தொடரும் துரோக வரலாறு – அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
சென்னை சங்கமம் இத்துணை பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. காலம் சிலவற்றை எதற்காகவோ கொண்டாடித் தள்ளிவிடுகிறது. அப்படி நிகழ்ந்ததுதான் சென்னை சங்கமம் வெற்றியும். இந்த வெற்றி எங்களுக்கே புரிந்து கொள்ள முடியாத வியப்பென்றால் பலருக்கு அது வயிற்றெரிச்சலைத் தந்திருக்க வாய்ப்பு உண்டு. இலட்சியங்களிலும், உயர்ந்த விழுமியங்களிலும் புடமிடப்பட்டவர் போல் பம்மாத்து காட்டும் எழுத்தாளர் ஞானி சங்கமத்தை கனிமொழியின் விளம்பர விழா என்று எழுதினார். நான் சொல்வது தவறாக இருக்கலாம், ஆனால் சதா விமர்சித்துக் கொண்டே இருப்பது ஒருவகை மனநோய் என்பது என் எண்ணம். இத்தகையோரை நெருங்கி அணுகிப் பார்த்தீர்களென்றால் சிறுமைகள் அவர்களிடத்து நிறைய இருக்கும். ஆதலினால் பொதுவாக இத்தகையோருக்கு நான் பரிந்துரைப்பது கனிவான உளநல உதவி.
பயணங்களின் போது நான் தேடி பணம் கொடுத்து வாங்கிப் படித்து வந்த பத்திரிகை "காலச்சுவடு'. அவர்கள் சென்னை சங்கமத்தை ஜீரணிக்க முடியாமலும் நாலு வார்த்தை பாராட்டாதிருந்தால் தனது நடுநிலை முற்போக்கு முலாம் சேதாரப்பட்டுவிடுமோ என்ற ஜாக்கிரதை உணர்விலும்பட்டிருந்த அவஸ்தை பரிதாபமாய் இருந்தது. போலித்தனங்களும், நாடகத் தன்மைகளும் இன்றி சமூக வாழ்வை கட்டமைத்தல் கடினம்தான். ஆனால் முற்போக்காளர் என தமக்கு முகவரி இட்டுக் கொள்கிறவர்களின் நாடகத்தன்மை அருவருப்பாகிறது.
நக்கீரனைப் போன்ற இன்னொரு பத்திரிகை எனக்கு முகப்பு அட்டை மரியாதை தந்தது. ""அரசின் ஆசிபெற்ற மர்ம மனிதர்" என்பது பெருந்தலைப்பு. ""யார் இந்த ஜெகத் கஸ்பர்?" என்பது துணைக் கேள்வி. சர்ச்சைக்குரிய ஒருவராக சமூக-அரசியற் களத்தில் ஆக்குவதன் மூலம் இயங்கும் ஆற்றலை மட்டுப்படுத்தலாம் என்ற நுட்பமான மேலாதிக்க அரசியல் அதில் இருந்தது. பொழுதுபோக்கு வியாபாரப் பத்திரிகைகளை பொதுவாக நான் விமர்சித்து மெனக்கெடுவதில்லை, அவசியமுமில்லை. ஆனால், அப்பத்திரிகைகள் தலையங்கம் எழுதி ஊருக்கு உபதேசம் செய்யும்போதுதான் பற்றிக் கொண்டு வரும். உபதேசிப்பதற்கு சில அடிப்படை யோக்கியதைகள் வேண்டும் என்றே நினைக்கிறேன். பொதுவாழ்வில் இருப்போரது தனிவாழ்வை சந்திக்குக் கொண்டு வந்து வியாபாரம் நடத்துகிற பத்திரிகை முதலாளிகளின்
தனிவாழ்வில் இருக்கிற வக்கிரங்களை அவர்தம் வாசகர்கள் அறிந்தார்க ளென்றால் ஆடிப் போவார் கள். அந்த வேலையை செய்வதற்கென்றே தனியாக ஒரு பத்திரிகை தொடங்க லாமா என்று கூட நான் யோசித்ததுண்டு.
ஜெயா தொலைக் காட்சி ஏதோ "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வரும்' உலகப் புகழ்பெற்ற த்ரில்லர் திரைப் பட விளம்பரம் போல் "சென் னை சங்கம திடுக்கிடும் மர்மங்களுக்கு' இடைவிடா முன் விளம்பரம் செய்து கொண்டிருந்தது. முன் விளம்பரத்தில் எனது முகத்தை நரகாசுரன் போல் கிராபிக்ஸில் வடிவமைத்திருந் ததை நான் நன்றாகவே ரசித்தேன்.
"சென்னை சங்கமம் ஊடாக பெரும் பணம் வந்தது. வந்த அப்பணம் விடுதலைப்புலிகளுக்குச் சென்றது என்பதுதான்' இவர்களது பிரதான கதை. துணைக் கதை அமெரிக்காவில் புலிகள் இயக்கத் தடையை நீக்க லஞ்சம் கொடுத்ததாய் கைது செய்யப்பட்ட நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் எனக்கு நண்பர் என்பது. உண்மையில் துணைக் கதை உண்மைதான். நாச்சிமுத்து சாக்ரட்டீஸ் நான் பார்த்த அறிவாளிகளில் மறக்க முடியாதவர். ஒரு நேரத்தில் நான்கு விஷயங் களை சிதறாமல் சிந்திக்கும் அபார அறிவாற்றல் கொண்டவர். அமெரிக்காவின் அணு ஆயுத திட்டமொன் றில் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். 1970-களில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக் கிய தமிழ் அக்னி குஞ்சுகளில் ஒருவர். சேலம் சேந்த மங்கலத்துக்காரர். அற்புதமான மனிதர். எனக்கு நண்பர்.
தந்தை பெரியாரின் கொள்கைபால் ஆழ்ந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர். ஒரு விதவையை மணம் புரிந்தவர், அதுவும் கலப்புத் திருமணமாய் ஜாதி மீறல் செய்தவர். அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க அவர் உழைத்து வந்தது உண்மை. அதிலொன்றும் தவறேதும் இல்லை. அது சட்டரீதியான செயற்பாடு. ஆனால் அவரை ஏமாற்றி, வஞ்சக வலை விரித்து, 5000 டாலர்கள் ஒரு அதிகாரிக்கு "ஊக்கப்பணம்' கொடுக்க வைத்து சிக்க வைத்ததில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் தலைவன் சங்கரசே என்ற தமிழனும், ரஜினிகாந்தின் "பாஷா' திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக வரும் ஒரு கேரக்டரும் உண்டு என்பதை உலகறியாது.
ஜெயா தொலைக்காட்சியில் அந்நிகழ்ச்சி நிஜ மாகவே என்னை மனவருத்தப்படுத்தவில்லை. ஏனென்றால், முன்பு நான் குறிப்பிட்டது போலவே தமிழ் ஈழ ஆதரவு விஷயத்தில் குற்றம் சாட்டப்படுவது பெருமையே என்பது ஒருபுறமிருக்க, பொய் வேகமாகப் பரவினாலும் உண்மை ஒருநாள் உருண்டு, புரண்டு வந்து சேரும் என்ற எனது நம்பிக்கையும் முக்கிய கார ணம். ஆனால் எது வலித்ததென்றால் அந்த நிகழ்ச்சி யை ஆக்கிய பலரில் சௌபா என்ற சௌந்தர பாண்டி முக்கியமானவராக இருந்தார், பணத்திற்காக அதைச் செய்தார் என்று நான் கேள்விப்பட்டபோது உண்மையி லேயே மனது வலித்தது. ஏனென்றால் எனது மாணவப் பருவத்தில் ஏழை மனிதர்களுக்காய் அவர் எழுதிய கட்டுரைகள் படித்து நம்பிக்கை பெற்றவன் நான். அந்த நம்பிக்கை தகர்ந்தபோது வலித் தது. அதுவும் பணத்திற் காகச் செய்தார் என்றபோது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நமது இனத்தின் போர் வாளாய் நிற் கும் ஆற்றல் கொண்ட தோழர் கள், சில்லறை விஷயங்களுக் காய் சோரம் போவது காண எழும் வேதனை அனுபவித்தவர் களுக்கு மட்டுமே தெரியும். வெளியே ஈழத்தமிழர் களின் துயரத்தை வியாபாரமாக்கிக் கொண்டு இலங்கை தூதரகத் தின் மது விருந்துகளுக்கு மலிவாய் துணை போன பத்திரிகை -ஊடக நண்பர்கள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். அவர்கள் மீதான கோபம் தீர்ந்து விட்டது. ஆனால் வலி தொடர்கிறது. துரோக வரலாற்றிலிருந்து நான் சார்ந்த இனத்திற்கு இறைவா, விடிவே இல்லையா என்ற கேள்வியில் வருகிற வலி அது.
