ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் வந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியர் ரெம்கோ சுனோய்ஷ், ராம்தாஸ் என பெயர் மாற்றம் செய்து இந்து மதத்துக்கு மாறினார். நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ரெம்கோ சுனோய்ஷ்(27). அந் நாட்டில் வரலாறு ஆசிரியராக பணியாற்றும் இவர், இந்து மதசம்பிரதாயங்களின் மீது பற்று ஏற்பட்டதால், கிறிஸ்தவ மதத்திலிருந்து மாறி, இந்து மதத்தை பின்பற்ற விரும்பினார். இதை தொடர்ந்து , கடந்த டிசம்பரில் இந்தியா வந்த இவர், தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு சென்று விட்டு ராமேஸ்வரம் வந்தார். நேற்று மாலை அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய இவர், இதன் அருகில் அமைந்துள்ள காஞ்சி சங்கர மடத்தில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், முறைப்படி இந்துவாக மாறினார். இந்துமத சம்பிரதாயப்படி அவருக்கு சடங்குகள் செய்து ராம்தாஸ் என பெயரும் சூட்டப்பட்டது. இதன் பின் ராமநாதசுவாமி கோயில் சென்று சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அவர் கூறியதாவது: இந்துமத சம்பிரதாயங்கள், கலாசாரம், ஆன்மிக விசயங்களில் நீண்ட நாட்களாக ஈடுபாட்டுடன் இருந்தேன். இதற்கு முன் இரண்டு முறை இந்தியா வந்துசென்றபோதும், இந்து மதத்திற்கு மாறுவதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இன்று, ராம்தாஸ் என்ற பெயருடன் நான் இந்துவாக மாறியதில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இந்துவாக மாறியபின் முதன்முதலில், ராமநாதசுவாமியை தரிசனம் செய்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம், என்றார்.
No comments:
Post a Comment