Saturday, June 27, 2009

தமிழீழ மக்களவையின் இன்றைய முக்கியத்துவம் என்ன?

 

"புலத்து தமிழர்கள் குறிப்பாகப் புலத்து இளையோர் தமிழீழ மக்களவையாகச் செயற்பட்டு புதிய வடிவில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலமாற்றம் ஏற்படுகிறது என்பதைத் தேசியத்தலைவர் அவர்கள் கடந்த மாவீரர் தின உரையின் முடிவில் போராட்ட வடிவம் புதிய வடிவில் மாறும் என எதிர்வு கூறியிருந்தமையை ஒரு அழைப்பாகவே கருதி இன்று புலத்து மக்கள் ஒன்றாகத் தமிழீழ மக்களவையாகச் செயற்பட வேண்டிய பொறுப்பு மிகு நேரமிது."

தமிழீழ மக்களவையின் இன்றைய முக்கியத்துவம் என்ன?

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் முதன்மைக் கவனத்திற்குரிய பிரச்சினையாகச் சிறிலங்காவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகித் தவிக்கும் வன்னித் தமிழீழ மக்களின் பிரச்சினை விளங்குகிறது. அதீத மனிதாய தேவையில் அந்த மக்கள் உள்ள நிலை அனைவராலும் உணரப்படுகிறது.

இந்நிலையில் அம்மக்களுக்கான சர்வதேச சட்டங்களுக்குரிய உதவிகளைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச அரசுக்களுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் தாராண்மைவாத ஜனநாயகவழிகளில் போராடும் உரிமை புலத்து தமிழர்களுக்கு உண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் சக்தி ஒருங்கிணைவதற்குத் தமிழீழ மக்களவை காலத்தின் தேவையாகிறது.

அடுத்து தமிழீழ மக்கள் தமக்கான அரசியல் உரிமைகளை ஜனநாயகவழிகளில் கேட்ட பொழுது சிங்கள பௌத்த பேரினவாத அரசு - அரச பயங்கரவாதத்தினால் தமிழர்களை இனஅழிப்புச் செய்து அடிமைப்படுத்தத் தொடங்கியது வரலாறாக உள்ளது. 1970 முதல் 1978 வரை சிங்களஅரசு பொலிசாரையே இராணுவமாகச் செயற்பட வைத்து தமிழர்களை அழித்தது. பின்னர் தனது இராணுவத்தைக் கொண்டு தமிழ் மக்கள் மேலான யுத்தத்தினை நடத்தி தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்புச் செய்தது.

இதிலிருந்து தங்கள் உயிர்களையும் உடமைகளையும் தேசத்தையும் காக்கத் தமிழர்கள் தேசிய விடுதலைப்போராட்டத்தை ஆயுத எதிர்ப்பாக முன்னெடுத்து தங்களுக்கான நடைமுறை அரசை தமிழீழத் தேசியத் தலைமையைத் தோற்றுவித்தனர். இதனை தமிழர்கள் மேலான இனஅழிப்பின் மூலம் சிறிலங்கா அழித்து தமிழீழம் என்கிற தமிழர் தாயகத்தை சிங்கள பூமியின் நீட்சியெனக் காட்ட முற்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் பேசமுடியாதவாறு ஆயுதமுனையில் வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் உரிமை கேட்ட ஒரு இனத்தின் எல்லா உரிமைகளுமே பறிக்கப்பட்டு அவர்கள் 21ம் நூற்றாண்டின் கொத்தடிமைகளாகச் சிறிலங்காவால் மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்தத் தமிழீழ மக்களின் அரசியல் குரலாகவும் அடையாளமாகவும் மனிதாயத்தேவைகளை வெளிப்படுத்தும் நிறுவனமாகவும் இலங்குவதற்கு அவர்களின் அனைத்துலக நீட்சியான புலம்பெயர் தமிழீழ மக்களுக்கு தமிழீழ மக்களவை உடனடித்தேவையாகிறது.

தூயகம் தேசியம் தன்னாட்சி என்னும் தமிழீழ மக்களின் அடிப்படை தன்மைகளைப் பேணி இதனை சிறிலங்கா ஒருநாளும் ஏற்காத நிலையில் தமிழீழத் தனியரசே அம்மக்களுக்கான பாதுகாப்பை அமைதியை அளிக்கும் அரசாக முடியும் என்பதைத் தமிழீழத் தேசியத் தலமையின் வழி உலகுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பும் தமிழீழ மக்களவைக்கு உண்டு.

இன்று சிறிலங்கா செய்துள்ள இனஅழிப்பும் தொடர்கின்ற பகைநாட்டவரை வென்றமை போன்ற வெற்றிக்கூத்தும் தமிழீழ மக்களால் இனியும் சிறிலங்காவென்னும் அரசின் கீழ் வாழ இயலாது என்பதை உலகுக்கு தெளிவாக்கியுள்ளது. இருப்பினும் உலகநாடுகள் தமது சந்தைநலன்களுக்கும் இராணுவநலன்களுக்கும் முக்கியத்துவம் அளித்து அரசு என்னும் தகைமையைப் பெறாத நிலையில் உள்ள உலகின் தொன்மைமிகு தமிழீழ மக்களின் நலன்களைப் புறந்தள்ளி சிறிலங்காவை அதனுடைய சர்வதேசயுத்தக் குற்றச்செயல்களைக் கூட விசாரணைகள் செய்யாது ஏற்று உதவுகின்றன.

இந்நிலையில் அனைத்துலக மட்டத்தில் சர்வதேச மக்களின் துணையுடன் தராண்மைவாத ஜனநாயக வழியில் புலம்பெயர் தமிழர்கள் தமிழீழ மக்களின் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர்கள் அனைவரையும் அடிமட்டத்தில் இணைக்கின்ற தமிழீழ மக்களவை அவசியமாகிறது. தமிழ்த்தேசியத் தலைமையின் இலக்குகளை நிறைவேற்றும் மக்களவையாக தமிழீழ மக்களவை திகழ வேண்டியது இதன் முக்கியத்துவமாகிறது.

இன்றைய மனிதாயத் தேவைகளை தமிழீழ மக்களவை எவ்வாறு வெளிப்படுத்தலாம்?

வன்னியில் தமிழீழ மக்கள் உணவு சுத்தமான குடிநீர் மருத்துவ வசதிகள் அவர்கள் உடல் நலத்துடன் வாழ்வதற்கான ஆகக்குறைந்த வாழ்விடவெளி மற்றும் மலசலகூட வசதிகள் ஏதுமின்றி துடிக்கின்றனர் அல்லது மிகமிகக்குறைந்த அளவில் இவற்றைப் பெற்ற நிலையில் தவிக்கின்றனர். பாலியல் வன்முறைகளும் இனங்காணக்கூடிய அச்சங்களும் பேச்சு மற்றும் நடமாடும் சுதந்திர மறுப்புகளும் மட்டுமின்றி விரும்பியவாறு சிறிலங்காப்படைகளால் விசாரணை என்ற பெயரிலும் பரிசோதனை என்ற வடிவிலும் வதைக்கப்படும் அவலமும் இந்த மக்களின் நாளாந்த வாழ்வாக உள்ளது.

ஹிட்லரால் உருவாக்கப்பட்ட வதைமுகாங்களின் 21ம் நூற்றாண்டின் மறுபிறப்பாகக் காட்சியளிக்கும் இந்த முட்கம்பி தடுப்பு வெளிகளில் சுத்தமான நீர் காற்று போதிய உணவு தேவையான மருத்துவம் என்பன திட்டமிட்டமுறையில் சிறிலங்கா அரசாங்கத்தால் தடுக்கப்படுவதால் அல்லது தாமதப்படுத்தப்படுவதால் சிறிலங்காவின் இச்செயல்கள் இனஅழிப்புக்கான நோக்கையும் போக்கையும் கொண்டதென உலக மனிதாய நிறுவனங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.

இந்நிலையில் இங்கு மக்கள் பட்டினியால் செத்தால் அதற்கு ஐக்கியநாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று சிறிலங்காவின் அமைச்சரே பகிரங்கமாக அறிவித்தும் உள்ளார். இதன்வழி இந்த மக்கள் மேலான தங்கள் பொறுப்பைச் சிறிலங்கா அரசாங்கம் மறுப்பதினால் இந்த மக்கள் மேலான இறைமையையும் சிறிலங்கா தானாகவே இழந்துநிற்கிறது. இதனால் நாடற்ற தேச மக்களாக உள்ள இந்த மக்களுக்கான மனிதாயத் தேவைகளை உடன் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த மக்களின் வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சர்வதேச அமைப்புக்களினதும் நாடுகளினதுமாக மாறியுள்ளது.

ஆயினும் தங்களின் இராணுவ சந்தைத் தன்னலங்களால் சர்வதேச நிறுவனங்களும் அனைத்துலக நாடுகளும் இம்மக்கள் குறித்த தங்களின் கடமையை கைவிட்டுள்ளமை இன்றைய நிலையாக உள்ளது. இந்நிலையில் புலத்துத் தமிழ் மக்களே இவர்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் வளத்துக்குமான பாதுகாப்பைச் சர்வதேச முறைமைகள் மூலமாக வழங்கச்செய்வதற்கான பாரிய மனிதாயக் கடமையைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.

அதற்கான பணித்தளமாக மக்கள் தம்முள் இணைவை செயற்பாடுகளை செய்யவென தற்பொழுது தமிழீழ மக்களவைகளை அமைக்கத் தொடங்கியுள்ளனர். வெற்றுப்பேச்சை விடுத்து செயல்வழி வாழ்வினை உருவாக்க வேண்டிய காலத்தின் தேவையே இந்த மக்கள் அவைகள்.

சர்வதேச மட்டத்தில் தமிழீழ மக்களவையின் செயற்பாட்டின் அவசியம் எந்த அளவுக்கு முக்கியமானதாகிறது?

தமிழீழ மக்களின் மேலான சிறிலங்காவின் இராணுவ ஆக்கிரமிப்பை அதன் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கான நடவடிக்கையென சர்வதேச நாடுகள் நியாயப்படுத்துவதனால் தமிழீழ மக்கள் மேல் சிறிலங்கா நடத்திய இனஅழிப்பு இனத்துடைப்பு மற்றும் யுத்தக்குற்றச் செயல்கள் என்பன குறித்த விசாரணைகளைக் கூட சர்வதேச அமைப்புக்கள் உரிய நேரத்தில் செய்யாது உள்ளன.

இதனால் தங்களுக்கு நீதி கிடைக்காதநிலையில் பாதிப்புற்ற மக்கள் புனர்வாழ்வு பெறுவதற்கான உள்ளத்தையோ உறுதியையோ அடைய முடியாது உளச்சோர்வுக்கும் மனஅழுத்தங்களுக்கும் ஆளாகி தவிக்கின்றனர். இந்நிலையில் இந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவதற்கான முயற்சிகளை எடுத்ததன் பின்னரே சிறிலங்காவிற்கான நிதி மற்றும் திட்ட உதவிகளைச் சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் வழங்க வேண்டுமென வலியுறுத்த வேண்டியவர்களாகப் புலத்துத் தமிழர்கள் உள்ளனர்.

இதற்கான நீதியின் குரலாகப் புலத்து மக்கள் தமிழீழ மக்களவைகளை அமைத்துச் செயற்பட வேண்டிய அவசியம் இன்று உள்ளது. அத்துடன் நீதி சமத்துவம் விருப்புத்தெரிவு என்பன புறக்கணிக்கப்பட்டுத் தவிக்கும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அம் மக்கள் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தை எவ்வாறு நிர்ணயிக்க விரும்புகிறார்கள் என்ற மக்கள் விருப்பை தெரிவிக்கும் குடியொப்பம் ஒன்று சர்வதேச அமைப்பினால் நடாத்தப்பட்டாலே இனியும் சிறிலங்கா அந்தத் தமிழீழ மக்களின் அரசாகத் தொடரும் உரிமை உண்டா இல்லையா என்பதை தெளிவுபடுத்த முடியும். இந்த சர்வதேசக் குடியொப்பத்திற்கான அழுத்தத்தை சர்வதேச மட்டத்தில் மேற்கொள்வதற்கு தமிழீழ மக்களவை மிகவும் முக்கியமான தேவையாகிறது.

பாதுகாப்பதற்கான பொறுப்பு ( Responsibility to Protect R2P) என்னும் ஐ நா வின் கடமைப்பொறுப்பை கையாளாத் தவறியமைக்கு மக்களவை என்ன செய்யலாம்?

உலகின் மற்றயை நாடுகளில் அதீத மனிதாய தேவைகளுக்கு மக்கள் உள்ளான நேரங்களில் அந்த அந்த நாட்டு அரசாங்கங்களின் இறைமைகளை மீறி அவ்வாறு பாதிப்புற்ற மக்களுக்கு நேரடியாக மனிதாய உதவிகளைச் செய்த சர்வதேச அமைப்புக்களும் அரசாங்கங்களும் இன்று உலக மனித வரலாறே காணாத மனிதாய தேவைகளுக்கு உள்ளாகி நிற்கும் வன்னித் தமிழ் மக்களுக்கு இதுவரை ஏற்புடைய நேரடி மனிதாய உதவிகள் எதனையும் சர்வதேச அமைப்புக்கள் நாடுகள் செய்யவில்லை.

மேலும், பாதுகாப்பதற்கான பொறுப்பு ( Responsibility to Protect R2P) என்னும் ஐ நா வின் கடமைப்பொறுப்பை உள் நாட்டுப் பிரச்சினை என்ற பார்வையிலும் நாடொன்று முன்னெடுக்கவில்லை என்ற தன்மையிலும் ஐ நா செயற்படுத்தாமல் விட்டதினால் பட்டினி மரணங்களுக்கும் வைத்தியாலைகள் மற்றும் மக்கள் மேலான சிறிலங்காவின் தாக்குதல்களால் ஏற்பட்ட மரணங்களுக்கும் ஐ நா வும் கூட்டுப்பொறுப்பு என்னும் வரலாறு பதிவாகி விட்டது.

இந்த ஐ நாவினதும் அனைத்துலக நாடுகளினதும் பாகுபாடான போக்கைப் பகிரங்கப்படுத்தி பாதிப்புற்றுள்ள தமிழீழ மக்களுக்கு இவ்வமைப்புகளை நாடுகளை உடன் உதவவைக்க வேண்டிய பணிகளைச் செய்யும் பணித்தளமாக இந்த மக்கள் அவைகள் செயற்பட வேண்டிய நேரமிது.

புலத்தில் மக்கள் வாழும் பகுதிகளில் மக்களவையின் செயற்பாடுகள் எவ்வாறு அமையலாம்?

நாம் வாழும் நாட்டின் ஊடகங்கள் நமது பகுதிகளில் உள்ள வர்த்தக மற்றும் சமுக நிறுவனங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நகரசபை அங்கத்தவர்கள் சமயத்தலைவர்கள் பல்தேசியநிறுவனங்கள் என்பவற்றுக்கு எமது மக்களின் நிலையையும் சிறிலங்காவின் இனஅழிப்பு அரசியலையும் தெளிவாக்க மக்கள் அவைகள் வழி நாம் அனைவரும் அணிதிரள வேண்டிய நிலை உள்ளது.

சிறிலங்கா இன்று என்னத்தைச் செய்துள்ளது? எமது மக்களை எமது தாயகத்தை இராணு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கி இனஅழிப்பும் கட்டுமானச் சிதைப்பும் செய்கிறது. அவர்களுடைய அரசியல் பணிவை படைபலம் கொண்டு பெறுகின்றனர். இவ்வாறு மக்களின் விருப்பைப் பலவந்தமாகப் பெறும் ஒரு அரசுடைய இறைமையை அந்த அரசு தானாகவே இழக்கிறது. இத்தகைய நிலையில் ஜனநாயகத்தன்மையற்ற அரசை சர்வதேச நாடுகள் ஜனநாயக அரசாகக் கருதமுடியாது.

இத்தகைய அரசியல் மனோநிலைகொண்ட அரசால் நல்லாட்சி என்பதையோ அல்லது மனித உரிமை என்பதையோ செயற்படுத்த இயலாது என்பதை உலகிற்கு எடுத்துக்கூறும் அந்தத்தமிழ் மக்களின் குரலாக இந்த மக்கள் அவைகள் செயற்படல் அவசியம். அங்கு ஜனாநாயகத்தன்மை மறுக்கப்பட்டுள்ளதாலும் அவர்களின் விருப்பத் தெரிவு தடுக்கப்பட்டுள்ளதாலும் புலத்து மக்களவை அந்தப் பாதிப்புற்ற மக்களின் தெரிவுகளைத் தேவைகளை வெளிப்படுத்துமவதற்கான தார்மீக உரிமையைப் பெறுகிறது.

தமிழீழ மக்கள் மேல் மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பில் தங்கள் நாளாந்த வாழ்வை இழந்து தவிக்கும் மக்களைப்பார்த்து அவர்களின் தமிழ்த்தேசியம் என்ற இனத்துவத் தன்மையைத் துறந்து சிறிலங்காத் தேசியம் என்பதற்குள் சங்கமாகும்படி சிறிலங்கா கட்டாயங்களை வற்புறுத்தல்களை மேற்கொள்கிறது.

அவர்களின் தாயகத்தின் மக்கள் தொகை அமைப்பை வரலாற்றுத்தன்மையை மாற்றிடும் சிங்களக் குடியேற்றங்களும் சிங்களப் பெயரிடுதல்களும் பௌத்தமதத் திணிப்புக்களும் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அம்மக்களின் தேசியம் தாயகம் தன்னாட்சி என்பதை தமது குரலினூடாக வெளிப்படுத்தி அம்மக்களினதும் மண்ணினதும் அடையாளத்தைப் பேணும் பொறுப்பு புலத்து தமிழீழ மக்களவைகளுடையதாகிறது.

புலத்துத் தமிழர்களின் தேசங்கடந்த தேசியத்தை (Transnationalism) வளர்ப்பதில் தமிழீழ மக்களவை எந்த அளவுக்கு ஈடுபடலாம்?

இன்று தமிழீழத் தமிழர்கள் உலகெங்கும் உள்ள முக்கிய நாடுகளில் அவற்றின் குடிமக்களாகவும் வதிவிட மக்களாகவும் அரசியல் தஞ்சம் கோரிய மக்களாகவும் வாழ்கின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் பரந்து வாழும் ஒரே மொழி பேசும் ஒன்றாக கூடி வாழும் விருப்புள்ளவர்களாகவும் தமிழர்கள் நாங்கள் என்ற எண்ணத்துடனும்; வாழ்கின்றனர். இதனால் இவர்கள் ஒரே தேசியஇனமாகவே திகழ்கின்றனர்.

இவ்வாறு நாட்டு எல்லைகளை கடந்து வாழும் தேசிய இனத்துவத்தை நாட்டு எல்லைகள் கடந்த தேசியம் - (Transnationalism) என்பர். தமிழர்கள் தங்களுடைய தேசங்கடந்த தேசியத்தன்மையைப் பேணுவதற்கும் மக்களவைகளைத் தோற்றுவிப்பதே நடைமுறைச் சாத்தியமானதாக உள்ளது. இவ்விடத்தில் புலம் பெயர் தமிழர்களுக்கு இறைமை இல்லாத காரணத்தால் புலம்பெயர் தமிழர்களின் பொதுத் தேசியத்தன்மையை வெறுமனே தேசங்கடந்த தேசியம் என்றே கூறுவர்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தேசங் கடந்த தேசிய அரசாங்கம் (Transnational government) என்பர். இங்கு ஐரோப்பிய அரசுக்களின் இறைமை மூலதனநகர்வு - போக்குவரத்து - உழைப்புக்கான மக்கள் நகர்வு என்பதில் பொதுவாகப் பகிரப்படுகிறது. எனவே தேசங்கடந்த தேசியம் என்பது பல்வேறு நாடுகளில் வாழும் ஓரே தேசியத்தவர்களின் தேசியப்பொதுமையைக் குறிக்கிறது.

ஆனால் தேசங்கடந்த தேசிய அரசாங்கம் என்பது இறைமை கொண்ட அரசாங்கங்கள் பொருளாதாரநலன் கருதி இறைமையில் பகிர்வை மேற்கொள்வதைக் குறிக்கும். இன்றைய நிலைiயில் தமிழீழ மக்களின் இறைமையைச் சிறிலங்காவின் படைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில் தமிழீழ மக்களின் இறைமை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை ஏதாவது ஒரு அரசாங்கம் ஏற்றுக்கொண்டால்தான் தமிழீழ மக்களின் தேசங்கடந்த அரசாங்கம் என்ற தன்மை நடைமுறைச் சாத்தியமாகும்.

அதுவரை தமிழீழ மக்களவையே புலத்து தமிழ் மக்களின் தடையில்லாப் பணிக்கு அவசியமாக உள்ளது என்பதுடன் தமிழீழ மக்களவையின் வளர்ச்சியே பின்னர் தேசங்கடந்த அரசாங்கமாக புலம்பெயர் தமிழ் மக்கள் வளர்வதற்கான தன்மையையும் கொடுக்கும். இதனால் தமிழீழ மக்களவை இதற்கான அத்திவாரக்கல்லாகவும் அமைகிறது. அத்துடன் புலத்தில் அரசாங்கம் (Government in Exile) என்னும் அரச உருவாக்க முறைமையும் உலக விடுதலைப்போராட்ட வரலாறுகளில் காணப்பட்டுள்ளது.

இந்த வகை அரச உருவாக்கம் ஒரு நாட்டின் தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பு ஒன்று அந்த நாட்டிலிருந்து செயற்பட முடியாத நிலை தோன்றுகின்ற பொழுது இன்னொரு நாடு அந்தத் தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்து தமது நாட்டு எல்லையில் இருந்து பாதிப்புற்ற மக்களின் அரசாக அந்த விடுதலைப்போராட்ட அமைப்பு செயற்படுவதற்கு அனுமதிக்கையில் ஏற்படும். அதாவது புலத்தில் அரசாங்கம் என்பதில் பாதிப்பை ஏற்படுத்திய அரசாங்கத்தின் இறைமை முற்றாக நிராகரிப்பட்டு தமது இறைமையை அங்கீகரிக்குமாறு விடுதலைப் போராட்ட அமைப்பால் கோரிக்கை எழுப்பப்படும்.

இந்தக் கோரிக்கையை அப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் இறைமை உள்ள நாடு அங்கீகரித்து மற்றைய நாடுகளையும் அவ்வாறு செய்யும் வண்ணம் தூண்டும். இவ்விதமான அரச உருவாக்கம் ஏற்படுவதற்கு தமிழீழ மக்கள் குறித்த இன்றைய சர்வதேசச் சூழ்நிலை ஏற்டபுடையதாக இல்லை. எனவே இன்றைய காலகட்டத்தில் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்பச் செயற்படுவதற்கு ஏற்புடைய அமைப்பாக தமிழீழ மக்களவையே விளங்குகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதன் வெற்றியிலேயே காலப்போக்கில் எத்தகைய அரச உருவாக்க வழிகளினுடாகத் தமிழீழ மக்களுக்கான அரசினை அவர்கள் அடையலாம் என்பது தெளிவாகும்.

வேறு என்ன விடயங்களில் தமிழீழ மக்களவை முக்கியமானதென நினைக்கின்றீர்கள்?

சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்வாறு தமிழ் மக்களை மனிதர்கள் என்று கூட ஏறெடுத்துப்பார்க்காது இனஅழிப்பில் தமிழீழம் மீதான தன் ஆக்கிரமிப்பை நிறுவியதோ அவ்வாறே உலகின் அமைதியையோ அல்லது எதிர்கால நல்லாட்சித் தன்மையையோ பொருட்படுத்தாது இந்துமாக்கடலில் வல்லரசுக்களினதும் பிராந்திய மேலாண்மைகளினதும் நலன்களுக்குத் தமிழர் தாயகத்து கடற்பரப்பைத் தாரைவார்த்துக் கொடுத்து தன் நலனைப் பேணுகிறது.

இதனால் இன்று உலக ஒழுங்குமுறைக்கோ அல்லது சர்வதேசச் சட்டங்களுக்கோ கட்டு;ப்படாத தனிச்சர்வாதிகார ஆட்சித்தன்மையை சர்வதேசம் தன்னைத் தட்டிக் கேட்க வல்லாண்மைகள் பிராந்திய மேலாண்மைகள் அனுமதிக்கா என்ற உணர்வுடன் சிறிலங்கா அங்கு தோற்றுவித்துள்ளது. இதுவே நாளைய உலகின் பாதுகாப்புக்கான பல அச்சங்களைத் தோன்றச் செய்துள்ளது. இந்த உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்; பொறுப்பும் தமிழீழ மக்களவைக்கு உண்டென்பது என் கருத்து

இறுதியாக இன்று தமிழீழப் புலம் பெயர் மக்கள் தங்கள் உறவுகளின் உதிர்வுகளாலும் இடப்பெயர்வுகளாலும் தாங்கொணாத் துன்பங்களில் தவித்துக் கொண்டுள்ளனர். இனி என்ன செய்யலாம் என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தமிழீழ மக்கள் அவைகளாக இந்த மக்கள் மாறுவது அவர்களின் துன்பங்களிலிருந்து அவர்கள் விடுபட்டு வாழ்வின் ஒடுக்கத்தையே புதிய வாழ்வுக்கான பிறப்பாக்க வழி சமைக்கும்.

இதற்குத் துணையாக எல்லாத்தமிழ் மக்களும் அவர்களுடன் இணைந்து நிற்கிறார்கள் என்கையில் புதிய சக்தி புதிய நம்பிக்கை தோன்றும். எமக்கு இவ்வளவு துன்பங்களைத் துயரங்களை விளைத்த விளைத்துக் கொண்டிருக்கிற சிறிலங்கா எமக்கு ஜனநாயக அரசாக அமைவதற்கான தகுதியை இழந்து விட்டது என்பதை அந்த மக்கள் உலகுக்கு உரைப்பதற்கான தன்மையைப் பலத்தை அவர்களுக்கு தமிழீழ மக்கள் அவை வழங்கவேண்டும். அப்பொழுது தேசியத்தலைமை மீண்டெழும். "மரணமில்லாத மனித குலம் ஒன்று இந்த மண்ணில் தோன்ற வேண்டும்;" என்ற கவிவரியின் சாட்சியான எங்கள் மண்ணின் மனிதர்களை மகிந்தாவென்னும் மகிஸா சூரன் வதைத்தாலும் தமிழீழத் தாய் மகிசாவர்த்தினியாகி தர்மத்தை நிலைநாட்டுவாள் என்ற நம்பிக்கையுடன் தமிழீழ மக்கள் உள்ளனர்.

அந்த தமிழீழ அன்னையின் விஜயதசமி வரும் வரை தமிழர்களுக்கு எல்லாம் நவராத்திரிக் காலம் தான். தூங்காது எனவே விழிப்புடன் ஒன்றாக தமிழீழ மக்கள் அவையாகி உறுதியுடன் செயற்பட்டு தமிழீழ அன்னையின் வெற்றிக்கு உதவ வேண்டியது எமது கடமை. இவ்வாறு புலத்து தமிழர்கள் குறிப்பாகப் புலத்து இளையோர் தமிழீழ மக்களவையாகச் செயற்பட்டு புதிய வடிவில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலமாற்றம் ஏற்படுகிறது என்பதைத் தேசியத்தலைவர் அவர்கள் கடந்த மாவீரர் தின உரையின் முடிவில் போராட்ட வடிவம் புதிய வடிவில் மாறும் என எதிர்வு கூறியிருந்தமையை ஒரு அழைப்பாகவே கருதி இன்று புலத்து மக்கள் ஒன்றாகத் தமிழீழ மக்களவையாகச் செயற்பட வேண்டிய பொறுப்பு மிகு நேரமிது. இதுவே இனி தமிழர்களின் வரலாற்றை நிர்ணயிக்கும் காரணியாகும்

ஆக்கம்: சூ.யோ. பற்றிமாகரன், ஆசிரியர் பத்திரிகையாளர் ஆய்வாளர், MA (Politics of Democracy)

BA, BSc, Special Diploma (Oxford)

http://www.tamilkathir.com/news/1526/58//d,full_view.aspx

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails