Sunday, June 14, 2009

என்ன சொல்ல வருகிறது புதி(ர்)னம்?

 



கடந்த சில வாரங்களாகவே புதிராக இருந்து வந்த புதினம் இணையதளம் தனது அசல் வண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது. "முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியிலே ஈழப்போர்-3" எனும் தலைப்பில் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி ஒரு கட்டுரையை இல்லை இல்லை முதல் தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

முள்வேலிக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் முடங்கி கிடக்கிறார்கள்...... ஆயிரக்கணக்கானவர்கள் அங்ககீனமாக்கப்பட்டுள்ளனர்....... பட்டியலில் இருந்தே 13,000 பேரை காணவில்லை....... உணவின்றி, மருந்தின்றி நாளும் மக்கள் மடிந்த வண்ணம் உள்ளனர்....... உயிர்கள் ஏதாவது அங்கு எஞ்சி நிற்குமோ என ஏங்கித் தவிக்கிறது உலகத் தமிழினம்.

இவ்வேளையில் பிரபாகரன் குறித்து அகழ்வாராய்ச்சியில் இறங்கியுள்ளது புதினம். கொத்தபாயா, பொன்சேகா, உதய நாணயகரா, ஒக்கலகாமா போன்ற தமிழர் பிணம் தின்னும் கழுகுகள் பிரபாகரன் இல்லையென்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்கள் ஆனால் புதினமோ பிரபாகரன் இல்லை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் கடைசி நேரத்தில் எத்தகைய சிந்தனைகள் அவர் மனதில் ஓடியிருக்கும் என கற்பனை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கற்பனைக் கட்டுரையின் ஒரு பகுதி இப்படி இருக்கிறது.

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?... அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?... அல்லது - வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?... அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?... அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?..அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?..
சாவை கண்டு அஞ்சி ஓடும் கோழைகள் மட்டுமே சாவு தன்னை தீண்டும் முன்பு இப்படியெல்லாம் சிந்திப்பார்கள். வீரன் அதுவும் மாவீரன் ஒருபோதும் கட்டுரையாளன் வழுதியை போல் எண்ணியிருக்கமாட்டான்.

சரி என்னதான் சொல்லவருகிறீர்கள் வழுதி?. பிரபாகரன் பாலா(பாலசிங்கம்) சொன்னதை கேட்கவில்லை என்கிறீர்களா? இல்லை தமிழ்ச்செல்வன் பிரபாகரனை தவறாக வழிநடத்திவிட்டார் என்கிறீர்களா? ராணுவபலத்தை மட்டுமே நம்பியதால் பிரபாகரன் வீழ்ந்தார் என்கிறீர்களா? என்னதான் சொல்ல வருகிறீர்கள்?
இது ஏற்கெனவே எங்கேயோ கேட்ட குரல்களாக இருக்கிறதே?
புலிகளின் ராணுவ கட்டமைப்பே உடைந்து நொறுங்கிவிட்டது என வழுதியின் மூலமாகக் கூறும் புதினமே.......
இதையே தான் ராஜபக்சே சொல்கிறான்,
பொன்சேகா சொல்கிறான்
தமிழனாய் பிறந்துவிட்டு இப்படி எழுத கூசவில்லையா?
கூலிக்கு எழுதினால் மட்டுமே கூச்ச நாச்சம் இல்லாமல் எழுத முடியும் நீங்கள் எப்படி……?
அடுத்ததாக அவரின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது என்று நேரடி வருணனை வேறு வழுதியின் வாயிலாக செய்திருக்கிறது புதினம்.
"உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார்.அடையாளம் மறைத்து காணாமல் போகாமல் - தான் கனவு கண்ட 'தமிழீழம்' என்ற நாட்டிற்கென அவரே உருவாக்கி - மக்களுக்கு வழங்கிய அந்த 'தேசிய குடிமக்கள் அட்டை'யைத் தன் கழுத்திலே அவர் சுமந்திருக்கின்றார்.மாற்று உடை தரித்து மாயமாய் போகாமல் - தமிழீழத்தின் தேசியப் படைக்கென அவரே உருவாக்கி - தன் போராளிகளை களங்களில் அணியச் செய்த சீருடையை அவர் நேர்த்தியாக அணிந்திருக்கின்றார்.
அந்தப் பணயத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்து விட்டது.

சிங்களனும்.......,இந்திய ஊடகங்களும்....... ஒரு சில ஓடுகாலி தமிழர்களும் இதையே தான் சொன்னார்கள்.
நீங்கள் மயிர் பிளக்க நடத்திய இந்த "ஆராய்ச்சியில்" சொல்லவரும் செய்தி "பிரபாகரன் பல்வேறு தவறுகளைச் செய்தார்....... அதன் விளைவாக அவரது சாவை அவரே தேடிக் கொண்டுவிட்டார்" என்பது தானே.
பூமிப்பந்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி தமிழர்கள் பிரபாகரன் இருக்கிறார் என ஆணித்தரமாக ஆதாரபூர்வமாக உணர்கிறார்கள். நம்புகிறார்கள், இந்த நம்பிக்கையை தகர்க்கின்ற உரிமை அல்லது நாங்கள் நம்பவே கூடாது என சொல்கின்ற உரிமை உங்களுக்கு மட்டுமல்ல எவனுக்குமில்லை.
அவர் இருப்பது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவது மக்களுக்கு செய்யும் இரண்டகம்....... துரோகம்....... என கூறுகிறார் கட்டுரையாளர். இந்த மாயத் தோற்றம்....... மாஸ்க் தோற்றம் எல்லாம் செய்தாக வேண்டிய நிர்பந்தம் சிங்களப் பேரினவாதிகளுக்கு இருக்கலாமே ஒழிய மக்கள் விடுதலையை நேசிக்கும் எவருக்கும் இல்லை. எதைச் சொன்னாலும் நம்புவதற்கு மக்கள் மூடர்களும் அல்ல. ஆனால்....... நீங்கள் இப்போது செய்திருப்பதோ கருணாவை விஞ்சிய துரோகம்.

"அவர் விட்ட தலைமைத்துவ இடைவெளியை பொருத்தமான வகையில் நிவர்த்தி செய்து" என்ற வரியில் நீங்கள் யார் என்பதையும் உங்கள் உள்ளமும்,எண்ணமும் என்ன என்பதை அடையாளம் காட்டிவிட்டீர்கள்,
அந்த பொருத்தமானவர் நீங்களா? அல்லது புதினம் முன்னிறுத்த போகும் இன்னொருவரா?

ஆக இந்த கட்டுரை பிரபாகரன் இருப்பையோ ,அல்லது இறப்பையோ உறுதி செய்வதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல.
தமிழீழ விடுதலை புலிகள் மீதும், தேசிய தலைமை மீதும் காலம் காலமாக சிங்களவர்கள் சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளை வழிமொழிவதற்காக எழுதப்பட்ட கட்டுரை.
புதிரான புதினமே.......
காத்திருக்கிறோம் நாங்கள்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails