|
இலங்கை அதிபர் ராஜபக் ஷேயின் அதிபர் நாற் காலிக்கு வேட்டு வைக்க, அங்கே அதிரடித் திட்டங்களை அரங்கேற்றி வருகிறார் முன்னாள் தளபதி ஃபொன்சேகா. இதற்கிடையில், ராஜபக்ஷேயின் தலையில் 'இடிவிழ வேண்டி'(!)... ராமேஸ்வரத்தில் யாகம் நடத்தத் தயாராகி வருகிறது இந்து மக்கள் கட்சி! டிசம்பர் 13-ம் தேதியன்று ஏற்பாடாகி இருக்கும்இந்த யாக நிகழ்ச்சியில்... பழ.நெடு மாறன், ம.நடராஜன், மதுரை ஆதீனம், இலங்கை எம்.பி- யான சிவாஜிலிங்கம், ம.தி.மு.க-வின் அரசியல் ஆய்வுமைய செயலாளர் செந்தில் அதிபன், பெங்க ளூரு ராம்சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் சிறகடிப்பதால், பரபரப்பாகிக் கிடக்கிறது ராமேஸ்வரம். இந்த வினோத வேள்வி குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சரவண னிடம் பேசினோம். ''உலகம் முழுவதும் நடந்த அறப்போராட்டங்களால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமை களை தடுக்க முடியவில்லை. ராஜபக்ஷேயின்இனவெறி யால் இலங்கையில் ஆயிரக்கணக் கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படித்தான் புராண காலத்தில் புத்தநந்தி என்பவர் தலைமையில் புத்த குருமார்கள் ஒன்று கூடி திருஞானசம்பந்தரை கொலை செய்யத் திட்டமிட்டனர். அவர் களின் தலையில் இடிவிழ வேண்டும் என, ஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தை சம்பந்தர் சரணாலயர் இறைவன் முன் பாடினார். அந்த வேண்டுதல் பலித்து, தப்பெண்ணம் கொண்டிருந்த புத்த குருமார்களின் தலையில் இடி விழுந்து அவர்களை அழித்தது. அதுபோல இலங்கை தமிழர்களின் உயிர்பலிக்குக் காரணமான ராஜபக்ஷேயின் தலையில் இடிவிழ வலியுறுத்தி 'தமிழ் திருமுறை ஞானவேள்வி' நடத்துகிறோம். பிறகு, இலங்கையில் அல்லல்படும் தமிழர்களின் நலனுக்காகவும், அங்கு தனித்தமிழ் ஈழம் மலர வேண்டியும் ராமநாதசுவாமிக்கு புனிதநீர் அபிஷேகம் செய்து இறைவனை இறைஞ்சுகிறோம். இதில் தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் பலரும், தமிழ்ப்பற்று கொண்ட சான்றோர்களும் பங்கேற்கின்றனர். முழுக்க முழுக்கத் தமிழிலேயே நடக்க இருக்கும் இந்த வேள்வியை முடக்க போலீஸ் ஏக கெடுபிடிகளை செய்கிறது. அவற்றையெல்லாம் எதிர்கொண்டு திட்டமிட்டபடி வேள்வியை நடத்தியே தீருவோம்!'' என்றார். சமீபத்தில் இலங்கை அரசின் ஏற்பாட்டின் பேரில் அங்குள்ள கோயில் பூசாரிகளுக்கு வழிபாட்டுப் பயிற்சி அளித்துவிட்டு வந்திருக்கும் பஷி சிவராஜனிடம் பேசினோம். ''இந்து மதத்தில் வேதம், ஆகமம், தாந்திரிகம், பௌராணிகம் ஆகிய நான்கு முறைகளில் இறைவனை வழிபடலாம். அதனடிப்படையில் பௌராணிக முறைப்படி நடக்க இருக்கும் இந்த வேள்விக்கு, இறைவன் நல்ல பலன் தருவார். மக்கள் ஒன்றுகூடி மனமுருகி இறைவனுக்கு விடுக்கும் வேண்டுதலின் பலனாக இலங்கையில் தமிழர்கள் சிங்களர்களுக்கு இணையாக வாழ வழி பிறக்கும். ஆனால், தனிப்பட்ட ஒரு மனிதரின் அழிவுக்காக இந்த வேள்வியை பயன்படுத்தாமல் இருந்தால் இன்னும் சிறப்பு பெறும்!'' என்றார். தமிழ் திருமுறை ஞானவேள்வி குறித்து மதுரை ஆதீனத்திடம் பேசினோம். ''இலங்கை தமிழர்களின் சுபிட்சத்துக்காக இந்து மக்கள் கட்சியினரால் நடத்தப்படும் வேள்வியில் நானும் பங்கேற்க உள்ளேன். ஆனால், ராஜபக்ஷே அழிய வேண்டும் என்ற வேண்டுதலில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. ஓர் உயிரை பறித்துத்தான் மற்றவர் வாழ வேண்டும் என்பதில் நான் ஏற்புடையவன் அல்ல. எனவே, இலங்கைத் தமிழர்கள் இன்னல்கள் தீர்ந்து இன்புற வாழவேண்டும் என்பதையே இந்த வேள்வியின் மூலம் இறைவனிடம் வேண்டுவேன்!'' என்றார். | ||||
|
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment