மார்க்சிஸ்ட் ஜோதிகளில் ஒன்று மறைந்துவிட்டது! ஐந்து முறை மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராகத் தொடர்ந்து 23 1/2 ஆண்டு காலம் இருந்து, பழுத்த பழமாக 95 வயது வரை வாழ்ந்த ஜோதிபாசு, வாழ்ந்த காலம் முழுவதும் அனல் கிளப்பும் ஜோதிதான்! பள்ளிப் பையனாக இருந்தபோது, நேதாஜியின் கூட்டத்துக்குப் போகலாம் என நண்பன் ஒருவன் அழைத்தான். 'போனால், போலீஸ் அடிக்கும். அடி வாங்க உனக்குத் தைரியம் இருந்தால் போகலாம். ஓடக் கூடாது!' என்று நிபந்தனை போட்டார் ஜோதிபாசு. எதிர்பார்த்தது மாதிரியே அடி விழுந்தது. வாங்கினார். இவ்வளவு அடிவாங்கும் அளவுக்குப் பையனுக்கு நெஞ்சழுத்தம் இருந்தது குடும்பத்தினருக்கு அதிர்ச்சி! கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது, இவரது போராட்ட வேகம் இன்னும் அதிகமானது. பையனது எண்ணத்தை மாற்ற, லண்டனுக்கு ஹானர்ஸ் படிக்க அனுப்பினார்கள். ஆனால், அங்குதான் இவர் கம்யூனிஸ்ட்டாக மாறினார். 'லண்டன் மஜ்லிகள்' என்ற அமைப்பு மூலமாக இந்திய விடுதலைக்கு லண்டனில் ஆதரவு திரட்டினார். இந்தியா போனதும் கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைக்க வேண்டும் என்று சத்தியம் செய்துவிட்டே புறப்பட்டு வந்தார். வீட்டில் இருந்து ஒரே ஒரு பையை மட்டும் எடுத்துக்கொண்டு, வங்காளத்தின் மொத்தத்தையும் தனது பயணத்தால் அளந்தார். அவர் போகாத இடம் இல்லை, சந்திக் காத தொழிற்சங்கம் இல்லை என்று பெயர் வாங்கி னார். கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக அந்த மாநிலம் ஆனதற்கு ஜோதிபாசுவின் அந்தக் காலத்து உழைப்புதான் காரணம். கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமாக ஆனபோது, "1982 முதலே நடுத்தரவர்க்கத்தினர் இடையே எங்களுக்கு இருந்த ஆதரவு மெதுவாக வலு இழக்கத் துவங்கிவிட்டது. நிர்வாகத்தில் பல துறைகளில் நாங்கள் தோல்வியைச் சந்தித்தோம். சில நேரங்களில் எங்களது திருப்தியான மனப்பான்மை, எரிச்சலூட்டும் நடத்தை (பெரிய அளவில் இல்லாவிட்டாலும்), ஊழல் ஆகியவை எங்களைப் பலவீனப்படுத்திவிட்டது!' என்று பகிரங்கமாக விமர்சித்தவர் ஜோதிபாசு. மார்க்சிஸ்ட் மனிதராக இருந்தாலும், அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட்டார். 96 தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா இல்லாத கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி அமைத்தபோது, பிரதமர் பதவி ஜோதிபாசுவுக்காக அனைவராலும் மனப்பூர்வமாகத் தரப்பட்டது. ஆனால், மார்க்சிஸ்ட்டுகள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். "கட்சியின் முடிவை ஏற்பதுதான் உறுப்பினரது கடமை" என்று அமைதியாகிவிட்டார் பாசு. அதன் பிறகு மேற்கு வங்க முதல்வர் பதவியையும் யாரும் கேட்காமல் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு விட்டுக்கொடுத்தார். "என்னால் வயதைக் குறைத்துக்கொண்டு வாழ முடியாது" என்று ஒரு வரியில் விளக்கம் சொன்னார். "நமது நாட்டில் சாதாரண, எளிய மக்களின் ஆட்சி என்பது இன்னமும் கைக்கெட்டாத கனவாகத்தான் நீடிக்கிறது" என்பது அவரது ஏக்கமாக இருந்தது. உயிர் தாங்கிய உடல் நாட்டுக்குப் பயன்பட்டதுபோலவே தனது உயிரற்ற சடலமும் பயன்பட வேண்டும் என்று உடல்தானம் செய்த ஜோதிபாசு... நிஜ காம்ரேட்! |
No comments:
Post a Comment