Tuesday, June 30, 2009

வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-1

இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் இது.

 
பல ஆண்டுகளுக்கு முன்பே ``தமிழ் ஈழம்'' கோரிக்கை, இலங்கைத் தமிழர்களால் எழுப்பப்பட்டது. ``இலங்கைத் தமிழர்களின் தந்தை'' என்றும் ``இலங்கையின் காந்தி'' என்றும் போற்றப்பட்ட செல்வநாயகம்,

 
தமிழர்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடிப் பார்த்தார். இலங்கை அரசுகளுடன் பல ஒப்பந்தங்கள் செய்து கொண்டார். பயன் இல்லை. கையெழுத்திட்ட மை உலருவதற்கு முன் ஒப்பந்தங்களை கிழித்துப் போட்டனர், சிங்கள ஆட்சியாளர்கள்.

எனவே, ``இலங்கை தமிழர்கள் மானத்தோடு வாழ `சுதந்திர தமிழ் ஈழம்'தான் ஒரே வழி'' என்று மாநாடு கூட்டி அறிவித்தார்.

அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் போடப்பட்ட தீர்மானம் இது.

இலங்கையின் வரலாறு

``தமிழர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இலங்கைக்குப் போனவர்கள்தானே! அவர்கள் தனிநாடு கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?'' என்று இன்றும் பலர் கேட்கிறார்கள். அவர்கள் இலங்கையின் வரலாற்றை அறியாதவர்கள்.

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள். இலங்கையின் "மண்ணின் மைந்தர்கள்.'' தமிழ் மன்னர்கள் பலர் இலங்கையை ஆண்டிருக்கிறார்கள். இது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

குமரி முனைக்கு தெற்கே உள்ள இந்து மகா சமுத்திரம் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்றும், அது லெமூரியா (குமரிக்கண்டம்) என்று அழைக்கப்பட்டது என்றும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

``லெமூரியா கடலில் மூழ்கி விட்டது. அப்போது தமிழ்நாட்டுடன் இலங்கையும் ஒட்டிக் கொண்டிருந்தது. நாளடைவில் தனி தீவாகப் பிரிந்து விட்டது'' என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல் ஆழமின்றி இருப்பதற்கு இதுதான் காரணம்.

ஆதாரங்கள்

 

 

திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 15 மைல் தூரத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில், 1876-ல் பூமியைத் தோண்டி நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பலவகையான மண் பாண்டங்கள் கிடைத்தன. அவை சூளையில் நன்றாக வேக வைக்கப்பட்டு, நல்ல மெருகுடன் காணப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்களை வைத்து புதைப்பதற்கான ``தாழி''கள் இவை.

இதேபோன்ற ``தாழி''கள், இலங்கையின் வடபகுதியிலும் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, புராதன தமிழர்கள் உபயோகித்த பல நாணயங்கள், அரச இலட்சினைகள், முதலானவை இலங்கையின் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.


சுருக்கமாகச் சொன்னால், பழைய கற்காலத்திலும், புதிய கற்காலத்திலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் எத்தகைய நடை- உடை- பாவனையுடன் வாழ்ந்தார்களோ, அதே மாதிரிதான் இலங்கைத் தமிழர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்கும் `தொப்புள் கொடி' உறவு இருந்திருக்கிறது.

வரலாறு கூறுவது என்ன?

 

 

  

இலங்கையில், புத்தமதம் பரவுவதற்கு முன் சிவ வழிபாடுதான் நடந்து வந்திருக்கிறது. பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சிவன் சிலைகளும், நந்தி சிலைகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. சிவனை வழிபட்டவர்கள் தமிழர்கள்தான்; சிங்களர்கள் அல்ல.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆட்சி புரிந்த மவுரிய பேரரசன் அசோகன், கலிங்கப் போரின் முடிவில் பவுத்த மதத்தைத் தழுவினார். அவர் புத்த மதத்தை பரப்புவதற்காக, மகிந்த தேரே என்ற புத்த மத குரு தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பினார். அக்குழு இலங்கைக்கு வந்தபோது, அனுராதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் பெயர் திசையன் என்றும், அசோகன் விருப்பப்படி அவன் புத்தமதத்தை தழுவினான் என்றும், அவனுக்கு ``தேவ நம்பி'' என்ற பட்டத்தை அசோகர் வழங்கினார் என்றும், பாலி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 வருடங்கள், அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினார்கள் என்று அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று ராஜ்ஜியங்கள்

ஆதிகாலத்தில், இலங்கை ஒரே நாடாக இருந்தது இல்லை. பல அரசர்களும், சிற்றரசர்களும் குறிப்பிட்ட பகுதிகளை ஆண்டு வந்தனர்.
ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வந்தபோது, இலங்கையில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன:

( 1 ) தென் கோடியில், கொழும்பு பகுதியை உள்ளடக்கிய கோட்டை ராஜ்ஜியம். இந்த கோட்டையை ஏற்படுத்தியவனே அழகுக்கோன் என்ற தமிழன்.
( 2 ) கண்டி ராஜ்ஜியம்.
( 3 ) யாழ்ப்பாண ராஜ்ஜியம்.

இவற்றில் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை எக்காலத்திலும் சிங்களர்கள் ஆண்டது இல்லை. கோட்டையையும் கண்டியையும் தமிழர்களும், சிங்களர்களும் மாறி மாறி ஆண்டு வந்திருக்கிறார்கள்.

பல ராஜ்ஜியங்களாக இருந்த இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், இலங்கையையும் ஒரே நாடாக மாற்றினார்கள். சிலோன் (இலங்கை) என்ற பெயரையும் சூட்டினார்கள்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails