Wednesday, October 1, 2008

முதல் இரண்டு டெஸ்ட் : இந்திய அணியில் கங்குலி சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில், முன்னாள் கேப்டன் கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த்துக்கு, இதுவே முதல் தேர்வுக்குழு கூட்டமாகும்.

அண்மையில் நடந்த இரானி கோப்பையில் கங்குலி சேர்க்கப்படவில்லை.காரணம், அவர் இப்போது உரிய ஃபார்மில் இல்லை என்பதே. இலங்கை தொடரில் அவரது மொத்த ரன்கள் - 100-க்கும் குறைவே. ஆயினும், தனது திறமையை வெகுவாக வெளிப்படுத்த காத்திருப்பதாக, அவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்தச் சூழலில், இந்திய அணியில் கங்குலி மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அணிக்கு உகந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லை என்ற குறையை கங்குலி போக்கக் கூடும் என்ற காரணத்தால் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், மூத்த வீரர் என்ற முறையில் அணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதையும், நிலையையும் கங்குலி எட்டிவிட்டார். இதனால், கெளரவமான முறையில் அவர் தனது ஓய்வை அறிவிக்கும் சூழலை ஏற்படுத்தவே, அவருக்கு மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளாதாக, கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு, கங்குலி தனது ஓய்வை அறிவித்துவிடுவார் என்றும் தகவல்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி விபரம்:

கும்ப்ளே (கேப்டன்), சேவாக், கம்பீர், சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மண், தோனி, இஷாந்த் ஷர்மா, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், முனாப் படேல், பத்ரிநாத், அமித் மிஷ்ரா மற்றும் ஆர்பி சிங்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, அடுத்த மாதம் 9-ம் தேதி பெங்களூரிலும், இரண்டாம் டெஸ்ட் போட்டி 17-ம் தேதி மொஹாலியிலும் தொடங்குகிறது
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails