''14 வயதில் வீட்டைவிட்டு வெளியேறித் தலைமறைவு வாழ்க்கையில் நான் ஈடுபட்டேன். அதில் இருந்தே பெற்றோருடன் தொடர்பைத் துண்டித்துவிட்டேன். அந்தக் காலத்தில் நான் வீட்டில் மிகவும் கட்டுப்பாடான சூழலில் தான் வளர்ந்தேன். வெளியாரோடு கலந்து பழக எனக்கு அனுமதி இல்லை. இளம்பெண்களைக் கண்டால் வெட்கப் படுவேன். என் தந்தையின் நல்லொழுக்கம் என்னை நெறிப்படுத்தியது. அவர் வெற்றிலைகூடப் போட மாட்டார். அவரைப் பார்த்தே நான் ஒழுக்கங்களை உருவாக்கிக் கொண்டேன். ஒளிவுமறைவு இல்லாதவர். நேர்மையானவர். 'அந்த மனிதர் நடந்தால், அவர் காலுக்குக் கீழே உள்ள புல்லுக்குக்கூட நோகாது. அப்படிப்பட்ட தந்தைக்கு இப்படிப்பட்ட மகன் பிறந்திருக்கிறானா?' என்று என் வீட்டின் அருகே இருந்த மக்கள் பேசிக்கொண்டார்கள். அவர் கண்டிப்பானவர். அதேவேளை, நெஞ்சைத் தொடுகிற ஓர் ஆற்றலும் அவரிடம் இருந்தது. நண்பன் ஒருவனைப்போல பக்கத்தில் உட்கார்ந்து நியாயங்களை எடுத்துச் சொல்லிச் சொல்லி, அவர் என்னை வழிப்படுத்தினார்!''-தந்தை வேலுப்பிள்ளைபற்றி மகன் பிரபாகரன் கொடுத்த வாக்குமூலம் இது! உலகம் உன்னிப்பாகக் கவனித்த மனிதர்களில் ஒருவரான பிரபாகரனைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கிய அவரது தந்தை வேலுப்பிள்ளை, கடந்த ஆறாம் தேதி இரவு எட்டு மணிக்கு இறந்துபோயிருக்கிறார். கடந்த மே மாதக் கொடூரப் படுகொலைகளுக்குப் பிறகு தப்பியிருந்த பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளையும் பார்வதியும் ராணுவம் வசம் இருந்தார்கள். வல்வெட்டித்துறையில் 'திருமேனியார் குடும்பம்' என்று இவர்களுக்குப் பெயர். அங்கே உள்ள மாரியம்மன், வைத்தீஸ்வரன், பிள்ளையார் கோயில்களைக் கட்டிய குடும்பம். முதன்முதலாக கிருபானந்தவாரியாரை அங்கு அழைத்துப்போனதும் இவர்கள் தான். 19 வயதில் அரசு குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்த வேலுப்பிள்ளை, 1983-ம் ஆண்டு நில அதிகாரியாக ஓய்வுபெற்றார். ''பிரபாகரனுக்குத் தாய் செல்லம் அதிகம். நான் கொஞ்சம் கண்டிப்பாக இருந்தேன். நான் பல ஊர்களுக்கு வேலைக்கு மாற்றலாகிப்போனாலும் ஞாயிறன்று வீட்டுக்கு வருவேன். அப்போது பிரபாகரன் என்னோடுதான் இருப்பான். என்னுடன் தூங்குவதுதான் அவன் பழக்கம். 56-ம் ஆண்டு தனிச் சிங்களச் சட் டம் வந்தது. அதுவரை ஆங்கிலம்தான் ஆட்சி மொழியாக இருந்தது. அரசாங்கப் பதவியில் இருப்பவர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் சிங்களப் பாடத்தை எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், வேலையைவிட்டு நீக்கப்படுவார்கள். நான் அரசாங்கத்தின் சட்டத்தை விமர்சிப்பேன். அதுதான் அவன் மனதில் தீயாகச் சுடர்விட் டிருக்கிறது'' என்று வேலுப்பிள்ளை முன்பு சொல்லியிருந்தார். அப்பாவின் தூண்டுதல் மகனை ஆவேசம்கொண்டவராக மாற்றியது. சரியாக வீட்டுக்கு வருவதைக் குறைத்தார். வீட்டில் இருந்த போட்டோக்களை அகற்றிய பிரபாகரனிடம் காரணம் கேட்டார் வேலுப்பிள்ளை. 'கரையான் அரிச்சிருச்சு' என்று கதைவிட்டிருக்கிறார். சில நாட்களிலேயே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். காட்டுக்குள் நிரந்தரமாகத் தலைமறைவாகிவிட்ட பிரபாகரனை மீண்டும் வீட் டுக்கு அழைத்து வர வேலுப்பிள்ளையும் ஒருநாள் காட்டுக்குள் நடந்துபோனார். ''அப்பா! இனி நான் உங்களுக்கோ, வீட்டுக்கோ பயன்பட மாட்டேன்'' என்று மறுத்துவிட்டார் பிரபாகரன். அதன்பிறகே வேலுப்பிள்ளையின் நிம்மதி பறிபோனது. திருச்சியில் 20 ஆண்டுகளுக்கு மேல் வேலுப்பிள்ளையும் பார்வதியும் இருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் மகனை இவர்கள் பார்த்ததில்லை. பிரபா கரன் - மதிவதனி திருமணம் நடந்து, மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி பிறந்து ஓர் ஆண்டு ஆன பிறகு தான் அப்பா முன் தோன்றினார். 2002-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் சமாதானப் பேச்சு தொடங்கிய பிறகு, இவர்கள் ஈழம் சென்றனர். மறுபடி போர் தொடங்கியதும், இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்று சொல்லிவிட் டார்கள். மூத்த மகன் மனோகரன், மனைவி வனஜாதேவி மற்றும் குழந்தைகளுடன் டென்மார்க்கில் வசிக்கிறார். மூத்த மகள் ஜெகதீஸ்வரி, கணவர் மதிஆபரணத்துடன் தமிழகத்தில் இருக்கிறார். இளைய மகள் வினோதினி, கணவர் ராஜேந்திரனுடன் கனடாவில் வசிக்கிறார். எனவே, வல்வெட்டித்துறையில் பிறந்த வேலுப்பிள்ளை அவர் பிறந்த மண்ணில் தமிழ் மக்களே உறவினர்களாகச் சூழ்ந்து நிற்க... கடந்த 10-ம்தேதி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 'என்னை என் மண்ணில் புதைத்தாய் என் மண்ணை எங்கே புதைப்பாய்?'-என்ற காசி ஆனந்தனின் கவிதை வரிகளை மனதில்கொண்டு பூமிக்குள் போயிருப்பார் வேலுப்பிள்ளை
source:vikatan
|
No comments:
Post a Comment