இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க பான் கி மூன் வலியுறுத்தல்
இலங்கையில் ராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் செய்த போர்க் குற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை தமிழ் மக்களின் தோல்வி என கருதி இலங்கை அரசு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பான் கி மூன் பேசினார். இலங்கை விவகாரம் குறித்து அவர் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் நீடித்து நடந்த இனப் போரின்போது இரு தரப்பும் போர்க் குற்றங்கள் செய்திருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே இதுகுறித்து விரிவான போர்க் குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்
சர்வதேச அளவில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும். எப்படிப்பட்ட முறையில் இது அமைய வேண்டும் என்பதை நான் விவரிக்க விரும்பவில்லை. இருப்பினும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள், மனித உரிமை நியதிகள் மீறல் உள்ளிட்டவை குறித்த முக்கியமான புகார்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
எந்த விசாரணையாக இருந்தாலும் அது அர்த்தப்பூர்வமாக இருக்க வேண்டும். ஐ.நா. உறுப்பினர்களின் ஆதரவுடன் அது நடைபெற வேண்டும். பாரபட்சமில்லாமலும் அந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இனப் போர் குறித்த விவகாரத்தில் நம்பகத்தன்மையுடனும், ஒளிவுமறைவில்லாமலும் இலங்கை அரசு நடந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக சர்வதேச அளவில் விடப்படும் கோரிக்கைகளை அது மதிக்க வேண்டும்.
எங்கெல்லாம் மனித உரிமைகள், மனிதாபிமான நியதிகள் மீறப்படுவதாக புகார்கள் வருகின்றனவோ அப்போதெல்லாம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.
அதேபோல விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றியை ஆர்ப்பாட்டமாக கொண்டாடுவதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும். இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல. மாறாக, காயப்பட்டுப் போன அப்பாவி மக்களின் மன வலியை, உடல் காயத்தை ஆற்ற வேண்டிய நேரம், ஆறுதலாக இருக்க வேண்டிய தருணம்.
அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்துவதில்தான் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும். போரினால் ஏற்பட்ட வடுக்களை அகற்றும் முயற்சியில்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அப்படி இல்லாமல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது நல்லதல்ல என இலங்கை அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.
நான் கொழும்பு சென்றிருந்தபோது, இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள 3 லட்சம் தமிழர்களுக்கும் தேவையான மனிதாபிமான உதவிகளை அரசு உரிய முறையில் செய்ய வேண்டும் என்று அதிபர் ராஜபக்சேவை வலியுறுத்தினேன். அவர்களை மீள் குடியமர்த்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
நான் அங்கு சென்று வந்ததற்குப் பின்னர் மக்களின் நிலைமை மேம்பட்டுள்ளதாக எனக்கு இலங்கை அரசு தகவல் கூறியுள்ளது.
இருப்பினும் சவால்கள் இன்னும் பெரிதாகவே உள்ளன. இதற்கு இலங்கை அரசால் மட்டும் தீர்வு காண முடியாது. சர்வதேச அளவிலான உதவிகளும் தேவை என்றார்.
20,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை ராணுவம் கொன்று தீர்த்தது குறித்து பான் எதுவும் குறிப்பிடவில்லை.
No comments:
Post a Comment