Monday, January 11, 2010

வேலுப்பிள்ளையின் சாவும் சிறிலங்காவின் போர் குற்ற பட்டியலில் சேர்கின்றது - உருத்திரகுமாரன்

 

திரு. வேலுப்பிள்ளை அவர்களின் சாவு சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களதும் மானுட நெறிகளுக்கு எதிரான குற்றங்களதும் பட்டியலை மேலும் நீளச் செய்கிறது என்று உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 

நேற்று முன்தினம் புதன்கிழமை இயற்கைச் சாவு அடைந்த - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தந்தை - திருவெங்கடம் வேலுப்பிள்ளைக்கு வணக்கம் செலுத்தி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்குழுவின் சார்பில் - அதன் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை கீழே:

வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! 
ஆயிரக்கணக்கோர் இரகசிய சிறையினுள் வாடுகின்றனர்!!

 திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையிட்டு ஈழத் தழிழர் தேசம் ஆழ்ந்த துயரில் மூழ்கியுள்ளது. 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு ஈழத் தழிழர் தேசத்தின் துயரில் பங்கேற்பதோடு, திருமதி. வேலுப்பிள்ளை அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இவ் இழப்பையொட்டித் தனது இதயபூர்வமான அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறது. 

தமிழீழத் தேசியத் தலைவரின் தந்தையாகிய திரு. வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 ஆவது வயதில் சிறிலங்கா இராணுவக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது 07.01.2009 அன்று காலமாகியுள்ளார். 

அவர் மே மாதம் 2009 முதல் சிறிலங்கா இராணுவத்தினரால் இரகசிய இடமொன்றில் நீதி மற்ற சட்ட நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டட முறையில் தடுத்து வைக்கடப்பட்டிருந்தார். 

போதிய மருத்துவ வசதிகள் அவருக்கு உரிய முறையில் வழங்கப்படாமையும் அவரது சாவுக்குக் காரணம் என அறிய முடிகிறது. 

இது 1949 ஆம் ஆண்டு ஜெனீவா பிரகடனங்கள் தொடர்பான 1977 ஆம் ஆண்டு முதலாவது மேலதிக சரத்தின் 10 ம் இலக்க விதிமுறையினை மீறிய ஒரு செயலாகும். 

1977 ஆம் ஆண்டு இரண்டாவது மேலதிக சரத்து தான் இலங்கைத் தீவின் தேசிய இன பிரச்சனைக்குரிய சட்டம் எனக் கருதினாலும் கூட திரு. வேலுப்பிள்ளை அவர்களின் சாவு அச் சட்டத்தின் 7 ம் இலக்க விதிமுறைக்கும் முரணாக அமைந்துள்ளது என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

86 வயது நிறைந்த முதியவர் ஒருவரை இராணுவ இரகசிய இடமொன்றில் சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான வகையில் போதிய மருத்துவ வசதிகளின்றித் தடுத்து வைப்பதென்பது மிகவும் கோரமானதும் அதிர்ச்சியூட்டுவதுமாகும். 

யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாக மார் தட்டும் சிறிலங்கா அரசு, பல முதியவர்களையும், காயமடைந்த போராளிகளையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களது பிள்ளைகளையும் குடும்ப உறவினர்களையும் போதிய மருத்துவக் கவனிப்பின்றி இரகசிய இடங்களில் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளது என்பதனை அனைத்துலக சமூகத்திற்கு இத் தருணத்தில் இடித்துரைக்க விரும்புகிறோம். 

இவர்கள் அனைத்துலக மானிட நெறிச் சட்டங்களுக்கு முரணான வகையில், தமது உறவினர்களுடனோ அனைத்துலக செஞசிலுவைச் சங்கத்தினருடனோ எவ்வித தொடர்பும் - எவ்வித நீதி மற்றும் சட்ட நடவடிக்கைளுக்கான வாய்ப்புக்களும் - மறுக்கபட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். 

திரு. வேலுப்பிள்ளை அவர்களின் சாவும், சட்டபூர்வமற்ற முறையிலும் மற்றும் மானுட நெறிகளுக்கு பிறழ்வான வகையிலும் எண்ணுக்கணக்கற்ற பெருந்தொகையானோர் தடுத்து வைக்கப்ட்டு வதைக்கப்படுவதும் - சிறிலங்கா அரசின் யுத்தக் குற்றங்களதும் மானுட நெறிகளுக்கு எதிரான குற்றங்களதும் பட்டியலை மேலும் நீளச் செய்கிறது. 

இரகசிய இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நோய்வாய்ப்பட்டுள்ள திருமதி வேலுப்பிள்ளை அவர்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அரசுக்கு உரிய அழுத்தங்களை வழங்குமாறு அனைத்துலக சமூகத்தினை நாம் இத் தருணத்தில் கோருகிறோம்


source:puthinappalakai


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails