இது தொடர்பாக 'ஆனந்த விகடன்' வார இதழில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவம் குண்டு மழை பொழிந்த முள்ளிவாய்க்கால் இறுதித் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. தாக்கல் செய்த இரகசிய அறிக்கையை ஆதாரம் காட்டி, 'மனித உரிமை மீறல் குறித்த விசாரணை நடக்க வேண்டும்' என்று ஒரு சில நாடுகள் கோரிக்கை வைத்தன. "புலிகளை நாங்கள் வென்றதைப் பொறுக்க முடியாமல் இப்படிக் கேட்கிறார்கள். அப்படி எந்த விசாரணையும் தேவை இல்லை" என்று சர்வ சாதாரணமாக அந்த கோரிக்கையைப் புறக்கணித்திருக்கிறது இலங்கை அரசு! போருக்குத் துளியும் தொடர்பு இல்லாத பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் இப்போது அணிவகுத்துக் காட்சியளிக்கும் சவக்குழிகளைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள், அடிவயிற்றில் அமிலத்தைப் பாய்ச்சுகின்றன. முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டு இருக்கும் மிச்சம் மீதித் தமிழர்களின் நிலை குறித்து வரும் தகவல்களோ இரத்தக் கண்ணீரைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன. யுத்தம் என்ற பெயரால் அங்கே என்னதான் நடந்தது என்பதை உலகத்தின் பார்வைக்கு வெளிப்படையாக முன்வைக்க இப்போதும்கூட இலங்கை அரசு தயங்கும் மர்மம் என்னவாக இருக்க முடியும்? மனித உரிமைகள் பற்றிய முழுமையான விழிப்பு உணர்வு ஏற்படாத இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே, ஹிட்லர் ஆட்சியின் மிருக வெறிச் செயல்களை விசாரித்துத் தண்டிக்க சர்வதேச அளவில் நாடுகள் திரண்டதை மறந்துவிடக் கூடாது. சண்டித்தனத்தின் உச்சத்துக்கே போய் கடைசியில் தற்கொலை செய்துகொண்டு ஹிட்லர் செத்துப்போனாலும், அவன் தளபதிகளை எல்லாம் சட்டத்தின் முன் நிறுத்திய 'நூரம்பர்க் விசாரணை' போலவே, இப்போதும் ஒரு சர்வதேச விசாரணைக்கான தேவை வந்திருக்கிறது! கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ... அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும்கூட! கட்டாயம் தேவை - ஒரு சர்வதேச விசாரணை. உரியவர்களை இதற்கு உடன்படச் செய்யாவிட்டால்... நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும்!" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment