Sunday, January 10, 2010

மாதம் தோறும் குழந்தையின் வளர்ச்சி!

 
  

பிறந்த குழந்தையானது முதல் மாதத்திலிருந்து பன்னிரண்டாவது மாதம் வரை அதாவது ஒரு வருடம் வரை படிப்படியாக எப்படி, என்ன வளர்ச்சிகளைக் காண்கிறது தெரியுமா? இதை குழந்தை பெற்ற பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் மாதம்

பிறந்த குழந்தையை தூக்கும் போது, அதன் தலை நேராக நிற்காமல் விழும் தலையோடு சேர்த்து தூக்க வேண்டும். அதை குப்புறப் படுக்க வைத்தால், அதன் இடுப்பு, கைகள் மற்றும் கால்களைவிட சற்று உயரத்தில் இருக்கும். அதன் உள்ளங்கையைத் தொட்டால், கைகளை மூடிக் கொள்ளும்.

இரண்டாம் மாதம்

கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ளும், இடுப்புப் பகுதியைக் கீழே வைத்துக் கொள்ளும்.

மூன்றாவது மாதம்

உட்கார வைக்கும் போது தலை லேசாக நிற்கும். கட்டை விரலை வாயில் வைத்து சூப்ப ஆரம்பிக்கும்.

நான்காவது மாதம்

தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கும். நிற்க வைக்க இந்த மாதம் முதல் பழகலாம். கைகளில் எதையாவது கொடுத்தால் பிடித்துக் கொள்ளும்.

ஐந்தாவது மாதம்

உட்கார வைக்கும் போது தலையையும் நெஞ்சையும் உயர்த்தும்.

ஆறாம் மாதம்

எதையாவது அல்லது யாரையாவது பிடித்துக் கொண்டு அதனால் உட்கார முடியும். பிடிமானம் விடுபட்டால் கீழே விழும். முன்னங்கைகளைத் தரையில் அழுத்தமாக ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்கும்.

ஏழாம் மாதம்

பிடிமானமில்லாமல் உட்காரக் கற்று கொள்ளும். உடலின் எடையில் ஒரு பகுதியைக் கால்களில் தாங்கியபடி நிற்கும். தனது கைகளை உபயோகிக்கக் கற்று கொள்ளும்.

எட்டாம் மாதம்

கொஞ்சம் தடுமாற்றமின்றி நன்றாகவே உட்காரும். உடலின் மொத்த எடையையும் தன் கால்களில் தாங்கியபடி நிற்கப் பழகும். டம்ளர், பால் பாட்டில் போன்றவற்றைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளும்.

ஒன்பதாம் மாதம்

பத்து நிமிடங்கள் வரை தடுமாறாமல் உட்கார முடியும். எதையாவது பிடித்தபடி நிற்க ஆரம்பிக்கும். சின்னச் சின்னப் பொருட்களை ஒன்றாகக் குவிக்கக் கற்றுக் கொள்ளும்.

பத்தாம் மாதம்

முன் பக்கமாகச் சாய்ந்து அங்கே கிடக்கும் பொருட்களை எடுக்கும். கைகளை ஊன்றியபடி தரையில் தவழ ஆரம்பிக்கும். எதையாவது பிடித்தபடி ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு நகரும். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டக் கற்றுக் கொள்ளும்.

பதினோராம் மாதம்

உட்கார்ந்த நிலையில் உடலைத் திருப்ப அதனால் முடியும். முழங்கால்களைத் தரையில் ஊன்றியபடி தவழ ஆரம்பிக்கும். நேராக நிற்கக் கற்றுக் கொள்ளும். ஆட்காட்டி விரலால் தரையில் எதையாவது எழுதுகிற மாதிரிச் செய்யும்.

பன்னிரண்டாம் மாதம்

கைகளையும், கால்களையும் உபயோகித்தபடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகரும். ஒரு கையில் மட்டும் பிடிமானம் இருந்தாலும் கூட ஸ்திரமாக நிற்கப்பழகும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக் கொள்ளும்.

 source:dinakaran


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails