வாஷிங்டன்:அமெரிக்க, "போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிர்வாகம்' (டி.எஸ்.ஏ.,) காட்டும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு தெற்காசிய நாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.கடந்த டிச., 25ம் தேதி, அமெரிக்க விமானத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்க முயன்ற நைஜீரிய நாட்டு பயங்கரவாதியின் கைதுக்குப் பிறகு, அமெரிக்காவின், "போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிர்வாகம்' (டி.எஸ்.ஏ.,) பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளது.
குறிப்பாக அந்நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில், ஒருவரின் உடல் மற்றும் அவரது பொருட்கள் அனைத்தையும் ஊடுருவி ஸ்கேன் செய்யும் புதிய கருவியையும் விமான நிலையங்களில் அமெரிக்கா பொருத்தியுள்ளது.
இந்த விஷயத்தில் இஸ்ரேல் பின்பற்றும் நடைமுறைய அமெரிக்கா பின்பற்றவும் உரிய நடைமுறைகள் வகுக்கப்படுகின்றன.தற்போது அமலாகியிருக்கும் இப்புதிய முறையின் மூலம், ஆப்கன், அல்ஜீரியா, கியூபா, ஈராக், ஈரான், லெபனான், லிபியா, நைஜீரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 14 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மட்டும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து இந்நாடுகளில் உள்ள சாயா சி.டி.சி., மைத்ரி, சக்தி பியர் குழுமம், சீக்கியக் கூட்டமைப்பு, தெற்காசிய அமெரிக்கர்களின் முன்னணி, தெற்காசியர்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய சீக்கியர்கள் உள்ளிட்ட அமைப்புகள் கூட்டறிக்கை விடுத்துள்ளன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:அமெரிக்காவின் இந்தப் பாதுகாப்பு கெடுபிடி கள், குறிப்பிட்ட மத நம்பிக்கை உள்ள நாடுகளிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வரும் விமானப் பயணிகளிடையே இன,மத வேறுபாடுகளைப் புகுத்துவதாக உள்ளன. குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மை நாடுகளைக் குறிவைத்துத்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதில் சந்தேகமில்லை.பாதுகாப்பு குறித்த புதிய கொள்கை களை உருவாக்குவதை விடுத்து, இன, மத மற்றும் நாடுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவை, இந்நாடுகளின் மீது ஏற்கனவே இருக்கும் தவறான அபிப்பிராயங்களை அதிகரிக் கச் செய்யும். அது மட்டுமில்லாமல், பாதுகாப்புக்கு இடையூறு செய்யும். அமெரிக்காவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். இவை மனித உரிமை மற்றும் சமத்துவத்துக்கு எதிரானவை.அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள், 2001, செப்., 11ல் இருந்தே தொடங்கிவிட்டன.
பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டுமானால் இதுபோன்ற நடவடிக்கைகளை சார்ந்திராமல், மேம்படுத்தப்பட்ட கொள்கைகளை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்தும் வழியைப் பார்க்க வேண்டும்.இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment