தேசிய குடும்ப நல மையம் ஒன்று, நடத்திய ஆய்வில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களில், 64 சதவீதத்தினர், கணவன், மனைவியை அடிப்பது நியாயமே என்று கருத்து தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, நாடு முழுவதும் நடத்தப்பட்ட, ஆய்வு தகவல் கடந்த 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு தகவலை மாநில வாரியாக, மத்திய குடும்ப நல அமைச்சகம், கவனித்து வந்தது. இதில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்த தகவலை இப்போது வெளியிட்டுள்ளது.அதில்,"கணவன் வீட்டாரை மனைவி மதிக்காமல் நடந்தால், அவர்களை கணவன் அடிப்பது நியாயம் என 50 சதவீதம் பெண்களும், வீடு மற்றும் குழந்தைகளை புறக்கணித்தால், அவர்களை அடிப்பது நியாயம் என 48 சதவீதம் பெண்களும் கருத்து தெரிவித்துள்ளதாக' கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சமூக நிபுணர்கள் கூறுகையில்,"இந்தியாவில் கணவன் மனைவியை அடிப்பதை பெண்கள் ஏற்றுக் கொள்வதற்கு, குறைந்த கல்வியறிவு உட்பட பல்வேறு சமூக பொருளாதார நிலையே காரணம்' என்றனர்.இதுகுறித்து, கல்வியாளர் ஏ.ஜி.மாதோஷ் கூறுகையில்,"காஷ்மீர் பெண்கள் மத்தியில் அதிகளவு பாதுகாப்பின்மை நிலவுகிறது. கணவன் மனைவியை அடிப்பது சரியே என பெண்கள் கருதுவதற்கு, கல்வியறிவின்மை மற்றும் வறுமை ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாக அமைகின்றன' என்றார்.
கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மொத்தம் 55.5 சதவீதம் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள். சுகாதாரம் தொடர்பான ஆய்விற்காக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச்சேர்ந்த 2,415 குடும்பங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 15 வயது முதல் 49 வயது வரையிலான 3,281 பெண்கள் மற்றும் 15 வயது முதல் 54 வயது வரையிலான 1,076 ஆண்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்த ஆய்வில், கணவன், மனைவியை அடிப்பது நியாயமே என ஜம்மு காஷ்மீர் மாநில ஆண்களும், அதிகளவில் கருத்து தெரிவித்துள்ளனர்.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment