Thursday, October 9, 2008

ஒத்திகை பார்த்து நடக்கிறது ஒரிசா காலவரம்!-நெஞ்சை உலுக்கும் நேரடித் தகவல்கள்

 

ரிசா கலவரத்தின் ஆரம்பப் புள்ளி ஒரு கொலைதான். லட்சுமணானந்தா சரஸ்வதி என்பவரை நக்சல் தீவிரவாதிகள் போட்டுத்தள்ள, இதற்காகவே காத்திருந்தது போல, சில மதவாத சக்திகள் அங்குள்ள பாணாஸ் என்ற கிறிஸ்துவப் பழங்குடி மக்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட, ஒட்டுமொத்த ஒரிசாவும் இன்றுவரைஆடிப்போய் நிற்கிறது. அந்தக் கலவரப் புயலின் `கண்' பகுதியாகக் கருதப்படும் இடம் கந்தமால் மாவட்டம்.

கலவரத்தால் கந்தர கோலமாகிக் கிடக்கும் கந்தமால் பகுதிக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அண்மையில் சென்று திரும்பியிருக்கிறது. தமிழகம் சார்பாக இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் இரண்டே பேர். ஒருவர் அ.மார்க்ஸ். மற்றவர் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் இணைச்செயலர் வக்கீல் கே. கேசவன்.
நாம் வக்கீல் கேசவனைச் சந்தித்து அவரது ஒரிசா அனுபவங்களைக் கேட்டோம்.

``ஒரிசா மாநிலம் கந்தமால் பகுதிக்கு உண்மை அறியும் குழுவாக நாங்கள் சென்றோம். எங்கள் குழுவில் ஆந்திரா, கர்நாடகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் இடம்பெற்றிருந்தார்கள். ஒரிசாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேபரஞ்சன் சாரங்கியும் எங்களுடன் இணைந்து கொண்டார்.   வன்முறையால் நார்நாராகக் கிழிந்து போய்க் கிடந்த அந்தப் பகுதிகளில் கடந்த 20, 21 ஆகிய தேதிகளில்  நாங்கள் நேரடி ஆய்வு மேற்கொண்டு தகவல் திரட்டினோம்.

பாலிகுடா, பிரமானிகான், மிடியாகியா, புட்ருகியா, டாமிகியா, ஜகபாதூர், லேக்பாடி, ரெய்கியா, கட்டிவ்தியா உள்ளிட்ட பல பகுதிகளைப் பார்வையிட்டோம். இங்கே ஏறத்தாழ 40000 பேர் இருபது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் தாரங்கபாடி, ஜி.உதயகிரி ஆகிய முகாம்களுக்கு நாங்கள் சென்றபோது அங்கே பாதிக்கப்பட்டவர்களிடம்  உரையாட அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டார்கள். எனவே, சிறிது நேரம்தான் அந்த மக்களுடன் பேச முடிந்தது,  கண்களில் இன்னும் கலவர பயம் மிச்சம் இருக்க, அந்த மக்கள் எங்களிடம் வாய் திறக்கவே அஞ்சி நடுங்கினார்கள்.

குஜராத் கலவரத்தின்போது அங்கே பாதிக்கப்பட்டவர்களைச்  சந்தித்துப் பேச முதல்வர் நரேந்திர மோடி தடைவிதிக்கவில்லை. ஆனால், ஒரிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் ஆட்சியோ மோடியின் ஆட்சியை விட மோசமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களிடம் நாங்கள் பேசக் கூடாது என ஒரிசா அதிகாரிகள்  அனுமதி மறுத்தது மனித உரிமை மீறலின் உச்சம்.

உதயகிரி முகாமைப் பார்த்தபோது நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். காரணம், அங்கே கடும்மழையால் ஏற்பட்ட சேறுசகதியின் நடுவே நிவாரணக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாதிப்புக்குள்ளான மக்ளுக்காக உணவு தயாரிக்கும் இடத்தின் அருகே பன்றிகளும் மற்ற விலங்குகளும் உலா வந்தபடி இருந்தன. `சேறும் சகதியுமான இடத்தில் ஏன் இப்படி நிவாரண முகாம்கள்?' என்று நிவாரண கமிஷனர் சத்தியபாரத சாகுவிடம் நாங்கள் போனில் கேட்டபோது, அவர் சொன்ன பதில் அதிர்ச்சி ரகம். `இவர்களை  அரசு கட்டடத்தில் தங்க வைப்பதை மற்ற சமுதாயத்தினர் விரும்ப மாட்டார்கள்' என்று கூறி அவர் எங்களை அதிர வைத்தார்.

அது மட்டுமல்ல. அந்த முகாம்களில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்களை சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் செல்லும்படி சிலர் மிரட்டுவதைப் பார்க்க முடிந்தது. பாதுகாப்புக்காக ஒதுங்கிய இடத்திலும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாத நிலை.  போலீஸாரோ இதை, கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

பாதிப்புக்குள்ளான கிராமங்களில் தெருவில் நடந்து செல்வோர் கூட எங்களிடம் பேசத் தயங்கினார்கள். அப்படிப் பேசினால்  போலீஸார் மூலம் தேவையில்லாத தொல்லை ஏற்படும் என்ற பயம் அவர்களுக்கு. அங்கே அரசியல்வாதிகளே கூட வாய் திறக்கப் பயப்படுவதுதான் அதிசயம். அந்தப் பகுதியைச் சேர்ந்த  ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. கூட இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் எங்களைச் சந்தித்துத்தான் மனம்விட்டுப் பேச முடிந்தது.

மிரட்டலுக்குப் பயந்து முகாமை விட்டு ஊர் திரும்பும் மக்களின் நிலைமையோ இன்னும் வேதனை. மீண்டும் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். தாக்கியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் புகார் கொடுத்தாலும் போலீஸார் அதை ஏற்பதில்லை. அதையும் மீறி, தாக்கியவர்களின் பெயர்களை எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்ய வற்புறுத்தினால் `அந்த நபர்களை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?' என போலீஸார் பீதியைக் கிளப்புகிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்று கிராம மக்கள் அமைதியானவுடன் `அடையாளம் தெரியாத சிலர்'  என போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விடுகிறார்கள்.

முன்கூட்டியே நிகழ்ச்சி நிரல் போட்டது போல  `இன்று இந்த கிராமத்தைத் தாக்கப் போகிறோம்' என்று வன்முறையாளர்கள் சவால்விட்டுத் தாக்குதல் நடத்தும் சூழ்நிலை அங்கே உள்ளது. லேக்பாடி கிராமத்தை அப்படித்தான் சூறையாடி இருக்கிறார்கள்.  தாக்குதல் நடக்கப் போவது முன்கூட்டியே தெரிந்தும், போலீஸார் அங்கே எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கையைக் கட்டிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் நாற்பது சதவிகிதத்துக்கு மேல் வாழும் ரெய்கியா பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.

இந்த வன்முறைக்கு என்ன காரணம்? என்று நாங்கள் விசாரித்தோம். `இங்குள்ள காட்டுப் பகுதியில் `கிறிஸ்துவ பாணாஸ்' என்ற சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் இவர்கள் அங்குள்ள பழங்குடியினர் பேசும் `குயி' என்னும் மொழியைப் பேசுகிறார்கள். இவர்கள் கிறிஸ்துவ மதத்தவராக இருக்கும் நிலையில் `இவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கொடுப்பது குறித்து பரிசீலிக்கலாம்' என அங்குள்ள ஐகோர்ட் கூறியது. கிறிஸ்துவர்களாக இவர்கள் இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு என்பதால்தான் கலவரம் வெடித்தது' என்பது மாதிரி  இந்து மதவாத அமைப்புகள் கூறிவருகின்றன. ஆனால் இதில் உண்மையில்லை என்பது எங்கள் விசாரணையில் தெரிய வந்தது.

குயி மொழி பேசும் பழங்குடிகளும், கிறிஸ்துவ பாணாஸ்களும் காட்டில் சென்று சேகரிக்கும் பொருட்களை உயர்சாதி விவசாயிகள் இதுநாள் வரை குறைந்த விலைக்கு வாங்கி ஏமாற்றி வந்தார்கள். நீண்டகாலமாக நாம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம்  என்பது ஒருகட்டத்தில் பழங்குடிகளுக்கும் கிறிஸ்துவ பாணாஸ்களுக்கும் உறைக்க, அவர்கள் தங்களது பொருட்களுக்கு நியாயமான விலை தரவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது உயர் சாதியினருக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்க, இனி இவர்களைப் பிரித்தால்தான் அவர்களது உற்பத்திப் பொருளை அடிமாட்டு விலைக்கு வாங்க முடியும் என்ற முடிவுக்கு உயர்சாதியினர் வந்திருக்கிறார்கள். அதன்  தொடர்ச்சியாகத்தான் அங்கே மதக்கலவரத்தைத் தூண்டிவிட அவர்கள் தருணம் பார்த்திருந்தார்கள். 

