Tuesday, January 5, 2010

அழகு கூடும் நெருப்பு நரி

மெருகு பெறும் பயர்பாக்ஸ்
 
 

தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு போட்டியாக இயங்கும் பயர்பாக்ஸ் பிரவுசர், பல புதிய வழிகளில் மேம்பாடு அடைய உள்ளது. மொஸில்லா தன் இணைய தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது. 
இந்த மாற்றங்கள் இரண்டு நிலைகளில் ஏற்படுத்தப் படும். முதல் நிலை மாற்றங்கள் பயர்பாக்ஸ் பதிப்பு 3.7ல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தரப்படும். மற்ற மாற்றங்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் தொகுப்பு 4ல் ஏற்படுத்தப்படும்.
பிரவுசர்களுக்கிடையேயான போட்டியில் தன் பயர்பாக்ஸ் நல்லதொரு இடத்தைப் பிடித்து வருவதனை மொஸில்லா நன்கு உணர்ந்துள்ளது. எனவே தான் எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி பல வசதிகளைத் தொடர்ந்து சேர்த்து வழங்கி வருகிறது. 
தற்போதைய பயர்பாக்ஸ் முகப்பு தோற்றம் மிகப் பழமையாக இருப்பதாக மொஸில்லா எண்ணுகிறது. முகப்பு தோற்றத்தில், விஸ்டா தொகுப்பில் வந்த கிளாஸ் ஸ்டைலில் முதல் மாற்றம் இருக்கும் Page  மற்றும் Tools  என இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளதாக மெனு மாற்றி அமைக்கப்படும். Stopமற்றும் Reload ஆகிய இரண்டும் ஒரே பட்டனில் தரப்படும். மெனு பார் மறைக்கப்பட்டு ரிப்பன் ஸ்டைல் மெனு தரப்படும் என முன்பு அறிவித்தபோது பலத்த எதிர்ப்பு இருந்ததால், அதனைக் கைவிட்டுவிட்டது மொஸில்லா. 
அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பார் ஒரே கட்டத்தில் தரப்படும். ஸ்டேட்டஸ் பார் எடுக்கப்படும். இவை எல்லாம் குரோம் பிரவுசர் போல தோற்றத்தைத் தருவதற்கான முயற்சிகள் என்று சிலர் கூறிய போது, மொஸில்லா அதனை வன்மையாக மறுத்து பயர்பாக்ஸ் எப்போதும் பயர்பாக்ஸ் போலத்தான் தோற்றமளிக்கும் எனக் கூறப்பட்டது. 
அனைத்து பிரவுசர்களும் ஒரே மாதிரியான வேலையை மேற்கொள்வதால், சில வேளைகளில் இவை ஒன்றுக்கொன்று மற்றதைக் காப்பி செய்வது போலத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென்று ஒரு தனித் தோற்றத்தைக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது. 
பிரவுசர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டியில், இன்னும் இன்டர்நெட் தான் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை யைக் காட்டிலும் கூடுதலானவர்கள் பயர்பாக்ஸினைப் பயன்படுத்துகின்றனர். 
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பலர் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவியதற்கு முக்கிய காரணம், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல இடங்கள் ஹேக்கர்களுக்குச் சாதகமாக இருந்ததுதான். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இணைய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்திடும் ஸென்ஸிக் என்ற அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில், பயர்பாக்ஸ் பிரவுசர் தான் ஹேக்கர்கள் காணும் பலவீனமான இடங்களைக் கொண்டிருப்பதில் முதல் இடம் பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதன் பாதுகாப்பற்ற தன்மை 44 சதவீதம், சபாரி 35சதவீதம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 15சதவீதம் என அறிவித்துள்ளனர். இந்த ஆய்வின் நம்பகத் தன்மை இப்போது கேள்விக் குறியாகி இருந்தாலும், பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்ளும் ப்ளக் இன் புரோகிராம்கள்தான் இந்த பாதுகாப்பற்ற தன்மையினைத் தருவதாக தெரியவந்துள்ளது. ஆனால், பயர்பாக்ஸ் உடனே தன் பிரவுசரில் இருந்த பலவீனமான இடங்களைச் சரி செய்துவிட்டது.



பயர்பாக்ஸ் 3.6 பீட்டா 2 
பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், இதன் பதிப்பு 3.5 னைத்தான் அதிகமாகப் பயன்படுத்து கின்றனர் என்றாலும், பலரும் ரிஸ்க் எடுத்து பயர்பாக்ஸ் 3.6 சோதனைத் தொகுப்பினையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கான சோதனைத் தொகுப்பு 2 அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 190 பிரச்னைகள் சரி செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 
சென்ற வாரம் வெளியான பயர்பாக்ஸ் 3.6 சோதனை பதிப்பு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் சில புதிய வசதிகளுக்கு இணைந்து வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏரோ பீக், டாஸ்க்பார் தம்ப்நெயில் பிரிவியூ போன்றவற்றை இதற்கு எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். ஆனால் விண்டோஸ் 7 தரும் ஜம்ப் லிஸ்ட்டின் வசதிகள் பயர்பாக்ஸ் பதிப்பில் இல்லை. 
குறிப்பாக இதனுடன் இயங்க முடியாமல் இருக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களால், பயர்பாக்ஸ் கிராஷ் ஆவது தடுக்கப்பட்டுள்ளது. 
பிரவுசரின் தோற்றத்தினை பயன்படுத்துபவர்கள் எளிதில் மாற்ற பெர்சனா என்ற டூலை மொஸில்லா வழங்கியது. இந்த தொகுப்பில் இன்னும் பல ஸ்கின்கள் தரப்பட்டுள்ளன. இப்போது பெர்சனாவில் ஒரே கிளிக் செய்வதன் மூலம் பயர்பாக்ஸ் தோற்றத்தினை மாற்றுவதற்கு வழி தரப்பட்டுள்ளது. வீடியோக்களை இயக்குகையில் முழு திரையிலும் பார்க்க வழி அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்து பவர்களுக்கு, பழசாகிப் போன, பயன்படுத்த முடியாத ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்த அறிவிப்பு வழங்கப்படுகிறது. ஆட் ஆன் தொகுப்புகள் புதிய பிரவுசர் தொகுப்பிற்கு ஏற்றவைதானா என்று அறிய ஆட் ஆன் கம்பாடிபிளிட்டி ரீடர் என்னும் புரோகிராம் டவுண்லோட் செய்து பயன்படுத்தும் வகையில் தரப்படுகிறது.
கம்ப்யூட்டரிலிருந்து பைலை பிரவுசரின் அட்ரஸ் பாரில் போட்டு திறக்க வழி செய்யப்பட்டுள்ளது. 
மொஸில்லா என்ன செய்ய வேண்டும் என்பதனை கூகுள் தந்த குரோம் பிரவுசர் சுட்டிக் காட்டியது. அதே போல குரோம் பிரவுசரில் இருந்த புதிய வசதிகளை பயர்பாக்ஸ் தரத் தொடங்கியது. பிரவுசர் யுத்தத்தில் பயர்பாக்ஸ், குரோம் பிரவுசரை எதிர் கொண்டாலும், ஓப்பன் சோர்ஸ் அமைப்பில் இரண்டும் ஒரே மாதிரியான செயல்பாட்டினையே மேற்கொண்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது. எச்.டி.எம்.எல். வசதியை புரோகிராமிங் மற்றும் டிஸ்பிளேவுக்கான வலிமையான சாதனமாகக் கொண்டு வருவதில் இரண்டும் செயல்படுகின்றன. 
பயர்பாக்ஸ் 3.7 அடுத்த 2010 ஆம் ஆண்டின் நடுவிலும், பதிப்பு 4 அடுத்து ஒரு ஆண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாகப் புதிய வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails