விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரை தடுப்பு முகாமில் வைத்து இலங்கைப் படையினர் கைது செய்துள்ளதாக அரச கட்டுப்பாட்டில் உள்ள சிங்களத் தினசரியான தினமின பத்திரிகை ராணுவத்தினரை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும் நிர்வாகப்பிரிவுத் தலைவர்களான கரிகாலன், யோகரட்ணம் யோகி, லோறன்ஸ் திலகர், எழிலன், பாலகுமார், இளம்பரிதி, தங்கன் ஆகிய ஏழு பேருடைய பெயர்களையும் அது குறிப்பிட்டுள்ளது. நிர்வாகப் பொறுப்பாளர் பூவண்னன், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா, உதவி உள்விவகாரப் பொறுப்பாளர் ஞானம், யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் இளம்பரிதி, திருகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் ஆகியோரும் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தினமின தெரிவித்துள்ளது. கரிகாலன் முன்னர் கிழக்குப் பிராந்தியத்தின் அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் பொருளாதார விடயங்களுக்குப் பொறுப்பானவராகக் கடமையாற்றியவர். யோகரட்ணம் யோகி விடுதலைப் புலிகளின் பேச்சாளராகக் கடமையாற்றியவர். ஈரோஸின் முன்னாள் தலைவரான பாலகுமார் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆலோசகராக இருந்தார். லோறன்ஸ் திலகர் முன்னர் புலிகளின் பாரிஸ் பொறுப்பாளராகக் கடமையாற்றியிருந்தார். இவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தாத, புலிகளின் சிவில் பிரிவைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment