|
|
சிறிலங்கா அரசாங்கம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படையெடுப்புக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகள் உள்ளிட்ட இராணுவ உதவிகளை பாகிஸ்தானும் இந்தப் போருக்குத் தேவையான ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்கி வருகின்றன என கொழும்பிலிருந்து வெளிவரும் "த மோர்ணிங் லீடர்" தெரிவித்துள்ளது. |
இது தொடர்பாக நேற்று புதன்கிழமை வெளிவந்த த மோர்ணிங் லீடரின் அரசியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: மகிந்த ராஜபக்ச அரசாங்கம் "காலவரையறை" என்ற பொறிக்குள் சிக்கியுள்ளது. இப்போது அது மீண்டும் ஒரு கால எல்லையை அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னதாக கிளிநொச்சியை கைப்பற்றப்போவதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்யப் போவதாகவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஆனால், பொருளாதார தளம்பல் அரசாங்கம் நடத்தும் புலிகளுக்கு எதிரான போரில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. முக்கியமான உற்பத்தி நிறுவனங்கள் பல வீழ்ச்சியடையும் கட்டத்தை அடைந்துவிட்டன. தனியார் வங்கிகளும் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளன. வைப்பில் இடப்பட்ட பணத்தை வாடிக்கையாளர்கள் பெருமளவில் மீள எடுத்து வருவதும், கடன் மற்றும் கடன் அட்டைகளுக்கான மீள செலுத்தும் தொகைகளை வாடிக்கையாளர்கள் செலுத்த தவறுவதும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதார கட்டமைப்பு தகர்ந்து போகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையும் இந்த வருடத்தில் 41.1 விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மகிந்த தலைமையில் கூடிய அவசர கூட்டத்தில் நிதி நெருக்கடிகளை சமாளிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. நிதி நெருக்கடி அடுத்த சில மாதங்களில் அரசின் கைகளை மீறிவிடும் என தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வன்னியில் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கை பாகிஸ்தானின் ஆயுத உதவியில் தங்கியுள்ளது. பாகிஸ்தான் வன்னி நடவடிக்கைகளுக்கு தேவையான ஆயுதங்களையும் ஏனைய படைத்துறை உபகரணங்களையும் வழங்கி வருகின்றது. அரசாங்கத்துக்கு தேவையான ஏனைய உதவிகளை இந்தியா வழங்கி வருகின்றது. கிளிநொச்சி நகர் வீழ்ச்சி கண்டாலும் தொடர்ந்து போராடுவோம் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை. ஆனால், உலகம் பாரிய பொருளாதார அழுத்தங்களை சந்திக்கும் போது சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மறைந்து போகலாம். அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதில் ஆர்வம் இல்லை. அது விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு முயற்சித்து வருகின்றது. ஆனால், தடை செய்தாலோ அல்லது செய்யா விட்டாலோ போர் தொடரும் என்பது நிச்சயம். ஆனால் போர் தொடரும் சந்தர்ப்பத்தில் மகிந்தவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் அதிக நிதி தேவை. சுயாதீன ஊடகங்களில் பல, அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு உட்படுவதால் புதிய வருடத்தில் சிறிலங்கா மக்கள் முற்று முழுதாகவே பேச்சு உரிமைகளை இழந்தவர்களாகி விடுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment