புதுடில்லி : ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலை புலித் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்து எட்டு மாதங்களாகியும், அவரின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடம் இருந்து இன்னும் சி.பி.ஐ.,க்கு வந்து சேரவில்லை.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில், புலிகளின் தற்கொலை படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் புலித் தலைவர் பிரபாகரனும் முக்கிய குற்றவாளியாக இடம் பெற்றிருந்தார். ஆனால், அவரைப் பிடித்துக் கொண்டுவர முடியவில்லை என்பதால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இலங்கையில் ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் புலித்தலைவர் பிரபாகரன், எட்டு மாதங்களுக்கு முன், கொல்லப்பட்டார். இதையடுத்து, ராஜிவ் கொலை வழக்கை முடிப்பதற்காக, பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை தர வேண்டும் என, இலங்கை அரசிடம் சி.பி.ஐ., கேட்டது. அந்தச் சான்றிதழ் இன்னும் இலங்கை அரசிடம் இருந்து வந்து சேரவில்லை என, தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அதேபோல், ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட மூன்று பேரின் கருணை மனுக்களும் ஜனாதிபதியின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment