இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி-ஆலந்திடம் வீழ்ந்தது
லண்டன், ஜுன்.6-
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா லண்டனில் நேற்று தொடங்கியது. ஆலந்துக்கு எதிரான பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
தொடக்க விழா ரத்து
2-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. இதை யொட்டி நடனம், பாடல் உள்ளிட்ட தொடக்கவிழா நிகழ்ச்சிகளுக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக தொடர்ந்து லேசாக மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது. இதனால் வேறு வழியின்றி தொடக்க விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து இங்கிலாந்து-ஆலந்து அணிகள் (பி பிரிவு) இடையிலான முதலாவது ஆட்டம் 20 நிமிடம் தாமதமாக தொடங்கியது. இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர் பீட்டர்சனுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
இங்கிலாந்து பேட்டிங்
டாஸ் வென்ற ஆலந்து அணி முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய கேட்டுக் கொண்டது. இதன்படி ரவி போபராவும், லுக் ரைட்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். இருவரும் ஆலந்து பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தால் சற்று தடுமாற்றமும் காணப்பட்டது.
இருவரும் நிலைத்து நின்றதால், இங்கிலாந்து அணி வலுவான தொடக்கத்தை பெற்றது. 20 ஓவர் சர்வதேச போட்டியில் முதல் முறையாக இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தது. இறுதியில் ஸ்கோர் 102 ரன்களை எட்டிய போது, இந்த ஜோடி பிரிந்தது. ரவி போபரா 46 ரன்களில் ( 34 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.
இதன் பிறகு வந்த வீரர்கள் வேகமாக ரன் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் கடைசி 5 ஓவரில் எதிர்பார்த்த ரன்கள் (38 ரன்கள் எடுத்தனர்) வரவில்லை. லுக் ரைட் 71 ரன்களில் (49 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ஒரு வீரரும் சிக்சர் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலந்து வெற்றி
பின்னர் 163 ரன்களை இலக்காக கொண்டு ஆலந்து ஆடியது. அவர்களின் ஆட்டம் வியப்பளிக்கும் வகையில் இருந்தது. எந்த ஒரு பந்தையும் தடுத்து ஆடாமல் தொடர்ந்து அடித்து ஆடிக் கொண்டே இருந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி கொண்டே போனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
கடைசி ஓவரில் ஆலந்து அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அதன் பிறகு கடைசி பந்தில் 2 ரன் தேவையாக இருந்த போது, இங்கிலாந்தின் மோசமான பீல்டிங்கால் அதனையும் எடுத்து விட்டனர்.
ஆலந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. டாம் டி குரூத் (49 ரன், 30 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), போர்ரன் (30 ரன், 25 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆலந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
இங்கிலாந்து அணியின் பீல்டிங் நேற்று படு மோசமாக இருந்தது. பல எளிதான ரன்-அவுட்களை தவற விட்டனர். குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் 4 ரன்-அவுட் மற்றும் ஒரு கேட்ச்சை கோட்டை விட்டனர். இதனால் தான் அவர்கள் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணியின் சூப்பர்-8 சுற்று வாய்ப்பு சிக்கலாகி உள்ளது.
No comments:
Post a Comment