கடந்த சில மாதங்களிற்கு முன்பு சமஸ்கிருத "மந்திரங்கள்" பற்றி நான் எழுதியிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழர்களின் விழாக்களில் சொல்லப்படும் வடமொழி மந்திரங்கள் எவ்வளவு தூரம் ஆபாசமும் அருவருப்பும் கொண்டவை என்பதை அதில் விளக்கியிருந்தேன்.
இந்த வடமொழி மந்திரங்களை மேலும் ஆராய்ந்து அதை ஒரு தொடராகவும் (இந்து மதமும் பெண்களும்) எழுதியிருந்தேன். அண்மையில் அதை ஒரு சிறு நூலாகவும் ஜேர்மனியில் வெளியிட்டிருந்தேன். இந்த நூலினைப் படித்த சில தீவிர மதவாதிகள் என்னை ஒரு பகிரங்க விவாதத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள்.
ஜேர்மனியில் உள்ள இந்து ஆலயங்களில் பூசை செய்கின்ற பல பூசாரிகள் விவாதத்திற்கு வருவார்கள் என்றும், எனக்கு அவர்கள் விளக்கம் தருவார்கள் என்றும் அவர்கள் எனக்கு அறியத் தந்திருந்தார்கள். அவர்களுடைய சவாலை நான் ஏற்றுக் கொண்டேன். பூசாரிகள் தங்கள் "பொன்னான" நேரத்தை ஒதுக்கி விவாதத்தில் கலந்து கொள்வதற்காக விவாதத்திற்கான நாளும் இடமும் ஒரு மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கடந்த 7.09.08 ஞாயிற்றுக் கிழமை அன்று ஜேர்மனியில் உள்ள டோட்முண்ட் நகரில் விவாதம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. சரியான நேரத்திற்கு நான் சென்றிருந்தேன். எந்த ஒரு பூசாரியும் அங்கு வரவில்லை. இந்து மதத்தைப் பற்றி எள்ளளவு அறிவு கூட இல்லாத சிலர் அங்கு வந்து என்னுடன் அடாவடித்தனமாக நடக்க முற்பட்டார்கள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பூசாரிகளின் வருகைக்காக நான் காத்திருந்தேன்.
ஒரு மணித்தியாலம் தாமதமாக "ஜெயந்திநாதசர்மா" என்கின்ற ஒரே ஒரு பூசாரி மட்டும் வந்தார். ஆனால் அவரால் என்னுடன் விவாதம் செய்ய முடியவில்லை. மந்திரங்களின் அர்த்தத்தை தன்னால் விளங்கப்படுத்த முடியாது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அவர் அதற்கு தம்மிடம் வேறு ஆட்கள் இருப்பதாகவும், அந்த "அறிஞர்கள்" அனைவரும் விரைவில் எனக்கு விளக்கத்தை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அவர் தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு சென்று விட்டார்.
ஏழாம் திகதி அன்று அனைத்து ஆலய பூசாரிகளும் என்னுடன் விவாதம் செய்து மந்திரங்கள் பற்றிய "புனிதமான(?)" விளக்கத்தை எனக்கு தருவார்கள் என்று கூறியதால்தான் நான் அன்றைக்கு அங்கு சென்றிருந்தேன். ஆனால் அங்கே வந்த ஒரேயொரு பூசாரியான ஜெயந்திநாதசர்மாவோ இன்னொரு நாள் விளக்கத்தை தருவதாக சொல்லி விட்டு ஓடி விட்டார்.
ஜெயந்திநாதசர்மா சென்ற பின்பும் என்னுடன் ஒரு சிலர் அடாவடித்தனமாக நடந்து கொண்டார்கள். அடியாட்கள் போன்று அவர்களின் நடத்தை இருந்தது. என்னை பேசவிடாது தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
ஆனால் ஒரு சிலர் ஆரோக்கியமான முறையில் தமது கருத்துக்களை முன்வைத்தார்கள். அவர்களுடன் நான் நடத்திய நீண்ட உரையாடலிற்குப் பின்பு அவர்களாகவே ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்கள். அதன்படி ஒரு ஆண்டு கால எல்லைக்குள் ஜேர்மனியில் நடைபெறும் ஆலய வழிபாடு, திருமணங்கள் உட்பட தமிழர் நிகழ்வுகள் அனைத்தும் தமிழில் நடைபெறுவதற்கு தாம் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள். என்னுடைய நோக்கமும் விருப்பமும் அதுவாகவே இருந்தது.
இது உண்மையில் நல்ல ஒரு திருப்பமாக அமைந்தது. இந்து மதத்திற்கு ஆதரவாக வாதாட வந்தவர்களே இந்தத் திட்டத்தை முன்வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம். இவர்களின் இந்த முயற்சிக்கு என்னால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாக நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன். ஆனால் இங்கே உள்ள பூசாரிகளை மீறி இவர்களால் வெற்றி பெற முடியுமா என்பது இதில் உள்ள மிகப் பெரிய கேள்வி.
இப்பொழுது இதை இங்கே எழுதுவதன் மூலம் இரண்டு விடயங்களை பதிவு செய்ய நினைக்கின்றேன். முதலாவது ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் கூடிய தமிழர்கள் ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஆலயங்கள், திருமணங்கள் போன்றவற்றில் தமிழைக் கொண்டு வரவதற்கு முடிவெடுத்துள்ளார்கள் என்பது.
மற்றது ஜெயந்திநாதசர்மா எனக்கு அளித்த வாக்குறுதி. இந்து மத அறிஞர்கள் ஒன்று கூடி பொது இடத்தில் பகிரங்கமாக என்னுடன் விவாதித்து என்னுடைய மந்திரங்கள் பற்றிய நூலுக்கு பதில் தருவார்கள் என்பது. இந்த வாக்குறுதியை இவர்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக நான் இந்தப் பூசாரிகளை நோக்கி பகிரங்கமான சவாலை விடுக்கின்றேன்.
மந்திரங்கள் பற்றியும் அதன் பின்புலம் பற்றியும் நான் எழுதியவை மிகச் சரியானவை. இதை எங்கேயும் எந்த மேடையிலும் வந்து சொல்வதற்கு நான் தயார். இந்து மதம் பற்றி எந்தக் கொம்பனுடன் வேண்டுமென்றாலும் விவாதம் செய்வதற்கு நான் தயார். இது என்னுடைய பகிரங்கமான அறைகூவல்.
(குறிப்பு: இந்த அறைகூவல் பத்திரிகை, இணையத்தளங்கள், துண்டுப் பிரசுரங்கள் ஊடாக எதிர்தரப்பிற்கு அறிவிக்கப்படுகின்றது)
- வி.சபேசன்
No comments:
Post a Comment