புது தில்லி, ஜன. 10: இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள் 10 பேருக்கு பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதால் விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் என்பதால் அவர்களது பெயர்கள் வெளியிடப்படவில்லை.மஸ்கட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதி சர்பிராஸ் நவாஸிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் அந்த விஞ்ஞானிகளின் பெயரைக் கூறியுள்ளார்.
இந்திய, வங்கதேச எல்லையில் அண்மையில் கைது செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி நசீர் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.விஞ்ஞானிகளின் பெயர்களை விசாரணையில் இருவரும் தெரிவித்ததையடுத்து அவர்களது பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என தொடர்புடைய வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
2008-ல் பெங்களூரில் நடைபெற்ற தாக்குதலில் நசீருக்கும், சர்பிராஸ் நவாஸýக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.நாட்டின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு இந்திய முஜாஹிதீன்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க எலெக்ட்ரானிக் பொருள்களையும் நசீர் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி, தஹவூர் ராணா ஆகியோரிடம் அமெரிக்காவில் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மும்பையில் உள்ள பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் சில திரைப்பட ஸ்டுடியோக்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் மீண்டும் கடல் வழியாகத் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறைக்கு கிடைத்த தகவலையடுத்து கடலோரப் பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மும்பை அருகே உள்ள செம்பூர் மற்றும் டிராம்பேவுக்கு ஹெட்லி பல முறை வந்து சென்றதுடன் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை படம் பிடித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை துல்லியமாக படம்பிடிப்பதில் ஹெட்லிக்கு லஷ்கர் இயக்கத்தினர் பயிற்சி அளித்துள்ளனர்.மும்பையில் 2008 நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடும் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலுக்காக பாகிஸ்தானில் நடைபெற்ற திட்டமிடுதல் கூட்டத்திலும் ஹெட்லி பங்கேற்றதாக நம்பப்படுகிறது.
ஹெட்லியிடம் அமெரிக்க புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்களையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளும் பணியில் பாதுகாப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்தே விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், திரைப்பட ஸ்டுடியோக்கள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
source:dinamani
-- www.thamilislam.co.cc
No comments:
Post a Comment