திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம் குறித்து வதந்தி பரப்பியதாக கூறி தெலுங்கு டிவி சேனலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து திருப்பதி போலீஸ் நிலையத்தை பத்திரிகையாளர் சங்கத்தினர் நேற்றிரவு முற்றுகையிட்டனர்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்ததற்கு காரணம், அம்பானி சகோதரர்களின் திட்டமிட்ட சதியே என ரஷ்ய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை ஆந்திர தனியார் செய்தி சேனல்கள் நேற்று முன்தினம் இரவு ஒளிபரப்பின. இதையறிந்த காங்கிரஸ் கட்சித்தொண்டர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ரிலையன்ஸ் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
இதேபோல் திருப்பதியில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வர்த்தக நிறுவனத்தை தாக்கியதாக திருப்பதி நகராட்சி தலைவரும், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான சிவிரெட்டிபாஸ்கர ரெட்டி உள்ளிட்ட 9 பேரை ஏ.எஸ்.பி. அம்மிரெட்டி கைது செய்தார். இவர்களை 7 நாள் காவலில் வைக்க திருப்பதி கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் ராஜசேகர ரெட்டியின் மரணம் குறித்து தவறான செய்தி வெளியிட்டு மாநிலத்தில் கலவரத்தை தூண்டியதாக தெலுங்கு டிவி சேனலை சேர்ந்த 2 பேரை சிஐடி போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். இதற்கு திருப்பதி பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட டிவி சேனலை சேர்ந்த இருவரையும் உடனடியாக விடுவிக்கவேண்டும் எனக்கூறி திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையம் நிலையத்தை பத்திரிகையாளர் சங்கத்தினர் நேற்றிரவு முற்றுகையிட்டனர். உடனடியாக விடுவிக்காவிட்டால், மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் போலீசாரிடம் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரிலையன்ஸ் கண்டனம்
இதற்கிடையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என அம்பானி சகோதரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட அறிக்கை:
ஹெலிகாப்டர் விபத்தில் எங்கள் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாக டிவி 5 ஒளிபரப்பிய செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். தவறான நோக்கத்துடன், எங்கள் நிறுவனத்தின் புகழை கெடுக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுப்பதுடன் வன்மையாக கண்டிக்கிறோம். தவறான செய்தியால் எங்கள் நிறுவனத்தின் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதால் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அனில் அம்பானியும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
source:dinakaran
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment