புதுதில்லி, ஜன.10: உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 88-வது இடம் கிடைத்துள்ளது. இதில் பிரான்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச சுற்றுலா வாரஇதழ் ஒன்று மக்களின் வாழ்க்கைத் தர அடிப்படையில் 2010-ம் ஆண்டின் சிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பிரான்ஸ் முதலிடம் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. அமெரிக்கா 7-வது இடத்தில் உள்ளது. உலகின் 194 நாடுகளை, 8 பிரிவுகளில் வகைப்படுத்தி 30-வது ஆண்டாக இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வாழ்வாதாரம், கலாசாரம், பொருளாதாரம், சுகாதாரம், உள்கட்டமைப்பு, பருவநிலை போன்றவை முக்கிய அம்சமாக கொள்ளப்படுகிறது.
இவை அனைத்திலும் இந்தியாவுக்கான புள்ளிகள் அதிகரித்துள்ளன. வாழ்வாதார பிரிவில் இந்தியா 65 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும். வாழ்வாதாரம் அதிகம் தேவைப்படும் நாடுகளில் இராக் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்திலும் உள்ளன.
இப்பிரிவில் பூடான், பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பர்மா ஆகிய நாடுகள் முறையே 80, 56, 65, 73, 64, 63, 75 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இடர் மற்றும் பாதுகாப்பு பிரிவில் பூடான், மாலத்தீவுகள் உள்ளிட்ட 55 நாடுகள் 100 புள்ளிகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளன. ஆனால், இராக், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இப்பிரிவில் பூஜ்ஜியம் புள்ளிகளையே பெற்றுள்ளன.
இதில் இந்தியா மற்றும் நேபாளம் 64 புள்ளிகளையும்,இலங்கை 71 புள்ளிகளையும், பர்மா மற்றும் வங்கதேசம் 57 புள்ளிகளையும் பெற்றுள்ளன. அனைத்துப் பிரிவுகளிலும் அதிக புள்ளிகளைப் பெற்று சிறந்த நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. தொடர்ந்து 5-வது ஆண்டாக இப்பெருமையை பிரான்ஸ் பெற்று வருகிறது. இதில் 88-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
அரசின் பல்வேறு வகையான புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து தான் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
source:dinamani
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment