பெண் கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். தமிழக தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் சக்தி விலாஸ் மிஷன் என்ற அமைப்பை நடத்தி வந்த ஈஸ்வர ஸ்ரீகுமார் (60) மீது தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கொடுத்தார். வேலை கேட்டு சென்ற தன்னை காபியில் மயக்க மருந்து கலந்து தந்து அவர் கற்பழித்ததாகவும், அதை ஆபாசப் படம் எடுத்து வைத்து மிரட்டி மீண்டும் மீண்டும் கற்பழி்த்ததாகவும் ஹேமலதா கூறியிருந்தார்.
இது குறித்து முதலில் சென்னையில் பல காவல் நிலையங்களில் புகார் தந்தும், அதை பதிவு செய்ய போலீசார் மறுத்ததால் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடமே நேரில் புகார் தந்தார் ஹேமலதா. இதையடுத்து விசாரணை தொடங்கியது. சாமியாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் வரவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந் நிலையில் ஹேமலதா உள்பட 30க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர். ஹேமலதாவுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடந்தது. இதற்கிடையே தலைமறைவான சாமியாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு மாநிலமாக தப்பி ஓடியதால் அவரைக் கைது செய்தவது தாமதமானது.
இதையடுத்து சாமியாரின் செல்போன்களை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் அவர் மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் இருப்பதை அறிந்தனர். அவரை அங்கு சென்று பிடிக்க முயன்ற நிலையில் அவர் அங்கிருந்து மும்பை சென்று இன்று காலை பெங்களூர் வருவது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் பெங்களூர் விரைந்தனர். இன்று காலை விமானம் மூலம் பெங்களூர் வந்த ஈஸ்வர ஸ்ரீகுமாரை சென்னை போலீஸ் படை கைது செய்தது.
தான் மத்திய அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக இருப்பதால் தன்னை கைது செய்ய முடியாது என்று வாக்குவாதம் செய்தார். ஆனாலும் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை கொண்டு வரப்படும் அவரிடம் முறையாக விசாரணை நடத்திய பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment