Thursday, June 4, 2009

இணையத் தளத்தில் அணு ஆயுத ரகசியம் அம்பலம்:அதிர்ச்சியில் அமெரிக்கா

அணு ஆயுத ரகசியம் அம்பலம்:அதிர்ச்சியில் அமெரிக்கா


அமெரிக்க அணு ஆயுதங்கள், இராணுவ அணு உலைகள், உலைகளுக்கான எரிபொருள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியவை குறித்த ரகசிய  ஆவணங்கள், வரைபடங்கள் ஆகியவை அமெரிக்க அரசின் இணையத் தளத்தில் தவறுதலாக வெளியாகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


அமெரிக்க அரசின் அச்சகத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் இவை வெளியான 24 மணி நேரத்துக்குப் பிறகே அது குறித்து அரசுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த விவரங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

மேற்படி இணையத் தளம் கடந்த திங்கட்கிழமை இந்த விவரங்களை வெளியிட்டது. இதைப் பார்த்து அதிர்ந்துபோன அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் ஆய்வாளரான ஸ்டீவன் ஆப்டர்குட் இது குறி்த்து தனது அமைப்பின் (Secrecy News) 'நியூஸ்லெட்டரி'ல் பலருக்கும் தகவல் அனுப்பினார்.

இந்த 'நியூஸ்லெட்டரை'ப் பார்த்து விவரம் அறிந்த 'நியூயோர்க் டைம்ஸ்' நாளிதழின் நிருபர், இது குறித்து அச்சகத்துறையிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது தான், நடந்த தவறே அவர்களுக்குத் தெரியவந்தது. உடனடியாக இணையத் தளத்தை முடக்கிய அவர்கள், அந்த விவரங்கள் அடங்கிய பக்கங்களை நீக்கி விட்டனர்.

இது குறித்து 'சிஐஏ'யின் முன்னாள் இயக்குனரான ஜான் டியூச்,

"தவறுகள் நடப்பது சகஜம் தான். ஆனால், பிரமாண்டமான தவறுகள் நடப்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் இந்த விவரங்கள் வெளியானதால் அமெரிக்கப் பாதுகாப்பு தரப்பு என்ன ஆகும்?" என்றார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails