மும்பை: பொதுவாக காதலுக்குத்தான் ஜாதி, மதம் கிடையாது என்பர். ஆனால், மும்பையில் ஒரு தம்பதியர் தங்கள் குழந்தை எந்த மதத்தையும் சேராதவன் என்று விண்ணப்பம் செய்து, போராடி பிறப்புச் சான்றிதழ் வாங்கியிருக்கின்றனர். அதிதி ஷெட்டே-ஆலிப் சுர்தி தம்பதியருக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 15 நாட்களுக்குள் மருத்துவமனையில் பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற அடிப்படையில், மருத்துவமனை அளித்த விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்தனர் தம்பதியர். அப்போது, அதில் "மதம்' என்ற இடத்தை மட்டும் நிரப்பாமல் கொடுத்தனர்.
விண்ணப்பத்தில் எந்த இடமாவது நிரப்பாமல் காலியாக இருந் தால், கம்ப்யூட்டர் மிஷின் அதை நிராகரித்து விடும். தம்பதியர் தங்கள் குழந்தையை எந்த மதத்துக்குள்ளும் அடக்க விரும்பவில்லை. இதைப் புரிந்து கொள்ளாத அலுவலர், அவர்களை மேலதிகாரியிடம் அனுப்பி வைத்தார். பண்பான மேலதிகாரி, இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, "ஆனால் கம்ப்யூட்டர் அதை ஏற்றுக் கொள்ளாது. அதனால் "இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பிற' என்ற வரிசையில் வரும் "பிற' என்ற இடத்தை நிரப்பிக் கொடுங்கள்' என்று ஆலோசனை சொன்னார். அதன்படியே அதிதி தம்பதியினர் நிரப்பிக் கொடுத்து விண்ணப்பம் பெற்றனர். இது அவர்களின் முதல் வெற்றி. ஆனால், இன்னும் தடைகள் பல இருக்கின்றன. பள்ளியில் சேரும் போது, பாஸ்போர்ட் பெறும்போது எனப் பல தடைகள். இதைக் கண்டு எல்லாம் அசருவதாக இல்லை அதிதி தம்பதியினர்.
"நான் கர்ப்பமாக இருக்கும் போதே, பிறக்கும் குழந்தைக்கு எந்த மதத்தையும் குறிப்பிடக் கூடாது என்று தெளிவாக இருந்தோம். நான் இந்து. என் கணவர் முஸ்லிம். இன்னும் பல மதங்களின் கொள்கைகள் பற்றி எங்கள் மகனுக்குச் சொல்லிக் கொடுப்போம். அவனே தனக்குப் பிடித்த மதத்தைத் தேர்ந்தெடுக்கட்டும். ஜனநாயக, மதச்சார்பற்ற ஒரு நாட்டில் ஏன் ஒருவர் தன்னை எந்த மதத்தையும் சேராதவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது?' என்கிறார் அதிதி. ஆலிப் சுர்தி, பிரபல எழுத்தாளரும் கார்ட்டூனிஸ்ட்டுமான அபித் சுர்தி (75)யின் மகன். அபித்துக்கு ஓஷோ, வாஜ்பாய், அமிதாப் போன்ற பெரிய ரசிக வட்டாரம் உண்டு. "நான் என் இரண்டு மகன்களுக்கும் எந்த மதத்தையும் குறிப்பிடவில்லை. ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் அதைச் சான்றிதழில் பதிவு பண்ண என்னால் முடியவில்லை. அதை இப்போது என் மகனும் மருமகளும் சாதித்துள்ளனர்' என்று பெருமை பொங்கக் கூறுகிறார் அபித்.
source:dinmalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment