Monday, June 22, 2009

போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. (தமிழீழ தேசியத் தலைவர்.)

தமிழீழ உறவுகளே ஒரு நிமிடம்.

 

இந்த 2009ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எம்மினத்தின் அழிவு அதிகரிக்கத் தொடங்கி, இருபதாயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுடனும், கணக்கிடமுடியா சொத்திழப்புகளுடனும் போர் முடிவுக்குவந்ததாக சிறிலங்கா பேரினவாத அரசு அறிவித்தது. அத்தோடு முப்பதாயிரம் வரையானவர்கள் உடலுறுப்புக்களை இழந்திருக்கிறார்கள்.

ஆனால் எத்தனை பேர் இது வரை காணாமல் போனார்கள், எத்தனைபேர் பாலியல்; வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்கள், இன்னும் எத்தனைபேர் உளநலம் பாதிப்படைந்தார்கள் என்பதெல்லாம் தெரியாத கணக்காகவே இருக்க!

தமிழன் தன் தாய் மண்ணையும், பல மாவீரர்களையும் இழந்திருக்கும் நிலையில் இருக்க!

உலகமோ, அழிக்கும் பௌத்த அரசின் பின்னால் நிற்க!

காந்தீயம் காசு நோட்டில் மட்டும் இருந்து சிரிக்க!

புலம் பெயர் நாடுகளிலெல்லாம் உண்ணாவிரதங்களும் வழி மறிப்புப் போராட்டங்களும் நடந்து கொண்டிருக்க!

சில மனிதர்கள் மட்டும் தாங்கள் ஏதோ வேற்றுக்கிரக மனிதர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்.

தமிழனுக்கு 2009ம் ஆண்டே ஒரு துக்க ஆண்டாகத்தான் இருக்கவேண்டும்.

ஆறாத துன்பத்தில் ஈழத்தில் மக்கள் இருக்க, புலம் பெயர் நாடுகளில் தமிழன் தனக்கு நடந்ததை எல்லாம் மறக்கத் தொடங்கிவிட்டான்.
மீண்டும் கோடைகாலக் கொண்டாட்டங்கள், களியாட்டங்கள் ,மலிவு விற்பனை என்பன கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்துவிட்டன.

சிறிலங்கா அரசால் படு கொலைசெய்யப்பட்ட உடலங்கள் எரிக்கப்படவோ தாக்கப்படவோ இல்லாமல் அழுகிக் கொண்டிருக்க,

எரி குண்டுகளால் எரிந்தும் எரியாத பிணங்களின் புகைப்படங்கள் இன்னும் கண்களில் தெரிய! மருந்தும், பாலும், ஏன் நீர் கூட இல்லாமல் இறந்த குழந்தைகளின் ஒளிப்படங்கள் இன்னும் கண்களில் மறையாமல் இருக்க, எப்படித் உறவுகளே உங்களால் கொண்டாட்டங்கள் செய்ய முடிகின்றன.

"ஊர் கூடித் தேர் இழுத்து" என்ற ஓர் வாசகம் தமிழில் உண்டு. ஈழத்தில் ஊர் ஊராய் தமிழன் இறந்து போனான். இன்னும் இறந்து கொண்டிருக்கிறான், இன்னும் இறப்பான். பெண்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படியான சூழ் நிலையில் எப்படி உங்களால் தேர் இழுக்க முடிகிறது புலம் பெயர் தேசத்தில்!

ஏதோ மனச்சாந்தி, இறந்தவர் ஆத்ம சாந்தி என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே காரணம் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் தமழிர்களே!

மன்னிப்பதும் மறப்பதும் மனித குணம் என்றும் சொல்லலாம். ஆனால் எமது எதிரி எம்மை என்றும் மறந்தது கிடையாது.

அவன் ஆட்சிக்கு வந்தாலும் மறக்காமல் எம்மைக் கொல்கிறான். எம் இனத்தை அழிக்கும் விடயத்தில் தங்கள் பேதங்கள் பகைமைகள் எல்லாவற்றையும் மறந்து ஒற்றுமையாக இருக்கிறான். ஆனால் அழிவின் பின்பும் நாம் தான் பிழவு பட்டு நிற்கிறோம்;.
இன்னும் ஒரு படி மேலே போய் சந்தோசமாக இருக்க நாம் முயற்சியும் செய்கிறோம். அடிவிழுந்த காயம் ஆறுமுன்னே! திருவிழாவும், தேரும் இழுக்கத் தொடங்கிவிட்டோம். நம்மைப் பார்க்கும் வேற்றினத்தவன் நம்மைப்பற்றி என்ன விளக்கம் கொள்வான்! போனவாரம் பட்டினிப் போராட்டம், இந்த வாரம் கோவிலில் அன்னதானம்.

என்ன இனம் இந்த இனம் என்று எண்ணமாட்டானா?

போனவாரம் வரை மக்கள் அழுத-அலறிய ஒளிக்காட்சிகளைப் பார்த்தமக்கள், இன்று விழாக்கோலம் போடத் தொடங்கிவிட்டனர்.

போர் முடிந்தது என்ற எண்ணிவிட்டோமா? அல்லது ஈழம் தான் கிடைத்துவிட்டது என்று எண்ணிவிட்டோமா?

மறைந்த தமிழன் எத்தனை என்று இன்னமும் தெரியவில்லை. தன்னுயிர் ஈர்ந்த மாவீரர்களின் விபரங்கள் இன்னமும் தெரியவில்லை. முகாம்களில் கைதாகும் இளவயதினர் எங்கு எடுத்துச் செல்லப்படுகின்றார்கள், என்ன ஆகின்றார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை. காயமடைந்து வந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதும் தெரியவில்லை.

இப்படி எதுவுமே வெளிவராமல் இருக்க எப்படி எம்மால் எல்லாவற்றையும் மறக்க முடிகிறது.

உறவுகளே அழும் காலமல்ல இது?
நீங்கள் அழுது அழுது உங்கள் துயரங்களை ஆற்றிக் கொள்ள வேண்டாம்.

"அந்நியன்"; என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி.

பிரகாஷ்ராஜின் தமையனை கொதிக்கும் எண்ணையில் போட்டு கொன்று விடுவான் அந்நியன். இதை அறிந்த பிரகாஷ்ராஜ் அழாமலேயே இருப்பார். தாய் சொல்லுவாள் நீ அழவே இல்லையே என்று. அதற்கு அவர் சொல்லுவார் "அழுதால் துக்கம் வெளியில் போய்விடும் – துக்கம் வெளியில் போனால் கோபம் கலைந்து விடும் – துக்கம் வெளியில் போகக் கூடாது – மனதுக்குள்ளேயே தேக்கிவைக்கிறேன் என்று"

அதே போல் உங்கள் கோபங்கள் வெறியாக மாறவேண்டும். அது இந்த சர்வதேச மௌனிகளின் இதயத்தை திறக்கவேண்டும்.
இனப்படுகொலை நடந்தது என்பதை, நடக்கிறது என்பதை இங்குள்ள மக்களுக்கும், மந்திரிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். மக்கள் துயரங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும். கைதானவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தரப்படவேண்டும். அகதி முகாம்களில் அவதிப்படும் மக்களுக்கு மறு வாழ்வு வழங்கப்படவேண்டும்.

இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழனுக்கு ஒரு நல்லாட்சி, சுய ஆட்சி, அமைய வேண்டும்.
இப்படி எவ்வளவோ செய்ய இருக்க நாங்கள் எமது கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், தேரோட்டங்கள், மலிவு விற்பனை என்று நமது மனங்களை மாற்றுச் செயல்களில் செல்ல அனுமதிக்க வேண்டாம். அத்தோடு எமது நேரத்தையும் பணத்தையும் அதற்கு செலவு செய்யவும் வேண்டாம்.

நாம் பறி கொடுத்த உயிர்களுக்கு, நாம் வளங்கும் மரியாதை இதுவாகத்தான் இருக்கும்;.
தம் உயிரை ஈகம் தந்த மாவீரருக்குச் செய்யும் வணக்கமும் இதுதான்.

அந்நிய மண்ணில் நாம் மகிழ்ச்சியாக இருந்தால், அதை, எதிரி எடுத்துக் காட்டும் உதாரணமாகவும் மாறக் கூடும்.

ஆகவே உறவுகளே! கொண்டாட்டங்கள் இப்போது வேண்டாம்.
கனவுகள் நனவாகும் காலத்தில் அவற்றை பல மடங்கு பெரிதாகச் செய்வோம்.
அது வரை தமிழீழ தேசத்திற்காக உழைப்போம் உழைப்போம் உழைப்போம்.

போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. (தமிழீழ தேசியத் தலைவர்.)
பிரான்சிலிருந்து ரத்னா.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails