Thursday, June 18, 2009

ஈழத்தில் மீண்டும் வன்முறை வெடிக்கக் கூடும் ‐ பான் கீ மூன்

முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் வன்முறை வெடிக்கக் கூடும் ‐ பான் கீ மூன்

 

இலங்கையில் நீண்டகாலமாக நீடித்து வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், எஞ்சியிருக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு சரியான வழியில் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும்

வன்முறைகள் வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுடனான இராணுவ யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும், தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் எஞ்சியிருப்பதாக தாம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இலங்கை இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இடம்பெயர்ந்தோர்  முகாம்களில் தங்கியிருக்கும் 280000 மக்களை மீளக் குடியமர்த்த அரசாங்கம் காட்டி வரும் அக்கறை வரவேற்கத் தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும், தாம் அண்மையில் முகாம்களுக்கு விஜயம் செய்திருந்த போது நிலமைகளை நேரில் அவதானித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மக்களை தமது சொந்த வீடுகளில் குடியமர்த்த தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
மனிதாபிமானப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் மக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails