பழைய செய்திகள்,புதிய உண்மைகள்
நம்பிக்கை: பெங்குவின்பறவைகள் (Penguin) வடதுருவத் தில் வசிக்கின்றன.
உண்மை: பெங்குவின்களின் நாட்டைக் காணவேண்டும் என்று வடக்கு நோக்கி நீங்கள் பயணம் செய்தால், நீங்கள் தவறான திசையில் செல்கிறீர்கள் என்று பொருள். பெங்குவின்பறவைகள் தென் துருவத்திலும், தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அருகில் உள்ள குளுமையான கடல்களிலும் வாழ்கின்றன.
நம்பிக்கை: இதுவரை உயிர் வாழ்ந்திருந்த விலங்குகளிலேயே டினோசர் (Dinosaur) தான் மிகப் பெரிய விலங்காகும்.
உண்மை: இதுவரை வாழ்ந்த விலங்குகளி லேயே மிகப் பெரிய விலங்கினம் மாபெரும் நீலத் திமிங்கிலம்தான் (Blue Whale). பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் சுற்றித் திரிந்த மிகப் பெரிய டினோசரான பிரச்சியோசாரஸ் (Brachiosaurus) 68,040 கிலோ எடையும், 26 மீட்டர் நீளமும் கொண்டது. ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை 136,080 கிலோ; அதன் நீளம் 30.48 மீட்டர். இந்த மாபெரும் விலங்கினம் இன்றும் உலகின் பெருங்கடல் களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
நம்பிக்கை: எல்லா டினோசர்களுமே (Dinosaur) மிகப் பெரிய உருவங்கொண்டவை.
உண்மை: டினோசர் என்ற கிரேக்க சொல் அச்சம்தரத்தக்க மாபெரும் உருவம் என்ற பொருள் தரும். ஆனால் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இந்த விலங்குகளில் சில உருவத்தில் சிறியவையாகவும் இருந்துள்ளன. முழுமையாக வளர்ந்த
கம்போசோக்நாதூஸ் (Compsognathus Dinosaur) என்ற டினோசர் ஒரு வான் கோழியை விடப் பெரியதாக இருக்கவில்லை. அதன் உருவப் படிமங்கள் ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கை: நச்சுப் பாம்புகள் (Poisonous Snakes) பெரும்பாலும் கூர்மையான தலையைக் கொண்டிருக்கும்.
உண்மை: கட்டுவிரியன், சாரை மற்றும் பல நச்சுப் பாம்புகள் கூர்மையான தலையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், நாகப்பாம்பு (Cobra) மற்றும் பவழப்பாம்புகளுக்கு (coral snake) கூர்மையான தலை இல்லை. என்றாலும் இவை மிகக் கொடிய நச்சுத் தன்மை வாய்ந்தவை. மேலும், நச்சுத் தன்மையற்ற பல பாம்பு வகைகளுக்கும் கூர்மையான முக்கோண வடிவம் கொண்ட தலை இருக்கும்.
ஒரு பாம்பு நச்சுத் தன்மை உடையதா என்பதை அறிய நிச்சயமான ஒரு வழி உள்ளது. அதன் மேல் தாடையில் இரண்டு நீளமான நச்சுப்பற்கள் இருக்கும். நச்சுத்தன்மையற்ற பாம்புகளுக்கு இத்தகைய நச்சுப் பற்கள் இருக்காது. எவ்வாறாயினும் பாம்புகளை மிக நெருங்கிப் பார்க்காமல் இருப்பதே நல்லது.
- இளங்கண்ணன்
No comments:
Post a Comment