இந்த நேரத்தில் நடந்த லட்சுமணானந்தா சரஸ்வதி கொலை இந்தக் கலவரத்துக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. அந்தக் கொலையை மதவாத அமைப்புகள் சாதகமாகப்  பயன்படுத்திக் கொண்டன.  லட்சுமணானந்தா சரஸ்வதியின் இறுதி  ஊர்வலத்தை சுமார் நூற்றைம்பது கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் சென்று கலவரத்துக்கான பொறியை மதவாதிகள் தூண்டினார்கள். அந்த இறுதி ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும் பல இடங்களில்  பழங்குடியினர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 

`லட்சுமணானந்தாவை நாங்கள்தான் கொன்றோம்' என மாவோயிஸ்டுகள் அறிவித்த பிறகும் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் தொடர்வது அதிசயமாகவே இருக்கிறது. இதிலிருந்தே இது திட்டமிட்ட வன்முறை என்பது தெளிவாகிறது. ஏதோ திடீர் ஆத்திரத்தில் இந்த வன்முறை தொடங்கியதாகக் கூறமுடியாது. இந்த வன்முறைக்காக மதவாதிகள் காத்திருந்தார்கள் என்றுதான் கூறவேண்டும். அங்கு வன்முறையில் இறந்தவர்கள் இருபத்தொன்பது பேர்தான் என அரசு சொன்னாலும் கூட அங்கே கலவரச் சாவு எண்ணிக்கை ஐம்பதைத் தொடும் என அங்குள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். இதில் காணாமல் போனவர்கள் கணக்கு தனி.

ஒரிசாவைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே முதல்முறையாக 1967-ம் ஆண்டு அங்கு மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரிசா மாநிலத்தில் 95 சதவிகிதம் பேர் இந்துக்கள். இந்த சூழலை குஜராத் போல தனக்கு சாதகமாக மாற்றும்   முயற்சியில் முதல்வர் நவீன்பட்நாயக் ஈடுபட்டிருக்கிறார் என்றே கருதவேண்டியிருக்கிறது.

தற்போது, `மதத்தின் பெயரால் கலவரத்தை ஏற்படுத்துகிறவர்கள் லட்சுமணானந்தா போல தண்டிக்கப்படுவார்கள்' என மாவோயிஸ்டுகள் அறிவித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால், இது மாவோயிஸ்டுகளின் முதல் தாக்குதல். அத்துடன்  `இது தொடரும்' என்றும் அவர்கள் மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், ஆதிவாசிகள் மற்றும் ஒவ்வொரு சமூகத்தினர் குறித்த தங்கள் நிலைப்பாட்டையும்  மாவோயிஸ்டுகள் அறிக்கை மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் ஒரிசாவில் வன்முறைக்கு ஆட்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை யார் வேண்டுமானாலும் தடையின்றிப் பார்த்துப் பேச அனுமதிக்க வேண்டும்.  அப்போதுதான் வெளியில் இருந்து வரும் நிவாரண உதவிகள் அவர்களுக்குக் கிடைக்கும். அதுபோல தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் தரும் புகார்களை போலீஸார் உடனடியாகப் பதிவு செய்யவேண்டும். எஃப்.ஐ.ஆரில் குற்றவாளிகளின்  பெயரையும்  எழுதவேண்டும். அதுமட்டுமில்லாமல், காவல்துறை பாரபட்சமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். இவைதான் எங்கள் பரிந்துரைகள். ஒரிசாவில் அமைதி திரும்பும் அந்த நல்ல நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்'' என்றார் கேசவன்.

மத்திய அரசு, தற்போது ஒரிசாவின் நவீன் பட்நாயக் அரசுக்கு அபாய மணி அடித்துவிட்ட நிலையில், இனியாவது அங்கே அமைதி திரும்பாதா என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. அந்த நாளும் வந்திடாதோ?

ஸீ ப. திருமலை
படங்கள்: ராமசாமி

source: http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-12/pg3.php?type=Reporter

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails