புதுடெல்லி, அக்.2-
இன்று முதல் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
பொது இடங்களில் புகை பிடிக்க தடை
உலகில் புகையிலை பழக்கத்தால் ஆண்டு தோறும் 55 லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள். மேலும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த மே மாதம் 30-ந் தேதி வெளியிட்டது. பொது இடங்களில் புகை பிடிக்க வகை செய்யும் இந்த சட்டம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இன்று முதல் அமல்
இதை எதிர்த்து இந்திய புகையிலை நிறுவனம், இந்திய ஓட்டல்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் 4 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்த அனுமதி அளிக்க கோரியும், இந்த எல்லா ரிட் மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று கோரியும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு பிறப்பித்த சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி விட்டது.
எனவே பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த சட்டம் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
ரூ.200 அபராதம்
ஆகவே இன்று முதல் பஸ் நிறுத்தம், ரெயில் நிலையம், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் போன்ற பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் யார்-யார்? என்பது பற்றிய விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநில, மாவட்ட, வட்ட மற்றும் கிராம அளவில் பறக்கும் படையும் அமைக்கப்பட்டு உள்ளது.
மத்திய மந்திரி கடிதம்
பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்டு உள்ள சட்டத்தை அமல்படுத்துமாறு கோரி மத்திய சுகாதார துறை மந்திரி டாக்டர் அன்புமணி அனைத்து மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள் மற்றும் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். புகை பிடிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் மூலம் வசூலாகும் பணத்தை மாநில அரசுகள் புகையிலை தடுப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் இல்லையேல் அரசு கருவூலத்தில் செலுத்தலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.
ஜார்கண்ட், டெல்லி, சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து அந்த மாநில அரசுகள் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளன. ஆனால் பீகார், மராட்டியம் போன்ற சில மாநில அரசுகள் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிப்பது தங்களால் இயலாத காரியம் என்று கூறி இருக்கின்றன.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=442160&disdate=10/2/2008
No comments:
Post a Comment