மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில் இதனைத் தன் சிஸ்டம் கூட்டாளிகளான எச்.சி.எல்., எச்.பி. மற்றும் ஏசர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.
புதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டன. இதன் சோதனைத் தொகுப்பினை, இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில் இல்லாத வகையில், 80 லட்சம் பேர் உலகின் பல நாடுகளில் சோதனை செய்தனர். அவர்கள் அளித்த அறிவுரைகளுக்கேற்ப இவற்றில் இருந்த பல பிரச்னை களுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. இதற்கு முன் வெளிவந்த விஸ்டா சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் இடம் பெறாமல் போவதற்குப் பல காரணங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பல புதிய கூடுதல் வசதிகளை விஸ்டா எதிர்பார்த்ததால், பலர் தங்களின் கம்ப்யூட்டர்களை 2001ல் வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயக்கி வந்தனர். இதனை மனதில் கொண்டே விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டது.
விண்டோஸ் 7 அதன் பாதுகாப்பிற்கென பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், இனி இதற்கென பிற நிறுவனங்கள் அமைத்து வழங்கும் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவையில்லை எனப் பல நிறுவன வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால், முதலீடு செலவு கணிசமாகக் குறையும். இதனைச் சோதனைக்கென பயன்படுத்திப் பார்த்த பெங்களூரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது.
அவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றில் எது நம் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும் எனக் கண்டறிந்து அறிவதே, தற்போதைய கேள்வியாக பலருக்கு உள்ளது. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ.11,000 வரை உள்ளது. இந்த சிஸ்டம் இயக்கத்திற்குத் தயாராகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சுவிட்சை ஆன் செய்துவிட்டு தயாராகும் நேரத்தில், டீயில் பாதி குடிக்கும் வேலை எல்லாம் இனி இருக்காது. இந்த புதிய சிஸ்டத்தில் அனைத்து மல்ட்டி மீடியா வேலைகளும், புதிய முறையில் இனிமை யாகவும் எளிமையாகவும் இயக்கும் முறையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களிலும், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 பதிப்பை பதிந்து தரத் தயாராகிவிட்டன. குறிப்பாக எச்.பி. இந்தியா, எச்.சி.எல்., ஏசர் ஆகியவை இவ்வகையில் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்பி இந்தியா நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை ரூ. 27,990 முதல் ரூ. 90,000 வரையிலான விலையில் அறிவித்துள்ளது. ஏசர் பி.சி. நிறுவனம் ரூ. 15,000 முதல் ரூ.35,000 வரை விலை அறிவித்துள்ளது.
நோட்புக் கம்ப்யூட்டர்கள் ரூ. 21,000 முதல் ரூ.71,000 விலையில் உள்ளன. இனி தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1. இரண்டு வகை சிஸ்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 32 பிட் மற்றும் 64 பிட் ஆகும். இவற்றில் ஸ்டார்ட்டர் எடிஷன் 32 பிட் வகையில் மட்டுமே கிடைக்கிறது.
2. 64 பிட் சிஸ்டம் வகையில் பிசிகல் மெமரி, ஹோம் பிரிமியம் சிஸ்டத்தில் 16 ஜிபி, புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகையில் 192 ஜிபி ஆக உள்ளன. ஸ்டார்ட்டர் எடிஷனில் இது இல்லை.
3.ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் பிரிமியம் வகை ஒரு சிபியு மட்டுமே சப்போர்ட் செய்கிறது. புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகை இரண்டு சிபியுக்களை சப்போர்ட் செய்கிறது.
4. ஹோம் குரூப் உருவாக்கி இணைவது என்ற வசதியைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்டர் எடிஷனில் இணையும் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்ற மூன்றிலும் உருவாக்கி இணையும் வசதி உள்ளது.
5. நெட்வொர்க்கில் பேக்கப் செய்து மீண்டும் பெறுவது புரபஷன்ல் மற்றும் அல்ட்டிமேட் வகைகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது.
6.ஸ்டார்ட்டர் தவிர மற்றவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மானிட்டர் களை இணைக்கலாம்.
7. மாற்றக்கூடிய டெஸ்க்டாப் வால் பேப்பர், டெஸ்க்டாப் விண்டோ மேனேஜர், விண்டோஸ் மொபிலிட்டி சென்டர், விண்டோஸ் ஏரோ, மல்ட்டி டச், பிரிமியம் கேம்ஸ், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயரை ரிமோட்டில் இயக்குவது ஆகியவை ஸ்டார்ட்டர் எடிஷன் தவிர மற்றவற்றில் தரப்பட்டுள்ளன.
8. விண்டோஸ் எக்ஸ்பி மோடில் இயக்கும் வசதி புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் ஆகியவற்றில் மட்டுமே தரப்பட்டுள்ளது.
9. விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க் மூலமாக பூட் செய்திடும் வசதி அல்ட்டிமேட் எடிஷனில் மட்டுமே தரப்பட்டுள்ளது.
விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது, இத்தொகுப்பின் மிக எளிய வகை பதிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து இதற்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பின் புதிய மற்றும் சிறப்பம்சங்களாக நாம் கருதும் பல விஷயங்கள் இதில் கிடைப்பதில்லை. 32 பிட் இயக்கம் மட்டுமே இதில் உள்ளது. விண்டோஸ் மீடியா சென்டர் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் இதில் சேர்க்கப்படவில்லை. எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும் புரோகிராம்களுக்காக, விண்டோஸ் 7 பதிப்பில் எக்ஸ்பி மோட் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. அந்த வசதி ஸ்டார்ட்டர் எடிஷனில் இல்லை. ரிமோட் டெஸ்க்டாப் ஹோஸ்ட், பிட் லாக்கர் டிரைவ் என்கிரிப்ஷன் மற்றும் மல்ட்டி டச் சப்போர்ட் ஆகிய வையும் இதில் தரப்பட வில்லை. அப்புறம் என்ன தான் ஸ்டார்ட்டர் எடிஷனில் உள்ளது என்று கேட்கிறீர் களா? டாஸ்க்பாரில் புரோகிராம்களை பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் விண்டோக்களை மிக வேகமாக ரீசைஸ் செய்து கொள்ளலாம். வேகமாக்கப்பட்ட விண்டோஸ் சர்ச் வசதி உள்ளது.
இதனை அடுத்துள்ள ஹோம் பிரிமியம், கம்ப்யூட்டர்களைப் பரவலாகப் பயன் படுத்துவோருக்கேற்ற ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் என்ன என்ன வசதிகள் புதியதாக இணைக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறதோ, அவை அனைத்தும் இதில் உள்ளன. புரோகிராம்களின் செயல்பாட்டினை முன்கூட்டியே அறிதல், டெஸ்க்டாப் பிலிருந்து தேவையற்ற ஐகான்களை நீக்குதல், புரோகிராம் விண்டோக்களை ரீசைஸ் செய்திடும் ஏரோ ஸ்நாப், ஊடுறுவிப்பார்க்கும் வகையில் டாஸ்க்பாரின் தோற்றம் காட்டும் ஏரோ ஸ்கின் மற்றும் விண்டோ பார்டர்ஸ் ஆகிய அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண்டோஸ் மீடியா சென்டர் ஆகிய வசதிகள் சிறப்பாக இயக்கும் முறையில் தரப்பட்டுள்ளன. ஹோம் குருப் உருவாக்கி ஒரு சிலருக்குள் மியூசிக் சார்ந்த பொழுது போக்கு பைல்களையும் மற்ற பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் 64 பிட் பதிப்பு இருந்தாலும், ராம் பிசிகல் மெமரி 16 ஜிபி வரை மட்டுமே கிடைக்கிறது. ஹோம் பிரிமியம் எடிஷனை எந்த நேரத்திலும் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் எடிஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.
முழுமையான வசதிகள் பல இருந்தாலும், விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் பதிப்புகளில் உள்ள பல வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நெட்வொர்க் டிரைவில் இணைக்கப் பட்டிருக்கையில் பேக் அப் வசதியை இயக்க முடியாது. பிட் லாக்கர், ஆப் லாக்கர் வசதிகள் இல்லை. எக்ஸ்பி மோட் இல்லை.
மற்ற இரண்டும், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. எந்த பிரச்னையும் தடையும் இன்றி பயன்படுத்தலாம்.
விஸ்டாவின் இயக்கத்தினால் ஏமாந்திருந்த விண்டோஸ் வாடிக்கையாளர்கள், நிச்சயம் விண்டோஸ் 7 பதிப்பை மனதார வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இந்த புதிய பதிப்பிற்கு மாறும் முன் உங்கள் சிஸ்டம் இதனைத் தாங்கிக் கொண்டு சிறப்பாக இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனைத் தெரிந்து கொள்வதற்கான புரோகிராம்களையும், வழிமுறைகளையும், மைக்ரோசாப்ட் தன் இணையதளத்தில் கொண்டுள்ளது
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment