சிட்டகாங்கில் நடந்து வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றிருந்தாலும், இது மிகச் சிறப்பான வெற்றியாக கருத முடியாது. காரணம், முதல் இன்னிங்ஸில் இந்தியா ரன் சேர்க்க மிகக் கடுமையாக போராடியது.
முன்னணி பேட்ஸ்மேன்கள் சட் சட் என அவுட் ஆகிப் போக சச்சின் புண்ணியத்தால் இந்தியா 243 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை இழந்தது.
வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்தியாவை வெறும் 2 வங்கதேசப் பந்து வீச்சாளர்கள் மட்டும் மொத்தமாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆடிய வங்கதேச அணி 242 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்தியா தனது 2வது இன்னிங்ஸில், 413 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
மிகப் பெரிய வெற்றி இலக்கைத் துரத்தத் தொடங்கிய வங்கதேசம் தடுமாற்றத்துடன் தனது துரத்தலைத் தொடங்கியது.
இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. காரணம், வங்கதேச விக்கெட் கீப்பர், முஷ்பிகர் ரஹீம் போட்ட அபார சதம்தான். சிறப்பாக ஆடிய ரஹீம் 101 ரன்களைக் குவித்தார்.
மற்ற வீரர்களில் தமீம் இக்பால் 52 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
ரஹீமீன் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படவில்லை, மாறாக தாமதப்பட்டது.
இறுதியில் 301 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது வங்கேதசம்.
இதன் மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்தியத் தரப்பில், மிஸ்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இவர் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 3, ஜாகிர் கான் 2 விக்கட்களை சாய்த்தனர். ஷேவாக்குக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
No comments:
Post a Comment