கருணா என இன்று நாம் அறிகிற கருணம்மான் விடுதலைப் போராட்டத்தை விட்டு விலகியபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது உடல் என சொல்லப்பட்டதை அடையாளம் காட்டவென இலங்கை ராணுவம் கருணாவை முல்லைத்தீவுக்கு கடந்த மே 17-ம் தேதி கூட்டிச் சென்றது. முல்லைத் தீவு மண்ணில் தமிழின அழித்தலின் குரூர சாட்சியங்களுக்கு நடுவில் நிறுத்தப்பட்டிருந்த கருணம்மானின் முகத்தில் படர்ந்திருந்த வேதனை இறுக்கத்தை தொலைக்காட்சி வழி நான் பார்க்கத் தவறவில்லை. எந்த இனத்தின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து தலைவன் போற்றிய தளபதியாய் உயர்ந்தாரோ அந்த இனம் தோற்கடிக் கப்பட்டு, பல்லாயிரம் சடலங்களால் பிணக்காடா கிக் கிடந்த அவலத்தின் சாட்சியாய் நிற்க வேண் டிய சாபத்தை எண்ணி கருணம்மான் உள்ளுக்குள் அழாமல் இருந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் வன்னிக் காடுகளில் வளரும் போராளியாய் தன் தலைவன் பிரபாகரன் உண்டு மிச்சம் வைத்த உணவை உண்ணும் பாக்கியத்திற்காய் தவமிருந்த நாட்கள் கருணம்மானின் மனசாட்சியை அக்கணம் குத்திக் கிழித்து ரணப்படுத்தியிருக்கும்.
2002-ம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நான் நேர்கண்ட கையோடு வேறு பல மூத்த தளபதிகளையும் நேர்காண முயன்றேன். அவர்களில் முக்கியமானவர் கருணம்மான். மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியிலுள்ள அவ ரது முகாமில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மியன்மார் என்ற பர்மா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் உலகின் பணக்கார நாடுகளாகவோ, பெரிய நாடுகளாகவோ புகழ்பெறவில்லைதான். ஆனால் இந்நாடுகளுக்குப் பயணம் செய்தீர்களென்றால் பொறாமை யாக இருக்கும். அந்த அளவுக்கு எங்கு நோக்கினும் காடுகள், ஆறுகள், நீர் நிலைகள்… ""மீன் பாடும் தேனாடு" என தமிழர்கள் கொண்டாடும் மட்டக்களப்பு பிராந்தியமும் அப்படித்தான். எங்கு பார்த்தாலும் ஆறுகள், நீர்நிலைகள், காடு, கடல் என செழுமை சிறந்த பிராந்தியம். எளிமையான மக்கள், அவர்தம் விருந்தோம்பல் காவியத்தன்மை கொண்டது. எங்கள் வேரித்தாஸ் வானொலிக்கு மட்டக்களப்பு நகரில் கள அலுவலகம் இருந்தது. உயிரைப் பணயம் வைத்து தொடர்பாளர்களாய் கடமையாற்றிய இருவரை உயிருள்ளவரை நான் மறக்க முடியாது. இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு கருதி அவர்கள் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை.
கருணம்மானை பேட்டி காண நான் விரும்பி யமைக்கு பலவேறு காரணங்கள் இருந்தாலும் ஒரு காரணம் முக்கியமானது. ஓர் அரசியல்- ராணுவ ஆய்வாளன் என்ற வகையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்த மகத்தான ராணுவ வெற்றியானது என்னைப் பொறுத்தவரை ""ஜெயசிகுறு எதிர்சமர் தான். அதிபர் சந்திரிகா அரசு யாழ்ப்பாணத்துக்கு வவுனியாவிலிருந்து தரைவழிப்பாதை திறக்க முயன்ற ""ஜெயசிகுறு" எனப் பெயரிடப்பட்ட யுத்தம் வென்றிருக்குமேயானால் இன்று முல்லைத்தீவில் நடந்தது 12 ஆண்டுகளுக்கு முன்னரேயே நடந்திருக்க வாய்ப்புண்டு. அந்த ""ஜெயசிகுறு" ராணுவப் பெருநகர்வை எதிர்கொண்டு முறியடித்த வரலாற்றில் முக்கிய பங்காற்றியவர்கள் கருணம்மானும் அவரது படையாளிகளும். உள்ளபடியே வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ""போராட்ட வரலாற்றில் மகத்தான ராணுவ வெற்றி எது?" என நான் கேட்டபோது அவரும் ""ஜெயசிகுறு எதிர்சமர்" என பதில் தர, நான் உளம் சிலிர்த்ததும் உண்மை. எனவே ஜெயசிகுறு எதிர்சமரின் நாயகன் கருணம்மானை நான் நேர்காண விரும்பியதில் வியப்பில்லை.
முப்பது ஆண்டு கால வீர வரலாற்றின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கருணம்மாவின் பிரிவு என்பது யாவரும் அறிந்ததே. கிழக்கின் போர் அணிகள் இல்லாது போனது பேரிழப்பென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராணுவ, பூகோள, அனைத்துலக செயல்பாடு ரகசியங்களை இலங்கை அரசுக்கு அவர் தந்துதவியது கடந்த ஈராண்டு கால போரின் போக்கை முக்கியமாகத் தீர்மானித்தது. உண்மையில் கருணம்மான் இயக்கத்திலிருந்து பிரிந்துவிட்ட செய்தி கேட்ட அன்று மனதில் அவநம்பிக்கை படர்ந்தது, போராட்டம் பெருத்த பின்னடைவு காணும் என உள்மனது சொன்னது. இன்று தன் எஜமானர்களை திருப்தி செய்ய வேண்டி கருணா பிரபாகரன் அவர்கள்மீது பல விமர்சனங்களை வைக்கலாம். ஆனால் பிரபாகரன் நெஞ்சார நேசித்த போராளிகளில் ஒருவர் கருணம்மான் என்பதே உண்மை. ஏனென்றால், திறமையாளர்களை பிரபாகரனுக்குப் பிடிக்கும். கருணம்மான் வியத்தகு ஆளுமைத்திறன் கொண்ட ஒரு தளபதி. படையணிகளை கட்டி யெழுப்புவதில் மட்டுமல்ல, மக்களோடு நெருங்கி உறவாடி ஆதரவுத் தளத்தை விரிவாக்கு வதிலும் கெட்டிக்காரன். விடுதலைப் புலிகள் இயக்கம் முதலில் பயன்படுத்திய எறிகணை எந்திரம் (Artillery Machine) கருணாவால் இலங்கை ராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட் டது. அந்த எறிகணை எந்திரத்தை வன்னியில் நின்ற தன் தலைவனிடம் ஒப்படைப்பதற்காக சுமார் 100 கிலோமீட்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பாதை அமைத்துக் கொண்டு சென்று சேர்த்தவர் கருணா. அந்த அளவுக்கு துடிப்பும் செயல்வேகமும் மதிநுட்பமும் கொண்ட கருணா விடுதலைப் போராட்டத்தின் அழிவுக்கு தானும் ஒரு காரணம் ஆனது எப்படி?
அடுத்த வாரம்.
(நினைவுகள் சுழலும்)
நன்றி நக்கீரன்
No comments:
Post a Comment