புதுடில்லி:இந்தியாவின் பாதுகாப்புத் துறை வெப்சைட்களுக்குள் ஊடுருவி, அவற்றில் குளறுபடி செய்யும் விஷமச் செயல்களில் சீனா ஈடுபட்டு வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.கடந்த டிச., 15ம் தேதி, அமெரிக்காவின் பாதுகாப்பு, நிதி மற்றும் தொழில்நுட்பத் துறை வெப்சைட்டுகளுக்குள், சீனாவைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி, அவற்றில் குளறுபடி செய்ததாக புகார் எழுந்தது. கூகுல் தேடுதல் இணைய தளத்திலும் இதுபோன்ற குளறுபடிகள், சீனாவில் இருந்து செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டது. அதே நாளில், இந்திய பாதுகாப்புத் துறை வெப்சைட்களிலும், சீனா அரசு சார்பில் சில விஷமிகள் ஊடுருவி, அவற்றில் குளறுபடிகள் செய்ய முயன்றதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த எவரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இருந்தாலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், விரைவில் கவர்னர் பதவியை ஏற்கவிருப்பவருமான நாராயணன், இந்த தகவலை பகிரங்க படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்கு சீனாவில் இருந்து இ-மெயில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் "ட்ரோஜன்' என்ற வைரஸ் உள்ளது.இந்த வைரஸ் மூலம், சீனாவைச் சேர்ந்த "சைபர்' விஷமிகள், சம்பந்தப்பட்ட இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பான முக்கிய ஆவணங்களை "டவுண் லோடு' செய்து கொள்ள வோ, அல்லது அந்த ஆவணங்களை அழித்து விடவோ முடியும். சரியான நேரத்தில் இந்த "சைபர் அட்டாக்' கண்டுபிடிக்கப்பட்டதால், பிரச்னை எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தவுள்ளோம்.இவ்வாறு நாராயணன் கூறியுள்ளார்.பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி கூறுகையில்,"சீனாவின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம். இவை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் வராமல் தடுப்பதற்கு போதிய நடவடிக் கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment