கலவரம் நீடிப்பு எதிரொலி
ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா?
மாநில அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்கிறது
புவனேசுவரம், அக்.5-
ஒரிசா நிலவரம் குறித்து அந்த மாநில கவர்னரிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டு உள்ளது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.
கலவரம் நீடிப்பு
ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் கடந்த மாதம் விசுவ இந்து பரிஷத் தலைவர் லட்சுமணானந்தா சரசுவதி கொல்லப்பட்டதை தொடர்ந்து, கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
போலீசாரின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து ஓரளவு அமைதி திரும்பி வந்த நிலையில், அந்த மாவட்டத்தில் நேற்று முன்தினம் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. அங்குள்ள சிந்துபங்கா என்ற கிராமத்தில் ஒரு கும்பல் 2 பேரை வெட்டிக் கொன்றது. இதனால் ஒரிசா கலவர சாவு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.
துணை ராணுவம்
மேலும் இந்த கலவரம் பக்கத்தில் உள்ள போத் மாவட்டத்துக்கும் பரவியது. அந்த கிராமத்தில் 4 கிராமங்களில் 111 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அந்த மாவட்டத்திலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே கலவரத்தை ஒடுக்க போத் மாவட்டத்துக்கு 2 கம்பெனி துணை ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
போத் மாவட்டத்திற்கு கலவரம் பரவியது துரதிருஷ்டமானது என்று கூறிய முதல்-மந்திரி நவீன் பட்நாயக், அங்கு மூத்த அதிகாரிகளும், கூடுதல் பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
மத்திய அரசு அறிக்கை கேட்கிறது
கலவரத்தை அடக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோரி நவீன் பட்நாயக்குக்கு மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார்.
சிவராஜ் பட்டீல் நேற்று ஒரிசா கவர்னர் முரளிதர் சந்திரகாந்த் பண்டாரேயை தொடர்பு கொண்டு மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கேட்டு அறிந்தார். அப்போது, ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து அறிக்கை அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதி ஆட்சி வருமா?
சிவராஜ் பட்டீல் நேற்று தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்; ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருவதாக தெரிவித்தார். கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது குறித்து ஏற்கனவே 6 முறை மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஒரிசாவில் நிலைமை மேலும் மோசம் அடைந்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தால், அதை மத்திய அரசு ஏற்கக்கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படுத்தப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.
பா.ஜனதா எச்சரிக்கை
ஒரிசாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினால், அதற்காக மத்திய அரசு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஒரிசாவில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை என்றும், ஆனால் அங்கு இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஊரடங்கு உத்தரவு
இதற்கிடையே, கந்தமால் மாவட்டத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில், 12 போலீஸ் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அந்த மாவட்டத்தில் லைசென்சு பெற்று துப்பாக்கி வைத்து இருப்பவர்களும், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களும் அவற்றை 3-ந் தேதிக்குள் போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, 144 பேர் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைத்தனர். `கெடு' முடிந்ததை தொடர்ந்து, இன்னும் ஒப்படைக்காதவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாக கந்தமால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீண் குமார் தெரிவித்தார்.
103 பேர் கைது
கலவரத்தை தூண்டியதாக 103 பேரை கைது செய்து இருப்பதாகவும், வன்முறை கும்பலை போலீசார் தொடர்ந்து வேட்டையாடி வருவதாகவும் அவர் கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=442747&disdate=10/5/2008
No comments:
Post a Comment