Friday, January 22, 2010

தலைவன் இருக்கிறான் ?! உயிர்த்தெழும் 'பிரபாகரன்'

 
 

'இல்லை' என்கின்றனர் பலர். 'இருக்கிறார்' என்கின்றனர் சிலர். ஈழத்துக் காடுகளில், தமிழகத்தின் தெருக்களில், கனடாவில், அமெரிக்காவில் என இன உணர்வுத் தமிழர்கள் கூடினாலே, 'இருக்காருல்ல..?' என்ற கேள்வி எழுப்பாமல் பிரிவதில்லை. ஏழுமாதங் களாக எட்ட முடியாத விடையாக விரிந்துகொண்டே இருக்கிறது பிரபாகரன் மர்மம்!

புதிதாகக் கிளம்பியிருக்கும் தமிழ்மாறன் என்பவர் தன் பங்குக்கு ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார். தைத் திருநாள் கொண்டாட்டத்தின்போது, புதிய இணைய தளமாக உதித்த எல்.டி.டி.இ. பிரஸ் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத் துறை சார்பில் ஓர் அறிக்கை வெளியானது. 'தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றி இலங்கை அரசாங் கத்தாலும் சில சர்வதேசச் சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கிறது. தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர்பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர். தேசியத் தலைவர் அவர்கள் விரைவில் மக்கள் முன் தோன்றி, உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்' என்று அறிவித்திருக்கிறார் ச.தமிழ்மாறன். தன்னை விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொடர்பாளராக அறிவித்துக்கொண்டுள்ளார். புலிகளின் இலச்சினையை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதும் இவரது உத்தரவு.

தமிழ்மாறன் யார், இதற்கு முன்னால் இவருக்கு என்ன பெயர், இந்தப் பொறுப்பில் இவரை நியமித் தது யார் என்ற கேள்விகளுக்கு இப்போதைக்கு விடை கிடைக்காது. ஆனால், பிரபாகரன் மர்மத் திரை மெள்ள விலகுவதாகவே தெரிகிறது.

''தம்பி இருக்கிறார்'' என்று நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் உறுதியாகச் சொல்லி வருகிறார்கள். பிரபாகரனின் அம்மா பார்வதியை திருமாவளவன் கடந்த வாரத்தில் சந்தித்தபோது, ''தம்பி நலமாக இருக்கிறார். என்னைக் கனடாவில் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார்'' என்று சொல்லியிருப்பது ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தூண்டியிருக்கிறது. இவர்கள் கர்ஜிப்பதைவிட, சிங்கள அரசியல்வாதிகளின் மௌனம்தான் கூடுதலாகக் குழப்புகிறது.

'பிரபாகரனை அழித்துவிட்டேன்' என்பதுதான் மகிந்தாவின் செல்வாக்கை சிங்களவர் மத்தியில் உயர்த்தியது. 85 சதவிகித மக்களுக்குச் சந்தோஷம் தரக்கூடிய செய்தியைச் சொல்லி வாக்குகள் தேட மகிந்தா ராஜபக்ஷே ஏன் முயற்சிக்கவில்லை? 'புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக ஓயவில்லை' என்று மகிந்தா சொன்னதாக சிங்களப் பத்திரிகையான திவயின தெரிவிக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் மரணச் சான்றிதழ்களை ஒப்படைப்பதாக பல்நோக்குக் கண்காணிப்புக் குழு சொன்னது. ஆனால், இன்னமும் தரவில்லை. எதுவும் முற்றாக முடிந்துவிடவில்லை என்பதையே இந்தச் செய்திகள் காட்டுகின்றன.

தமிழ்மாறன் வெளியிட்டுள்ள அறிக்கைக்குக் கூடுதல் முக்கியத்துவத்தை இந்தத் தகவல்கள்தான் தருகின்றன. பிரபாகரன் குறித்து கொழும்பு பத்திரிகையாளர்கள் ஒரு புதுத் தகவல் தருகிறார்கள்.

மே 17-ம் தேதி 'இன்னும் சில மணி நேரத்தில் அனைவரையும் முடித்துவிடுவார்கள்' என்று சேட்டிலைட் தொலைபேசியில் அறிவித்த கடற்படைத் தளபதி சூசையிடம் எதிர்த் தரப்பில் இருந்து பேசியவர், 'தலைவர் என்ன ஆனார்?' என்று கேட்கிறார். அந்த நேரத்திலும் சூசை, 'தலைவர் பத்திரமாகத்தான் இருக்கிறார்' என்று சொல்லியிருக்கிறார். 'தலைவரைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுபோக நாங்கள் அனைவரும் சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். அவர் சம்மதிக்கவில்லையானால், மயக்க மருந்து கொடுத்தாவது கடத்திச் சென்றுவிடுவோம் என்று பொட்டு அம்மான் அப்போது சொன்னார்' என்று அங்கிருந்து தப்பி வந்த போராளி ஒருவர் இணைய தளம் ஒன்றில் எழுதி இருக்கிறார். 'நாங்கள் கடைசியாகப் பார்த்த அன்று, தலைவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். தலைவரும் பொட்டுவும் ஜீப்பில் வந்தார்கள்' என்று சொல்கிறார் அவர். ஜீப்பில் வந்தார் என்றால் இரண்டு மூன்று கிலோ மீட்டருக்குள் குறுக்கப்பட்ட காலமாக அது இருக்க வாய்ப்பில்லை. சிலபல மாதங்களுக்கு முன்பாகவே இருக்க முடியும்.

இதற்கு மத்தியில் வீடியோ ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன் பரவியது. ''வீட்டுக்கு ஒருவரைப் போராட்டத்துக்குத் தர வேண்டும் என்ற அடிப்படையில் தன்னைப் பலியிடவே தலைவர் தயாரானார். ஆனால், போராட்டச் சூழ்நிலை மாறி, 'போரைத் தொடங்க நீங்கள் அவசியம் இருந்தாக வேண்டும்' என்று மற்றவர்கள் சொன்னார்கள். எனவே, அதுவரை கிழக்கு மாகாணக் காடுகளில் இருந்த மகன் சார்லஸ் ஆன்டனி முல்லைத் தீவுக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பிறகுதான் தலைவரை அங்கிருந்து வெளியேற்றத் திட்டமிட்டோம்'' என்று செய்தி சொல்லப்பட்டது. அப்படியானால், சிங்கள அரசாங்கம் காட்டும் பிரபாகரன் சடலம் யார்? அதற்கும் அந்த வீடியோவில் பதில் இருக்கிறது. 'பிரபாகரனின் தோற்றத்தைப்போலவே இருப்பவர் போராளி விமலன். தலைவருக்கும் அவருக்குமான உருவ ஒற்றுமை அனைவரும் அறிந்ததுதான். அதைவைத்து சிங்கள அரசாங்கம் வேடிக்கை காட்டுகிறது' என்று பதில் சொல்லப்படுகிறது. 'பொட்டு அம்மானே இது போன்ற திசை திருப்பும் காரியங்களை அழகாகச் செய்வார் என்பதால், அவரது வேலையாகக்கூட இந்தச் சடலம் இருக்கலாம்' என்று சொல்பவர்களும் உண்டு.

'தலைவர் பிரபாகரன் விரைவில் உயிர்த்தெழுவார்' என்று அவரது ஆதரவாளர்கள் சொல்வதைஅலட்சி யப்படுத்த முடியவில்லை!

 source:vikatan

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails