Monday, June 22, 2009

தலைவர் பிரபாகரனை கொன்றது தளபதி பொட்டு அம்மான்?புதுத்தகவல்

தலைவர் பிரபாகரனை கொன்றது தளபதி பொட்டு அம்மான்?புதுத்தகவல் பரப்பப்பட்டு உள்ளது.இது போன்ற இன்னும் சிந்துபாத் கதைகள் நிறையவே வரும்.உறவுகள் படித்து இந்த கிறுக்கர்களின் கிறுக்கு தனத்தை அறிந்துகொள்ளுங்கள்.நாள் வரும் அன்று இதற்கெல்லாம் பதில் சொல்லுவோம்
 
 


கொழும்பு, ஜுன்.23-

பிரபாகரன் மரணம் அடைந்தது எப்படி? என்பது குறித்து இலங்கை ராணுவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

பிரபாகரன் மரணம்

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள வெள்ளமுல்லி வாய்க்கால் பகுதியில் கடந்த மாதம் 18, 19 தேதிகளில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. இதில் விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர்.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் பிணமாக கிடக்கும் படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டது.

அதன் பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகள் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டு விட்டதாக ராணுவம் அறிவித்தது. அவர்களில் பிரபாகரனின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் உடல் கைப்பற்றப்பட்ட காட்சிகளை வீடியோவாக எடுத்து ஒளிபரப்பியது.

பின்னர் பிரபாகரனின் முன்னாள் நண்பரான கருணாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து ராணுவத்திடம் சரண் அடைந்தவருமான தயா மாஸ்டர் ஆகியோர் கொழும்பில் இருந்து வன்னி பகுதிக்கு சென்று பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டினார்கள். இதையடுத்து அவர் உடல் பரிசோதனைக்கு பிறகு எரிக்கப்பட்டு சாம்பல் வங்காள கடலில் கரைக்கப்பட்டு விட்டதாக ராணுவ தளபதி பொன்சேகா அறிவித்தார்.

பிரபாகரன் சாகவில்லை என்று முதலில் கூறிவந்த விடுதலைப்புலி இயக்கமும் சமீபத்தில் தனது அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு, பிரபாகரன் போரில் வீரமரணம் அடைந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டது.

சந்தேகங்கள்

இதையடுத்து பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை ஓய்ந்து விட்டதாக கருதப்படும் நிலையில் இப்போது ராணுவத்தின் தரப்பில் புதிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. பிரபாகரன் எப்படி இறந்தார்? என்பதில் பலவிதமான கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்றும் அவர் ராணுவ தாக்குதலில் உயிர் இழக்க வில்லை, அவருடன் கூடவே இருந்த ஒரு நபர்தான் அவரை சுட்டுக்கொன்று இருக்க வேண்டும் என்றும் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் `ஏசியன் டிரிபிïன்' என்ற ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

நெருக்கமான நபர்

"பிரபாகரனின் மரணம் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக இறுதி கட்ட போரில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளிடம் விசாரித்த போது அவர்கள் சில சந்தேகங்களை வெளியிட்டனர்.

பிரபாகரன் மிக நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டுள்ளார். அவரை சுட்ட நபர் முன்பக்கத்தில் நின்று சுடவில்லை. பிரபாகரனின் பின் பக்கத்தில் நின்று அவருடைய தலையின் பின்பகுதியில் சுட்டு இருக்கிறார். பிரபாகரன் ராணுவத்துடன் நேருக்குநேர் நடந்த சண்டையில் இறந்து இருந்தால் அவருடைய தலையின் பின் பகுதியில் குண்டு பாய்ந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான, அவருடைய முழுநம்பிக்கைக்கு உரிய, எந்தவித சந்தேகத்துக்கும் உள்ளாகாத ஒரு நபர்தான் இப்படி நெருக்கத்தில் நின்று அவரை சுட்டு இருக்க முடியும்.

கமாண்டோ வீரர்களின் பாதுகாப்பு அரண்

ஏனென்றால் பிரபாகரனை சுற்றி 300 பேர் அடங்கிய தற்கொலை படை எப்போதும் காவல் நிற்கும். அவர்களை தாண்டி எந்த நபரும் பிரபாகரனை நெருங்கவே முடியாது. அந்த படையில் உள்ள அனைவரும் பிரபாகரனால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள். அவருடைய முழு நம்பிக்கைக்கு உரிய கமாண்டோ வீரர்கள். அவர்களுடைய செயல்பாட்டில் பிரபாகரன் எள்ளளவுக்கு கூட சந்தேகப்பட்டது இல்லை. எனவே கொலைகாரன் வெளிநபராக இருக்க வாய்ப்பே இல்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள ஒரு நபரால்தான் பிரபாகரன் கொல்லப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் முன்பின் தெரியாத ஒரு நபர் பிரபாகரனின் பின் பக்கத்தில் நின்று அவரை சுட்டுக்கொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கமாண்டோ வீரர்களை தாண்டி சென்று பிரபாகரனை நெருங்கக்கூடிய அளவுக்கு அதிகார பலம் உள்ளதோடு பிரபாகரனுக்கு நிழலாக இருக்கக்கூடிய அளவுக்கு செல்வாக்கு பெற்ற ஒருவரால்தான் இப்படி மிகமிக நெருக்கமாக நின்று தலையின் பின்பக்கத்தில் சுட்டு இருக்க முடியும்.

யார் அவர்?

இவ்வளவு தகுதிக்கும் உரிய நபர் யார் என்று ஆய்வு செய்ததில் அவர் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மானாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வருகிறது.

பொட்டு அம்மானின் உண்மையான பெயர் சண்முகநாதன் சிவசங்கரன். இவர் உளவுப்பிரிவுக்கு வரும் முன்பு கரும்புலிகள் அமைப்பின் தலைவராக இருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எத்தனையோ தளபதிகள் இருந்தாலும் பிரபாகரன் பொட்டு அம்மான் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருந்தார். பிரபாகரன் எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதை பொட்டு அம்மான் மூலமாகத்தான் செய்து முடிப்பது வழக்கம்.

ஏப்ரல் மாத இறுதியில் விடுதலைப்புலிகளின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், `தமிழ் ஈழ கனவு சீர்குலைந்து போய் விட்டதே' என்று பொட்டு அம்மான் மன வெறுப்பு அடைந்து இருக்க வேண்டும். அந்த கோபத்தில் இருந்த அவர் கடைசி நேரத்தில் தன்னை காப்பாற்றி கொள்ளும் நோக்கத்தில் பிரபாகரனை பின்பக்கத்தில் நின்று சுட்டுக்கொன்று இருக்க வேண்டும். அதன்பிறகு அங்கிருந்து தப்பி சென்று இருக்க வேண்டும். தன்னை காப்பாற்றி கொள்வதற்காக அவர் துரோகியாக மாறி இருக்கிறார்.

ராணுவத்துக்கு தகவல்

பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு யாரோ ஒரு நபர் ராணுவத்துடன் தொடர்பு கொண்டு பிரபாகரன் இறந்து விட்ட தகவலை தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமின்றி பிரபாகரன் உடல் எந்த இடத்தில் கிடக்கிறது என்ற விவரத்தையும் கூறியிருக்கிறார்.

உடனடியாக ராணுவம் சம்பவ இடத்துக்கு சென்று பிரபாகரன் உடலை கைப்பற்றி இருக்கிறது. அப்போது கூட ராணுவம் அது பிரபாகரன் உடல்தான் என்பதை நம்பவில்லை. கருணாவை வரவழைத்து அவர் கருத்தை கேட்ட பிறகே பிரபாகரன் உடலை உறுதி செய்தது.

பொட்டு அம்மான் எங்கே?

பொட்டு அம்மான் போரில் இறந்து விட்டதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அவருடைய உடல் இதுவரை கைப்பற்றப்பட வில்லை. அவர் இறந்து விட்டாரா? அல்லது உயிரோடு இருக்கிறாரா? உயிரோடு இருந்தால் எங்கே இருக்கிறார்? அவருடைய நோக்கம் என்ன? என்பது விடை காண முடியாத கேள்விகளாக உள்ளன.''

இவ்வாறு ஏசியன் டிரிபிïன் தனது செய்தியில் கூறியிருக்கிறது.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails