Tuesday, June 9, 2009

மீண்டும் அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ‐ 6 படையினர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

வன்னிப் பகுதியில் மீண்டும் அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ‐ 6 படையினர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு:

 
 
வன்னிப் பகுதியில் மீண்டும் அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் பல இடம்பெற்றுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
 
நேற்று முன்தினம் காணாமல் போனதாகக் கூறப்படும் 6 படையினர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக படைத்தரப்பினால் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் இராணுவ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி முதல் வடமராட்சி கிழக்கு மற்றும் வன்னியின் அலம்பில் காடு வரையான காட்டுப் பகுதிகளிலும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளிலுமே பரவலாக இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
 
குறிப்பாக பிரதான வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படையணிகளுக்கும் விடுதலைப் புலிகளின் அணிகளுக்கும் இடையே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளதை படையதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த சில நாட்களில் பல தடவைகள் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர் சிதறுண்ட விடுதலைப் புலிகளின் அணிகள் ஒன்றிணைய முனைவதாக தாங்கள் நம்புவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அவர் தெரிவித்தார்.
 
இந்த நிலையிலேயே பிரதான வீதிகள் ஊடாக கடக்க முற்படுகின்ற விடுதலைப் புலிகளினது அணிகளுக்கும் படையினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.
 
வன்னிக் காட்;டுப் பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருக்கலாம் என தாங்கள் கருதுவதாக தன்னை வெளிப்படுத்த விரும்பாத அந்த படையதிகாரி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மேலும் தெரிவித்தார். அவர்களைத் தேடியழிக்கும் நடவடிக்கையையே படைத்தரப்பு தற்போது முடக்கி விட்டுள்ளது.
எனினும் வன்னியின் பரந்து விரிந்த ஆழக் காடுகளில் இவர்கள் பதுங்கி இருப்பதனால் அவ்வாறானதொரு நடவடிக்கை வெற்றியளிக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் உணவு உள்ளிட்ட தமது அன்றாட தேவைகளை சீர் செய்வதற்கும் ஏனைய அணிகளுடன் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் குறிப்பாக சிறுசிறு அணிகளாக தொடர்புகளைப் பேணுவதற்கும் பிரதான வீதிகளைக் கடக்க முற்படுவதாகவும் படைத்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையிலேயே மோதல்கள் கடந்த வாரத்தில் பல தடவைகள் இடம்பெற்றிருப்பதாகவும் படைத்தரப்பிற்கு சிறியளவான சேதங்களே ஏற்பட்டதாகவும் அந்தப் படையதிகாரி தெரிவித்தார். இதனிடையே விடுதலைப்புலிகளது நடமாட்டங்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு அண்மைய நாட்களில் மீண்டும் தலையிடிகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும்  விடுதலைப் புலிகள் முற்றாக கொரில்லா வகைப் போராட்டத்திற்கு தயாராகி விட்டதோர் பரிமாணமாக இது இருக்கலாம் என குளோபல் தமிழ்ச் செய்திகளின் இராணுவச் செய்தியாளர் தெரிவித்தார்.
 
இதனிடையே ஏ9 வீதியூடாகவும் குடாநாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்ல படைத்தரப்பு அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களை இந்த வீதியூடாக பயணிக்க அனுமதிப்பது இந்த வீதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
 
ஏனெனில் விடுதலைப்புலிகளால் இந்த வீதிகள் எந்நேரமும் தாக்குதலுக்குள்ளாகலாம் எனவும் இதனால் பொருட்களை மட்டும் இந்த வீதிகளால் எடுத்துச் செல்லவும் ஏ32 வீதியூடாக பயணிகளை பயணிக்க அனுமதிக்கலாம் எனவும் படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
குறிப்பாக விடுதலைப்புலிகளது அணிகள் ஏ9 வீதிக்கும் முல்லைத்தீவு வீதிக்கும் இடைப்பட்ட மற்றும் மணலாறை அண்டிய காடுகளிலேயே பெருமளவில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த நிலையிலேயே நேற்றைய தினம் 6 தலை துண்டிக்கப்பட்ட சடலங்கள் தொடர்பான தகவல்கள் படைத்தரப்பிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
 
விடுதலைப்புலிகள் எதிர்காலத்திலும் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வார்களாயின் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக பெருமளவான படையினரை இந்தப் பகுதிகளில் நிலைகொள்ள வைக்க வேண்டிய ஒரு நெருக்குவார நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தச் சம்பவங்களின் பின்னணியிலேயே வன்னியிலிருந்து இடம்டபெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த படைத்தரப்பு பின்னடிப்புக்களை மேற்கொள்வதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு  தெரிய வருகின்றது.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails