கும் சிங்கள படையினரின் படங்களை இணையத்தில் பார்த்து வரும் வெற்றிக் கனவுகளும் கலைந்து நாங்கள் எழ வேண்டும். உண்மையை உணர வேண்டும். அப்போது தான் சரியாகச் சிந்திக்கவும், முறையாகச் செயற்படவும் முடியும்.

கடந்த காலங்களில் வன்னியில் இருப்போர்கள் நிறையக் கதைத்தார்கள் என்பது உண்மை தான். மேடைப் பேச்சுக்களிலும், ஊடகப் பேட்டிகளிலும் மட்டுமன்றி, தனிப்பட்ட சந்திப்புக்களிலும் கூட அதீத நம்பிக்கைகளைக் கொடுக்கும் வீரக் கதைகள் சொன்னார்கள் என்பதும் உண்மை தான். ஆனால் இப்போது அவர்கள் சொல்லியபடி இன்னும் எதுவும் நடக்கவில்லை என்பதும் உண்மைதான். வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் ஒவ்வொரு நாளும் 'தமிழ்நெற்"றையும், 'புதின"த்தையும் தட்டிப் பார்த்துக்கொண்டு எதிர்பார்ப்புக்களோடு காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கின்றோம்.

நாங்கள் எதிர்பார்த்திருந்தபடி இன்னும் எதுவும் நடந்து விடவில்லை என்பதற்காக, இப்போது புலிகள் தமது அதிசிறப்புப் படையணிகளை இன்னும் சண்டைகளில் ஈடுபடுத்தவில்லை என்றும், ஏதோ தந்திரோபாயமாகப் பின்வாங்குகின்றார்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆட்கள் கொண்ட பெரும் படைகளை வைத்திருக்கின்றார்கள் என்றும், எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு நல்ல சகுனம் பார்த்துப் பாயப் போகின்றார்கள் என்றும் என்னைச் சாந்தப்படுத்துவதற்காக நிiனைத்துக்கொள்ளவும், உங்களைச் சாந்தப்படுத்துவதற்காக எழுதிவிடவும் நான் விரும்பவில்லை.

போதாக் குறைக்கு பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் எழுதும் நமது ஆய்வாளர்கள் வேறு தம் பங்குக்கு புலிகள் அங்கே அப்படித் தாக்கப் போகின்றார்கள், இங்கே இப்படிப் பாயப் போகின்றார்கள் என்று ஏதேதோ எழுதித் தள்ளுகி;றார்கள். புலிகள் எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுகின்றார்களோ, அப்படியாகவே புலிகள் செய்யப் போகின்றார்கள் என்றவாறாக எழுதுகின்றார்கள்.

அவர்களில் சிலர் ஏதோ களமுனைத் தளபதிகளே இவர்களுக்கு அருகில் உட்கார்ந்து தங்களுடைய திட்டங்களை விளங்கப்படுத்தியது போல, கிளிநொச்சி விடுபட்டுப் போனதற்கு வியாக்கியானங்களும், புலிகளின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய விவரணங்களும் எழுதுகின்றார்கள். இன்னொரு பக்கத்தில் ஒருபுறம் கோசம் எழுப்பும் வீரக் கவிதைகளையும், மறுபுறம் எம் அவலங்களைச் சொல்லும் ஒப்பாரிப் பாடல்களையும் எம் கவிகள் இன்னும் வரைந்து தள்ளுகின்றார்கள். உண்மை என்னவெனில் இவை எதுவுமே எமக்கு உதவாது.

இந்த மாதிரியான கனவில் மிதக்க வைக்கும் போரியல் ஆய்வுகளும், வீராவேசக் கவிதை ஜாலங்களும் வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் ஒரு மாயைக்குள் இருக்கவே உதவுமே அல்லாமல், எங்களுக்கு உண்மையை உணர்த்தாது, போராட்டத்திற்கு நன்மைகள் எதனையும் செய்யாது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கத்தான் வேண்டும். அது எங்களிடம் உண்டு. ஆனால், அந்த நம்பிக்கையே அதீத நம்பிக்கையாகி, அதுவே பின்னர் ஒரு மாயை போல எங்கள் எல்லோரையும் மூழ்கடித்து விடும் அளவுக்குப் போக விடக்கூடாது. இப்போது எமக்குத் தேவையானது நிதானமான பதற்றப்படாத அறிவியல் பூர்வமான, ஒரு விஞ்ஞானச் சிந்தனை.

உண்மை இதுதான்:

ஒரு மிகப் பெரிய சர்வதேசச் சதி ஆட்டத்திற்குள் நாம் சிக்குண்டிருக்கின்றோம். சில வருடங்களுக்கு முன்னால் மேற்குலகம் தலைமை தாங்கிய இந்த ஆட்டத்தில் இந்தியா முக்கிய பங்காளியாக இருந்தது. இப்போது இந்தியாவே தலைமை தாங்கும் இந்த ஆட்டத்திற்கு உலகமே ஒத்தாசைகள் செய்கின்றது.

வன்னியில் நடக்கும் போர் இந்த ஒட்டுமொத்தமான பெரும் ஆட்டத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. மிகுதிப் பெரும் பகுதி உண்மையில் எங்களைச் சுற்றியும், எங்கள் மனங்களுக்கு உள்ளேயும் நிகழ்த்தப்படுகின்றது. இந்த ஆட்டத்தின் நோக்கப்-பரிமாணங்கள் நாம் உணர்ந்து வைத்திருப்பதை விட ஆழமானவை, நாம் தெரிந்து வைத்திருப்பதை விட விரிவானவை. அந்த நோக்கங்களின் ஆழத்தையும், விரிவையும் விளங்கிக் கொள்ள நாம் முயல வேண்டும். எங்களைச் சுற்றியும், எங்களுக்கு உள்ளேயும் நடக்கும் இந்தப் பெரும் ஆட்டத்தில் வெல்லுவதற்கு உருப்படியாக எதுவும் செய்யாமல் வன்னிப் போரில் புலிகள் மொத்தமாக வாகை சூடும் போது, எல்லாம் தாமாகவே கைகூடி வரும் என்ற கனவில், சில்லறை வேலைகள் பார்த்துக்கொண்டு நாங்கள் காவல் இருக்கின்றோம். மாயையிலும், அதீத நம்பிக்கையிலும் மூழ்கிப் போய் இருக்காமல், உண்மையை உணர்ந்து கொண்டு யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு தலைவர் பிரபாகரனும் அவரது போராளிகளும் இந்தப் போரிலே வெல்லுவதற்கும், இன்றைய நிலையிலிருந்து நாம் எல்லோருமே மீண்டு வெளியில் வருவதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

வன்னிப் போரின் உண்மை நிலை இதுதான்:

புலிகள் தம்மிடமுள்ள எல்லாவற்றையும் பாவித்துப் போரிடுகின்றார்கள். தமது சக்திக்கும் மீறி எல்லாவற்றையும் செய்து போரிடுகின்றார்கள். தமது எல்லாப் போராளிகளையும், எல்லாப் படையணிகளையும், எல்லா முனைகளிலும் களத்தில் இறக்குகின்றார்கள். ஆனால் எல்லாவற்றையும் கடந்து சிறிலங்காவின் படைகளை முன்னேற வைக்கின்றது இந்த உலகம் என்பது தான் உண்மை.

கிளிநொச்சி வீழும் வரையிலும், முல்லைத்தீவும், ஆனையிறவும் முற்றுகைக்கு உள்ளாகும் வரையிலும், வன்னியின் வட கிழக்கு மூலைக்குள்ளே முடக்கப்படும் வரையிலும், தனது அதிசிறப்புப் படையணிகளைப் பின்னாலே வைத்துக் கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார் தலைவர் பிரபாகரன் என்பதை நம்புவது எனக்குக் கடினமானது. உலகமே பின்னாலே திரண்டு முன்னாலே தள்ள, முன்னேறி வருகின்ற சிறிலங்காவின் படைகளைத் தடுத்து நிறுத்த முடியாது போன பொறுப்பை புலிகளின் தலையில் கட்டிவிட்டு, நாம் சும்மா கவலைப்பட்டுக்கொண்டும், மீதி நேரத்திற்குத் துக்கம் விசாரித்துக்கொண்டும் இருக்க முடியாது.

அங்கே முன்னேறிச் செல்கின்ற படைகளைத் தடுக்க, இங்கே உரியதைச் செய்யாமல் விட்டுவிட்ட அது நடப்பதற்கு இன்னொரு வகையில் அனுமதித்த வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாங்களும் தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். அங்கே நடப்பதைத் தடுப்பதற்கு நாங்கள் செய்திருக்க வேண்டிய கூட்டுப்பொறுப்பில் கால்வாசியைத் தன்னும் நாம் செய்துவிடவில்லை. நம்பிக்கை இருக்கத்தான் வேண்டும். ஆனால், அந்த நம்பிக்கை என்பது நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளை எடுக்க விடாமல் நாம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்ய விடாமல் யதார்த்தத்தை நாம் உணர்ந்து கொள்ளவிடாமல், எம்மை ஒரு மாயைக்குள் கட்டி வைத்துவிடும் அளவுக்கு அதீத நம்பிக்கை ஆகிவிடக் கூடாது. எமது விடயத்தில் அது தான் நடந்து விட்டது.

ஒரே இரவில் பெரும் இராணுவ வெற்றியைச் சாதித்து, முழு உலகத்தையும் தமிழருக்கு சார்பாக மாற்றி, தமிழீழத்தை வென்றெடுப்பார்கள் புலிகள் என்று விட்டுவிட்டு, வெறும் மனிதாபிமானப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு நாங்கள் காலத்தை ஓட்டிவிட்டோம். ஆனால் இன்னும் ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. தலைவர் பிரபாகரனும், விடுதலைப் புலிகளின் போர் வீரர்களும் தம்மையே திகைப்பில் ஆழ்;த்தும் இராணுவக் கோலாகலங்களை நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவர்கள். ஆனால் அதனை அவர்கள் எங்கே நிகழ்த்துவார்கள், எப்படி நிகழ்த்துவார்கள், நிகழ்த்தியே தீருவார்களா என்பதெல்லாம் எம் யாருக்கும் தெரியவே தெரியாத விடயங்கள். தங்களுக்கான கடமையை அவர்கள் தமது வல்லமைக்கு மேலாகவே செய்கின்றார்கள். எங்களுக்கான கடமையை நாம் எந்த அளவிற்குச் செய்கின்றோம்?

ஒரு புறத்தில் அக்கறையும், நம்பிக்கையும் துணிவும் இருக்கும் வரை யாரும் தோற்றுப் போனவர்கள் அல்ல. பலவீனமானவர்களும் அல்ல. அவற்றை இழக்காதவரை யாரும் எதையும் இழந்தவர்களும் அல்ல. ஏனெனில் அவை தான் நாம் இழந்தவற்றையும், அதற்கு அதிகமாகவும் மீளப் பெறுவதற்கு எம்மிடமிருக்கும் ஆகக் கடைசி ஆயுதங்கள். மறுபுறத்தில் அக்கறையின்மையும், விரக்தியும் சலிப்பும் நேரெதிரானவை. அவை வந்துவிட்டால் நாம் வென்றிருந்தாலும் தோற்றவர்கள், பலமாய் இருந்தாலும் பலவீனமானவர்கள். ஏனெனில், அவை தான் எம்மை வீழ்த்தும் முதல் ஆயுதங்கள். எம்மிடம் இருப்பவற்றையும் இழக்க வைத்துவிடுவன அவை. அதே நேரம் அதீத நம்பிக்கையில் உயர் உற்சாகம் பெறுவதும், மிகுந்த மன விரக்தியில் சலிப்புறுவதும், சில வேளைகளில் ஒரே விளைவினைக் கொடுக்கக்கூடியவையே.

உயர் உற்சாகம் எம் கண்களை மறைப்பதற்கும், விரக்தி எம்மைச் சோர்வடைய வைப்பதற்கும் நடுவிலுள்ள மெல்லிய இடைவெளியில் நாங்கள் சிந்தனையை ஓட்ட வேண்டும். அப்போது தான் நிதானமாக யோசித்து நாம் செயலாற்ற முடியும். சும்மா செய்திகளைப் படித்துவிட்டு நடந்து முடிந்தவற்றை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவோ, அல்லது நடக்கப்போகின்றவை பற்;றிய கற்பனைகளில் மிதக்கவோ எமக்கு இப்போது நேரமேயில்லை. வெளிநாட்டுத் தமிழ் செயற்பாடுகளில் இதுவரை நாம் என்ன செய்தோம் என்பதை மீள நோக்கி, எங்கெல்லாம் தவறிழைத்தோம் என்பதைக் கண்டறிந்து, இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்த உலகம் என்னவிதமான ஒரு கபட ஆட்டத்தை எம்மைச் சுற்றி ஆடுகின்றது என்பதை அவதானித்து, எவ்வகையான பசப்பு வார்த்தைகள் பேசி எம்மை மயக்குகின்றது என்பதை உணர்ந்து, எவ்வாறு இந்த ஜால வலையில் நாம் சிக்கிக்கொண்டோம் என்பதை விளங்கிக்கொண்டு இந்தப் பெரும் சர்வதேச ஆட்டத்தை முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். அது தான் உருப்படியான வழிமுறை. தமிழர்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அனைத்துலக மட்டத்தில் முன்னெடுப்பதற்கான எல்லா வழிகளையும் கண்டறிவதும், அவற்றைக் கண்டறிந்து அவற்றினூடாக அதனை எல்லா முறைகளிலும் முன்னெடுப்பதும்,

அதனை முன்னெடுத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை எல்லா மட்டங்களிலும் பெறுவதும், அங்கீகாரத்தைப் பெற்று முடிவாகத் தமிழீழத் தனியரசை வென்றெடுப்பதும் வெளிநாட்டுத் தமிழர்களாகிய எம் கைகளிலேயே உண்டு.

நாம் செயற்பட வேண்டும், உடனடியாக.

தி.வழுதி

ஒரு கடிதம்: போர் முனை (நன்றி தமி்ழ்நாதம்)
தகவல் : basel murali
08 Jan 2009 USA
http://www.swisstamilweb.com/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails