லண்டன் : பிரிட்டனில், திருமணம் ஆன இரண்டாவது நாளே கணவனை இழந்த பெண், இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்தவர் கெல்லி போவன்(25). இவரது கணவர், கெவின் போவன். இவருக்கு கடந்த 2006ம் ஆண்டு, திடீரென இடுப்பு எலும்பும் தொடையும் சேரும் இடுக்குப் பகுதியில் கடும் வலி உண்டானது. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ததில், அவருக்கு, அதிசயமாக எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய்க்கான சிகிச்சை மூலம் கெவின் போவன், தந்தையாகும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என, டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே, புற்று நோய்க்கான "கீமோ தெரபி' என்ற கதிர்வீச்சு சிகிச்சை துவங்குவதற்கு முன், டாக்டர்கள் கெவின் போவனின் விந்தணுவை சேகரித்து, உறைய வைத்து பாதுகாத்தனர்.
கடந்த 2007ம் ஆண்டு, செயற்கை கருத்தரிப்பு முறையில், கெல்லி போவன் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஷாய் என்று பெயரிட்டனர். இதற்கிடையில், கெவின் போவனுக்கு புற்றுநோய், நுரையீரல் வரை பரவியது. அதுவரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த இருவரும், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடைபெற்ற இரண்டாவது நாள், கெவின் போவன் காலமானார். கெவின் போவன் காலமாகி இரண்டாண்டுகள் ஆன நிலையில், தற்போது, கெவின் போவனின் உறைய வைக்கப்பட்ட விந்தணுக்களைப் பயன்படுத்தி, செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இதுகுறித்து கெல்லி போவன் கூறியதாவது: புத்தாண்டை ஒட்டி, எனக்கு ஆண் மற்றும் பெண் என, இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குழந்தைகளுக்கு சேசீ மற்றும் ரூபி என பெயரிடப்பட்டுள்ளது. கெவின் இறப்பதற்கு முன்னரே, எங்கள் முதல் பையன் ஷாய்க்கு தங்கை அல்லது தம்பி வேண்டும் என தீர்மானித்தோம். ஆனால், அவர் விரைவில் இறந்துவிட்டார். அதன் பின், செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானித்தேன். முதல் இரண்டு முறை செயற்கை கருத்தரிப்பு முறை முயற்சித்த போது வெற்றி பெறவில்லை. மூன்றாவது முறையே வெற்றி கிடைத்து, தற்போது இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளன. இவ்வாறு கெல்லி போவன் கூறினார்.
No comments:
Post a Comment