Monday, January 18, 2010

சச்சின் சதம்: இந்தியா பதிலடி

  

சிட்டகாங்: சிட்டகாங்கில் நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் சச்சின், சதம் அடித்து ஜொலித்தார். இந்திய அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. "டாப் ஆர்டர்' பேட்ஸ்மேன்களை விரைவில் இழந்துள்ள வங்கதேச அணி, முதல் இன்னிங்சை திணறலுடன் துவக்கியுள்ளது. 


வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சிட்டகாங், ஜோகர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் சேவக் (52), சச்சின் அரைசதத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து இருந்தது. சச்சின் (76), இஷாந்த் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
முதல் நாள் போன்று, இரண்டாம் நாளான நேற்றும் காலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போட்டி ஒன்றரை மணி நேரம் தாமதமாக துவங்கியது. 


சச்சின் சதம்: தனது முந்தைய நாள் ஸ்கோருடன் மேலும் ரன்எதுவும் சேர்க்காத நிலையில், இஷாந்த் சர்மா (1) வீழ்ந்தார். தொடர்ந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஹுசைனின் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து சதம் கடந்தார். இது சர்வதேச டெஸ்ட் அரங்கில் சச்சின் எடுத்த 44 வது சதம். 


இந்தியா "ஆல் அவுட்': சச்சினுடன் இணைந்த ஸ்ரீசாந்த், சற்று தாக்குப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரும் (1) சாகிப் அல் ஹசன் சுழலில் சிக்கி வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சச்சின் 105 ரன்னுடன் (2 சிக்சர், 11 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.
வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன், வேகப்பந்து வீச்சாளர் சகாதத் ஹுசைன் இருவரும், தலா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.


சூப்பர் துவக்கம்: பின் முதல் இன்னிங்சை துவங்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், இம்ருல் கெய்ல் இருவரும் "சூப்பர்' துவக்கம் கொடுத்தனர். ஜாகிர் கானின் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரி அடித்து மிரட்டினார் தமிம் இக்பால். இம்ருல் கெய்ஸ், தன்பங்குக்கு 2 பவுண்டரி அடித்து ஜாகிரை பதம் பார்த்தார். 


ஜாகிர் அபாரம்: முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில், ஜாகிர் பந்தில் இம்ருல் கெய்ஸ் (23) அவுட்டானார். அடுத்து வந்த நபீஸ் (4) இஷாந்த் சர்மாவின் வேகத்துக்கு பலியானார். அதிரடியில் அசத்திய தமிம் இக்பாலை (31) ஜாகிர் போல்டாக்கினார். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்து திணறத்துவங்கியது. 
இந்நிலையில் அதிக பனி மூட்டத்தால் வெளிச்சமின்மை ஏற்பட, போட்டி நிறுத்தப்பட்டது. 


இந்தியா பதிலடி: முதல் நாளில் பேட்டிங்கில் சொதப்பி, குறைந்த ஸ்கோரை பதிவு செய்த இந்திய அணி, நேற்று பவுலிங்கில் அசத்த துவங்கியுள்ளது. வங்கதேசத்தின் "டாப் ஆர்டர்' வீரர்களை வெளியேற்றிய நமது பவுலர்கள், இன்று "மிடில் ஆர்டரையும்' உடனடியாக சிதறச் செய்தால், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும். 
------


நேற்றைய துளிகள்...
*இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக நேற்று தனது குறைந்தபட்ச ஸ்கோரை (243) பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 2000ல் நடந்த தாகா டெஸ்டில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. 
*வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் 6 வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். 
* வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் சகாதத் ஹுசைன் 3 வது முறையாக 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
* இந்தியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (53) குவித்த ஜோடி என்ற பெயரை தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் தட்டிச் சென்றனர். இதற்கு முன்பு கடந்த 2005ல் நடந்த டெஸ்டில் நபீஸ் இக்பால், ஜாவெத் ஓவர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்து இருந்தனர்.
----


சச்சின் சாதனை சதம்
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நேற்று சர்வதேச டெஸ்ட் அரங்கில் 44வது சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிக சதம் எடுத்த வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (39) உள்ளார்.


-------


வீணான நேரம்
 சிட்டகாங்கில் நடக்கும் முதல் டெஸ்டில் பனிமூட்டத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் முதல் நாளில், 70 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட போட்டி, நேற்றும் 269 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. நேற்று 24.5 ஓவர்கள் தான் வீசப்பட்டது. கடந்த இரண்டு நாளில் 180 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில், 88 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டுள்ளது. அதாவது சுமார் 6 மணி நேர (339 நிமிடம்) ஆட்டம் பனியின் காரணமாக பாதித்துள்ளது.
----


அதிக ரன்கள் எடுப்போம்
போட்டி குறித்து வங்கதேச அணியின் பயிற்சியாளர் ஜமை சிட்டன்ஸ் கூறுகையில்,"" இந்திய அணியின் "டெயிலெண்டர்களை' விரைவாக வெளியேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் 3 பேட்ஸ்மேன்களை விரைவாக இழந்தாலும், மீதமுள்ள வீரர்கள் இன்று சிறப்பாக பேட்டிங் செய்து அதிக ரன்கள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார். 
---------------


பவுலிங் செய்த தோனி
முதுகு வலியால் இந்திய கேப்டன் தோனி வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. நேற்று வெளிச்சமின்மையால் போட்டி நிறுத்தப்பட்ட போது, மைதானத்தில் தோனி, பவுலிங் பயிற்சி செய்தார். இந்திய வீரர்கள் காம்பிர், சேவக் இருவருக்கும் பந்து வீசினார். வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இவர் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
---


ஸ்கோர்போர்டு


முதல் இன்னிங்ஸ்


இந்தியா
காம்பிர்(கே)முஷ்பிகுர்(ப)ஹுசைன் 23(44)
சேவக்(கே)தமிம் இக்பால்(ப)சாகிப் 52(51)
டிராவிட்(ப)ஹுசைன் 4(10)
சச்சின்--அவுட் இல்லை- 105(166)
லட்சுமண்(ஸ்டம்டு)முஷ்பிகுர்(ப)சாகிப்  7(30)
யுவராஜ்(கே)ரூபல் ஹுசைன்(ப)சாகிப்  12(31)
கார்த்திக்(கே)ரகிபுல் ஹசன்(ப)ஹுசைன் 0(3)
அமித் மிஸ்ரா-எல்.பி.டபிள்யு.,(ப)ஹுசைன் 14(41)
ஜாகிர்(கே)ரகிபுல் ஹசன்(ப)சாகிப் 11(18)
இஷாந்த்(கே)முஷ்பிகுர்(ப)ஹுசைன் 1(24)
ஸ்ரீசாந்த்(கே)இம்ருல்(ப)சாகிப் 1(12)
உதிரிகள் 13
மொத்தம் (70.5 ஓவரில் ஆல் அவுட்) 243


விக்கெட் வீழ்ச்சி: 1-79(சேவக்), 2-79(காம்பிர்), 3-85(டிராவிட்), 4-107(லட்சுமண்), 5-149(யுவராஜ்), 6-150(கார்த்திக்), 7-182(அமித் மிஸ்ரா), 8-209(ஜாகிர்), 9-230(இஷாந்த்), 10-243(ஸ்ரீசாந்த்).


பந்து வீச்சு: சபியுல் இஸ்லாம் 9-1-41-0, ஹுசைன் 18-2-71-5, ரூபல் ஹுசைன் 10-0-40-0, சாகிப் 29.5-10-62-5, மகமதுல்லா 3-0-17-0, அஷ்ரபுல் 1-0-5-0.


வங்கதேசம்
தமிம் இக்பால்(ப)ஜாகிர் 31(45)
இம்ருல்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 23(46)
நபீஸ்(கே)லட்சுமண்(ப)இஷாந்த் 4(3)
அஷ்ரபுல்--அவுட் இல்லை- 0(5)
ரகிபுல் ஹசன்-அவுட் இல்லை- 1(3)
உதிரிகள் 0
மொத்தம் (17 ஓவரில் 3 விக்.,) 59


விக்கெட் வீழ்ச்சி: 1-53(இம்ருல்), 2-58(நபீஸ்), 4-58(தமிம் இக்பால்).


பந்துவீச்சு: ஜாகிர் கான் 9-1-32-2, ஸ்ரீசாந்த் 3-0-13-0, இஷாந்த் 5-1-14-1.


latest score:BAN 154/6 in 43.1 Overs

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails