தாகா: வங்கதேசத்தை உருவாக்கிய முஜிபிர் ரஹ்மான் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டனர். அவர் கொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் தாமதமாக நீதி கிடைத்தாலும் இந்தத் தீர்ப்பை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
"வங்க பந்து' என்று அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான், 1971ல் பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்தை மீட்டு தனி நாடாக்கினார். பின் அந்நாட்டின் அதிபர் ஆனார்.அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து, 1975, ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஜூனியர் ராணுவ அதிகாரிகள் மத்தியில் வெடித்த புரட்சியின் போது, அவரது மாளிகைக்குள் ஒரு கும்பல் புகுந்து முஜிபுர் ரஹ்மான், அவர் மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மருமகள்கள் உள்ளிட்ட 20 பேரை, சரமாரியாக சுட்டுக் கொன்றது.இச்சம்பவத்தின் போது ரஹ்மானின் மற்றொரு மகளான ஷேக் ஹசீனாவும், இளைய சகோதரி ஷேக் ரெகானாவும் வெளிநாட்டில் இருந்ததால் தப்பினர்.அதன் பின் அந்நாட்டில் அமைந்த அரசு, கலவரத்தில் ஈடுபட்ட அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் உயர்பதவி அளித்தது. சிலர், கட்சிகள் தொடங்கி நடத்தி வந்தனர். முஜிபுர் ரஹ்மானைக் கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு அளிக்க வகை செய்யும் சட்டமும் கொண்டுவரப்பட்டது.அச்சட்டத்தின் கருணையால் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வந்தனர். 1998ல் தாகா கோர்ட், முஜிபுர் கொலை வழக்கில் 15 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில் நான்கு பேர் மட்டும் உள்நாட்டில் இருந்தனர். மற்றவர்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்குத் தப்பியோடிவிட்டனர்.
இந்நிலையில், 2001ல் பேகம் கலீதா ஜியா ஆட்சி அமைந்தவுடன், பல்வேறு காரணங்களைக் கூறி வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. 2007ல் அதுவரை கிடப்பில் போடப்பட்ட வழக்குத் திரும்பவும் தூசி தட்டப்பட்டது. 2008ல் குற்றவாளிகளுள் ஒருவரை அமெரிக்கா, வங்கதேசத்திடம் ஒப்படைத்தது.இதற்கிடையில், 2009ல் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐந்து முன்னாள் ராணுவ அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் செய்திருந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது.இதையடுத்து, முஜிபுர் மகள் ஷேக் ஹசீனா, 2009 தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைத்தார். வழக்கை விரைவுபடுத்தினார். நேற்று முன்தினம் குற்றவாளிகளின் மறுபரிசீலனை மனுவை மீண்டும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்த சில மணி நேரங்களில், முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஜெயிலுக்கு முன் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, தண்டனையை உடனே நிறைவேற்றும்படி கோஷமிட்டனர். தாகா மத்திய சிறை மற்றும் காசிம்பூர் சிறைகளைச் சேர்ந்த ஏழுபேர் கொண்ட குழு, தண்டனையை நிறைவேற்றியது.பின் ஐந்து ஆம்புலன்சுகளில் கொண்டு வரப்பட்ட உடல்கள், குற்றவாளிகளின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஒருநாட்டின் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 35 ஆண்டுகளுக்குப் பின் தாமதமாக கிடைத்துள்ள நீதி பற்றி கருத்து கூறிய சில வக்கீல்களும் அரசியல் ஆய்வாளர்களும், "முஜிபுர் கொலை வழக்கில் தாமதமாக தண்டனை நிறைவேற்றப்பட்டாலும், இது நீதியிடம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தக்கவைத்துள்ளது. மேலும் சட்டத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பலப்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தனர்.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment