போர்ட் ஆப் பிரின்ஸ் : ஹைதி தீவில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தலைநகர் போர்ட் ஆப் பிரின்சில் எங்கு பார்த்தாலும் பிணக்குவியலாக காட்சியளிக்கிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களின் மரண ஓலம் எங்கும் ஒலிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா உட்பட உலக நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன.
அமெரிக்கா அருகே கரீபியன் கடல் பகுதியில் உள்ளது ஹைதி தீவு. அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பூகம்பம் அந்த தீவையே இடுகாடாக்கி விட்டது. சில விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகள் பதிவானது. வீடுகளும் கட்டிடங்களும் சீட்டுக் கட்டுகளைப் போல இடிந்து விழுந்தன. நிலைமையை புரிந்து கொள்வதற்கு முன்பே இடிபாடுகளில் சிக்கி மக்கள் பலியாயினர். பூகம்பத்தில் 50 ஆயிரம் பேர் வரை பலியாகியிருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி விட்டதாக தெரிய வந்துள்ளது.
தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து கிடக்கிறது. அதிபர் ரினி பிரிவலின் அரண்மனை, ஐ.நா. சபையின் 5 மாடி கட்டிடம், உலக வங்கி கட்டிடமும் தப்பவில்லை. இடிபாடுகளில் மேலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஹைதியில் போதுமான அளவுக்கு மீட்பு கருவிகள் இல்லை. மீட்பு பணியில் ஈடுபட வேண்டிய அதிகாரிகள், பூகம்பத்தில் சிக்கிய தங்கள் உறவினர்களை தேடச் சென்றுவிட்டனர். இதனால் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியவில்லை. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் அழுகுரலும் மரண ஓலமும் தலைநகர் முழுவதும் எதிரொலிக்கிறது.
பூகம்பம் ஏற்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே, சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. போர்ட் ஆப் பிரின்சில் சாலைகள் பிணக்குவியலாக காட்சி அளிக்கின்றன. காணமல் போன உறவினர்கள் இறந்து விட்டார்களா என்பதை அறிய சாலையில் கிடக்கும் பிணங்களை மக்கள் கதறி அழுதபடி பார்த்து அடையாளம் காண்கின்றனர். பிணங்களை புல்டோசர்கள் மூலம் அள்ளிச் சென்று குவியலாக புதைக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு திணறல்: போர்ட் ஆப் பிரின்ஸ் உட்பட ஹைதி தீவு முழுவதும் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் தங்கியுள்ளனர். மீட்பு பணிக்கே போதுமான வசதிகளும் ஆட்களும் இல்லாத நிலையில், வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க யாரும் இல்லை. ஆத்திரம் அடைந்த மக்கள் உணவு, குடிநீர் கேட்டு போர்ட் ஆப் பிரின்சில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவதா? அல்லது வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதா? என்று தெரியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.
உதவிக்கரம்: மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக அமெரிக்கா, இந்தியா, சீனா உட்பட உலக நாடுகள் ஹைதிக்கு உதவ முன்வந்துள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நிவாரணப் பொருட்களுடன் விமானம் தாங்கி கப்பல் ஒன்று ஹைதி விரைகிறது. இந்த கப்பல் ஹைதியில் தற்காலிக விமான நிலையமாக செயல்பட உள்ளது. மேலும் பல கப்பல்கள், விமானங்கள் மூலம் குடிநீர், உணவு உட்பட நிவாரணப் பொருட்களை அனுப்பவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஹைதி மக்களுக்கு ரூ.500 கோடி மதிப்பிலான உதவிகளை செய்ய ஐ.நா. சபை முடிவு செய்துள்ளது
source:dinakaran
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment