Monday, June 22, 2009

நாடு கடந்த அரசாங்கம்! இலங்கை அரசுக்கு புதிய தலையிடியைக் கொடுத்துள்ளது

 
 
நாடு கடந்த அரசாங்கம் என்ற சொல் தற்போது இலங்கை அரசியலிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டு நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையிலேயே தற்போது இந்த "நாடு கடந்த அரசாங்கம்" என்ற சொல் அரசுக்கு புதிய தலையிடியைக் கொடுத்துள்ளது.

"நாடு கடந்த அரசாங்கம்" என்ற சொற்பதம் குறித்து அறிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. "நாடு கடந்த அரசாங்கம்" என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் எவை? அந்த நாட்டுக்கான அங்கீகாரம் எப்படிக் கிடைக்கும், அந்த நாட்டின் தலைவர் யார்? என்பது போன்ற பல கேள்விகள் இன்று இலங்கை மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

எனவே, நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பாக ஆராவதை விடுத்து பொதுவாக "நாடு கடந்த அரசு' என்றால் என்னவென்பதை பார்ப்போம்.

இன்று உலகில் பல, நாடு கடந்த அரசாங்கங்கள் (Provisional Transnational Government) செயற்பட்டு வருகின்றன. இந்த நாடு கடந்த அரசின் முதல் வித்தாக பெலாரஷ்யன் தேசிய குடியரசு காணப்படுகின்றது.

நாடு கடந்த அரசாங்கம் என்பது அரசியலில் ஈடுபடும் அல்லது ஒரு குழுவினர் சொந்த நாட்டில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசொன்றை நிறுவுவதாகும். காலப்போக்கில் இந்த அரசாங்கமானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று ஆட்சி அதிகாரங்களை மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவதே இந்த நாடு கடந்த அரசாங்கமாகும்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தை பிரயோகிப்பது, சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவது, இன அழிப்பு செவது, பெண்கள் மீதான பாலியல் வன்முறை,சிறுவர்களை கடத்துவது போன்ற கொடூரங்களும் குறிப்பிட்ட இனத்தின் அரசியல் தலைவர்களை புறந்தள்ளல் போன்ற நிகழ்வுகளும் நாடு கடந்த அரசொன்றை நிறுவ சர்வதேச சட்ட மரபு நெறிகளில் இடம் வழங்குகின்றன.

இரண்டாம் உலகப் போரில் பல ஐரோப்பிய நாடுகளை ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிப்படைகள் கைப்பற்றியதனால் பல ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இவ்வாறான நாடு கடந்த அரசாங் கத்தை நடத்தி வந்தனர். இதனால் அவர்களின் தேசியம் பாதுகாக்கப்பட்டது.

1920ஆம் ஆண்டில் பெலாரஷ்யன் என்ற அமைப்பு தனது நாடு பெலாரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை நாடுகடந்த அரசாங்கமாகவே இயங்கிவருகின்றது. இதேபோன்று திபெத்தை சீன அரசு ஆக்கிரமிப்பு செதபோது அந்நாட்டின் ஆன்மிகத் தலைவர் தலாலாமா இந்தியா சென்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடத்தி வருகின்றார்.

உலகில் இன்றுவரை 11 ற்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன.

அப்காஷியா சுயாட்சிக் குடியரசு (1993), பெலாரஷ்யன் தேசிய குடியரசு (1920), கபின்டா குடியரசு (1975), செச்சென் குடியரசு (2000), எதியோப்பியா அரச சபை (1993), ஈரான் ஏகாதிபத்திய அரசு (1979), லாவோ ஏகாதிபத்திய அரசு (1975), சகாராவி அரபு ஜனநாயகக் குடியரசு (1976), சேர்பியன் கரஜினா குடியரசு (2005), மலுகு செலாற்றன் குடியரசு (1950), மத்திய திபெத்திய நிர்வாகம் (1959) போன்றவை நாடுகடந்த அரசாங்கங்களாக செயற்படுகின்றன.

இந்த நாடு கடந்த அரசாங்கங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நாடுகளாக அப்காஷியா, பெலரெஸ், அங்கோலா, ரஷ்யா, எதியோப்பியா, ஈரான், லாவோ, மொறாக்கோ, குரோஷியா, இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகள் காணப்படுகின்றன.

இவ்வாறான நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளாக, சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது, தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுப்பது, தேசியத்தின் சட்டமுறைகளை பாதுகாப்பது, ஒரு தேசிய இராணுவத்தை பாதுகாப்பது அல்லது கட்டி எழுப்புவது, இராஜதந்திர ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்தல், தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை உருவாக்குதல், தேர்தல் நடத்துதல் போன்றவை உள்ளன.

நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைக்க ஏதாவது ஒரு வெளிநாட்டின் அங்கீகாரம், அல்லது அனுமதி தேவை. அவ்வாறு கிடைக்குமிடத்து அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு பாதிப்போ இடையூறுகளோ ஏற்படாதவிடத்து நாடு கடந்த அரசாங்கமொன்றை அந்த நாட்டில் நிறுவ முடியும்.

இவ்வாறு வெளிநாடுகளில் அமைக்கப்படும் நாடு கடந்த அரசாங்கமொன்றினால் தமது அரசின் தூதுவர்களை நியமிக்க முடியும். வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஒரு நாட்டு அரசாங்கம் என்ற தகுதியுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடமுடியும். ஒரு நாட்டுக்குரிய சகல அதிகாரங்கள், நடைமுறைகளும் இந்த நாடு கடந்த அரசாங்கங்களுக்கும் உண்டு.

பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமது சமுதாயத்தினை அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, பண்பாட்டு ரீதியில் பலப்படுத்தவும் தமது சொந்தமண்ணில் அரசுரிமையை பெறுவதற்கும் சர்வதேச சவால்களை அதே ரீதியில் அணுகுவதற்கும் இந்த நாடு கடந்த அரசாங்கம் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இதேவேளை ஒரு நாடு கடந்த அரசாங்கமானது சிறப்பாக செயற்பட ஒரு நாட்டின் அனுமதி அல்லது அங்கீகாரம் தேவை. அனுமதி அல்லது அங்கீகாரம் தரும் நாடு சில வேளைகளில் அவற்றை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் அதிகாரம் இழக்கப்படக் கூடும்.

இவ்வாறானதொரு அரசாங்கத்தையே அமைக்கப் போவதாக தற்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரெனக் கூறப்படும் கே.பத்மநாதன் அறிவித்துள்ளதுடன் நாடுகடந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கான செயற்குழு ஒன்றையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராகவிருந்த விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் அமைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

1976 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனத்தினதும் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும் பின்னர் 1985 ஆம் ஆண்டில் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும் 2003 ஆம் ஆண்டில் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப் பகிர்வின் தளமாக அமைந்துள்ளதுமாகிய தமிழர் ஓர் தேசிய இனம், வடக்கு, கிழக்கு தமிழரின் தாயக நிலம், ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை, ஈழத்தமிழரின் அரசியல் அபிலாஷைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ்மக்களையும் ஓரணியில் ஒன்றிணைப்பதே இந்த "நாடு கடந்த அரசாங்கம்' என்ற அறிவிப்பின் நோக்கமாகவுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கமோ " இது ஒரு கற்பனை'யென்றும் இதனை கற்பனையில் வைத்தே தாம் அழித்துவிடுவோம் என்றும் கூறியுள்ளது. அத்துடன் சகலநாடுகளிலுமுள்ள தமது வெளிநாட்டுத் தூதுவர்களை இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளதுடன் இத்திட்டத்தை முறியடிக்க சகலவித இராஜதந்திர நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

source:http://www.tamilwin.com/view.php?2aSWnLe0dHj060ecQG7D3b4t9EE4d3g2h2cc2DpY2d426QV3b02ZLu2e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails