தெலுங்கானாவுக்காக எப்போது தலையை வெட்டிக் கொள்ளப் போகிறீர்கள்?- மாணவர்கள் கேள்வியால் சந்திரசேகரராவ் அதிர்ச்சி
நகரி, ஜன. 20-
தெலுங்கானா தனி மாநிலம் கோரி முன்னாள் மத்திய மந்திரி சந்திரசேகரராவ் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசு சார்பில் தனி மாநிலம் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
அவரது உண்ணாவிரதத்தை காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால், நாடகம் என்றும், உடலில் வைட்டமின் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினால் 30 ஆண்டு வரை உயிருடன் இருக்கலாம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு தெலுங்கானா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகரராவ் கூறும்போது, தெலுங்கானா தனி மாநிலம் தராவிட்டால் நான் தலையை வெட்டி தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் நேற்று தெலுங்கானாவுக்காக தீக்குளித்து இறந்து போன மாணவர் வேணுகோபாலுக்கு அஞ்சலி செலுத்த ஐதராபாத் உஸ்மானி பல்கலைக்கழகத்திற்கு சந்திரசேகரராவ் சென்றார்.
அஞ்சலி செலுத்திய பிறகு அவர் மாணவர்களிடம், தெலுங்கானா எனது உயிர். அது கிடைக்காவிட்டால் உயிர் துறப்பேன். தெலுங்கானா மக்களுக்காக எந்த தியாகமும் செய்யத்தயார் என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எழுந்த 2 மாணவர்கள், தெலுங்கானாவுக்காக தலையை வெட்டி தற்கொலை செய்வேன் என்று தொடர்ந்து கூறி வருகிறீர்கள். எப்போது உங்கள் தலையை வெட்டிக் கொள்ளப்போகிறீர்கள்? என்பதை எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள் என்று கேட்டனர்.
இதை கேட்டதும் சந்திரசேகரராவ் கடும் அதிர்ச்சி அடைந்தார். மாணவர்கள் தன்னிடம் இப்படி ஒரு இக்கட்டான கேள்வியை கேட்டு விட்டார்களே என்று நொந்து போனார்.
பின்னர் சற்று சுதாரித்த படி, தற்போது எனக்கு தெலுங்கானா போராட்டத்தை தலைமை தாங்கி நடத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இது தெரிந்தும் மாணவர்கள் குழப்பமான கேள்விகளை கேட்டு போராட்டத்தை திசை திருப்பி விடக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து மாணவர்கள் கேள்வி கேட்க முயன்ற போது, எனக்கு அவசர வேலை இருக்கிறது என்று கூறியபடி வேகமாகச்சென்று காரில் ஏறி பறந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்திரசேகரராவ் மகன் தாரக்ராமாராவ் எம்.எல்.ஏ., மருமகன் ஹரீஷ்ராவ் எம்.எல்.ஏ. உள்பட 5 எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஆந்திர சபாநாயகர் கிரன்குமார் ரெட்டியை முற்றுகையிட்டனர். பின்னர் அவரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொள்ளும்படி கூறினர். அதன் பிறகு வெளியே வந்த அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment