Sunday, June 7, 2009

சிங்கள இராணுவம் மறைக்கும் மரபணுச் சோதனை மர்மங்கள்!

சிங்கள இராணுவம் மறைக்கும் மரபணுச் சோதனை மர்மங்கள்!
பழ. நெடுமாறன்

2000ஆம் ஆண்டுக்காலத்திற்கு மேற்பட்ட தமிழர் வரலாற்றில் பிரபாகர னைப்போன்ற ஒரு வீரன் தோன்றியது இல்லை என முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் ஒருமுறை பெரு மிதத்துடன் கூறினார். உலகத் தமிழர்கள் அனைவருமே அவ்வாறுதான் இன்றளவும் கருதி வருகிறார்கள்.

அத்தகைய மாவீரன் பிரபாகரன் அவர்களைக் கொன்றுவிட்டதாக சிங்கள இராணுவம் உரிமை கொண்டாடுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாம் பார்க்கவேண்டும்.


17-05-09

இலங்கையில் நடைபெற்ற கடைசிக் கட்டப் போரில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனும் அவரது நெருங்கிய சக தளபதிகளும் கொல்லப் பட்டுவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. பிரபாகரன் போன்று காணப் பட்ட ஒருவரின் உடலை பரிசோதனைக் காக எடுத்துச் சென்றுள்ளதாகவும். இறந்தவர் பிரபாகரன்தான் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்றும் அதற்கான ஆய்வுகள் நடை பெற்று வருவதாகவும் இராணுவ அதிகாரி ஒருவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆனால் இலங்கை பாதுகாப்பு அமைச்ச கத்தின் செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் உதயநாணயகாரா இச்செய்தியை உடனடியாக மறுத்தார்.


18-05-09

முதல்நாள் வெளியான செய்தியை மறுத்த உதயநாணயகாரா மறுநாள் பிரபாகரன் இறந்துவிட்டார் என அறி வித்தார். "மே 18ஆம் தேதி வெள்ள முள்ளி வாய்க்காலுக்கு வடக்கில் சிறிய நிலப்பரப்பில் விடுதலைப் புலிகள் சிலர் இருப்பதை அறிந்த இராணுவத்தினர் அந்த இடத்தை நெருங்கினர். அப்போது சில வாகனங்கள் வேகமாக வெளியேறத் தொடங்கின. அதில் ஒரு ஆம்புலன்சும் இருந்தது. இலங்கை இராணுவ வீரர்கள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தவும் அவற்றில் இருந்தவர்கள் தப்பித்து விடாமல் இருக்கவும் சுற்றி வளைத்து நின்று சரமாரியாக சுட்டனர். நீண்ட நேர சண்டைக்குப் பிறகு வாகனங்களில் இருந்தவர்கள் யாரும் சுடவில்லை. அதன் பிறகு அங்கே சென்று வாகனங் களில் இருந்த உடல்களை வெளியே கொண்டுவந்து பார்த்தபோதுதான் பிரபாகரனும் அதில் இருந்தது தெரிய வந்தது. அவருடன் பொட்டுஅம்மான், சூசை ஆகியோரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என ஊகிக்கப்படுகிறது. ஆனாலும் இறந்தவர்களின் உடல்களுக்கு மரபணு சோதனை செய்தபிறகுதான் இச்செய்தியை உறுதிசெய்து கொண்டு பிறகு அறிவிப்பது என இராணுவத் தலைமை முடிவெடுத்திருக்கிறது" என உதயநாணயகாரா அறிவித்தார்.

இறந்தது பிரபாகரன்தானா என்பதை உறுதிசெய்ய மரபணு சோதனைக்கான மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதை கொழும்பு வட்டாரங்கள் மே 18ஆம் தேதியன்று தெரிவித்தன. மரபணு சோதனை உறுதிசெய்யப்பட்ட பின்னர் தான் பிரபாகரன் இறந்தார் என அறி விக்கவேண்டும் என்று அதிபர் மகிந்த இராசபக்சே கூறிவிட்டதால்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று கொழும்பு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் அன்று பகல் 12.15 மணிக்கு பிரபாகரன் உடலை சிங்கள இராணுவ வீரர்கள் கண்டுபிடித்துவிட்ட தாக இராணுவத் தளபதி பொன்சேகா அறிவித்தார். அன்று பிற்பகல் தொலைக் காட்சியில் அவர் உரையாற்றும் போது சிலமணிநேரத்திற்கு முன்புதான் பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு தாம் முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

முதலில் இச்செய்தியை அறி வித்தபோது பிரபாகரனின் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகிப்போய் இருந்ததனால் மரபணு சோதனையின் மூலம் அவரின் உடல் தான் என்பதை உறுதிசெய்தபிறகு அறிவிக்கப் போவதாக இராணுவம் கூறியது. ஆனால் தளபதி பொன்சேகா விடுத்த அறிக்கையில் "பிரபாகரனின் உடல் நந்திக் கடல் பகுதியில் கண்டெடுக் கப்பட்டது. தலையில் குண்டு பாய்ந்த நிலையில் இரு கண்களையும் திறந்தபடி பிரபாகரன் பிணமாகக் கிடந்தார்" என்றும் அறிவித்தார்.

பிரபாகரனின் உடலின் படங்கள் என சில ஒளிப்படங்களை சிங்கள அரசு வெளியிட்டது. ஆனால் இந்தப் படங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்று வல்லுநர் கள் கருத்து தெரிவித்தனர். பிரபாகரனின் உடல் இரண்டு நாட்கள் தண்ணீரில் கிடந்ததாக சிங்களப் படை கூறியுள்ளது. அவ்வாறு கிடந்தால் உடலும், முகமும் உப்பிப் போவதுடன் கறுத்துப்போயிருக்கும். ஆனால் பிரபாகரனின் தலையில் குண்டு பாய்ந்ததாக கூறப்படும் இடத்தில் குருதித் துளிகளே இல்லை. பிரபாகரனின் கண்களும் செயற்கையாக பொருத்தியது போல் தோன்றுகிறது. தண்ணீரில் இரண்டு நாட்கள் கிடந்த உடலின் தலையைத் தூக்கவே முடியாது. ஆனால் அந்த தலையை சிங்களப் படைவீரர் மிக எளிதாக தூக்கிக் காட்டினார். எனவே இது பிரபாகரன் இல்லை என்கிற அய்யம் வலுத்துள்ளது.

பிரபாகரன் சென்ற ஆம்புலன்ஸ் வேன் ஏவுகணை வீசி கொல்லப் பட்டதாகவும், இதில் பிரபாகரனின் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகிப் போய் உருக்குலைந்து விட்டதாகவும் கூறிய சிங்களப்படை மறுநாள் பிரபாகரனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறி உருக்குலையாத உடலைக் காட்டியது எப்படி?

முள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரனைச் சுற்றி வளைத்து சுட்டதாக முதலில் கூறிய சிங்களப்படை பின்னர் அவரின் உடலை நந்திக் கடல் பகுதியில் கண்டு எடுத்ததாகக் கூறுவது ஏன்?

"தலைவர் பிரபாகரன் அவரது தலைமுடிக்கு கருப்பு சாயம் பூசுவது கிடையாது. அடிக்கடி முக சவரம் செய்வதும் இல்லை. அதுமட்டுமின்றி அண்மைக் காலமாக அவர் மீசை வளர்ப்பதும் இல்லை. ஆனால் பிரபாகரனுடைய என்று சொல்லப்படும் உடலின் முகத்தில் அப்போதுதான் முகச்சவரம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இயல் புக்கு மாறாக மீசை இருப்பதுடன் தலைக்கும் மீசைக்கும் கருப்பு சாயம் பூசப்பட்டுள்ளது. பிரபாகரனின் நாடியில் ஒரு வெட்டுக்காயம் இருக்கும். ஆனால் படத்தில் வெட்டுக்காயம் இல்லை. மொத்தத்தில் படத்தில் காட்டப்படும் பிரபாகரனின் உடல் பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் உருவாக்கப்பட்டது போல் உள்ளது" என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ள அனைவரும் எப்போதும் களத்தில் சயனைடு நச்சுக் குப்பிகள் கட்டியிருப் பார்கள். குறிப்பாக போர்க்களத்தில் இருப்பவர்கள் கட்டாயமாக அதை அணியவேண்டும் என்பது பிரபாகரனின் கட்டளை ஆகும். ஆனால் பிரபாகரனின் உடல் என இவர்கள் குறிப்பிடும் உடலில் சயனைடு நச்சுக்குப்பி எதுவும் இல்லை.


மரபணு சோதனை

மரபணு சோதனை உடனடியாகச் செய்யப்பட்டு அந்த உடல் பிரபாகரனின் உடல்தான் என்று உறுதிசெய்யப்பட்டு விட்டதாக சிங்கள அரசு அறிவித்தது. இதைவிட உலக மகா பொய் வேறு இருக்க முடியாது. மரபணு சோதனை செய்யும் வசதி இலங்கையிலேயே கிடையாது. எனவேதான் - அவர் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மரபணு சோதனைக்காக இந்தியாவுக்கு அனுப்பப் பட்டிருப்பதாக முதலில் அறி வித்த சிங்கள அரசு தானே அந்த சோதனை செய்ததாகக் கூறுவது - முன்னுக்குப் பின் முரணான செய்தியாகும்.

இந்தியாவின் மிகச்சிறந்த தடய வியல் அறிஞரான டாக்டர் சந்திரசேகரன் இதுகுறித்து பின்வரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்: இராஜீவ் கொலை வழக்கில் பல முக்கிய உண்மைகளைக் கண்டறிந்து கூறியவர் இவர் என்பது நினைவுகூரத்தக்கது.

1. பிரபாகரனின் மரபணு மாதிரி களை முன்னமே சிங்கள இராணுவம் கைப்பற்றி வைத்திருந்தால் ஒழிய இப்போது ஒப்பிட்டு அறிவிக்க இயலாது. அதற்கான சாத்தியம் நிச்சயமாக இல்லை.

2. மரபணு சோதனை உடனடி யாகச் செய்ய முடியாது. குறைந்தது நான்கு நாட்களாவது ஆகும்.

3. இறந்துபோனவரின் மரபணுக் கள் ஏற்கனவே பாதுகாக்கப்படவில்லை என்றால் இறந்தவரின் பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் குழந்தை களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து அதனுடன் ஒப்பிட்டு உண்மைகளைக் கண்டறியலாம். இந்தச் செயல்முறைகளை பிரபாகரன் விஷயத்தில் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

4. 54 வயதான பிரபாகரனின் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள். இராணு வம் காட்டிய உடலில் இல்லை. இது மிகப் பெரிய அய்யப்பாட்டினை எழுப்புகிறது.

5. உலகத் தமிழர்கள் போற்றும் வரலாற்று நாயகனாக இருந்துள்ள பிரபா கரன் பற்றிய உண்மைகளை உலகிற்கு தெரிவிக்க வேண்டிய கடமை சிங்கள அரசுக்கு உண்டு. ஆனால் 2 மணி நேரத் தில் மரபணு சோதனைகளை முடித்து உறுதி செய்துவிட்டதாக அறிவித்திருப் பது அறிவியலை கொச்சப்படுத்துவது ஆகும்.

5. புலிகளின் வழக்கப்படி சயனைடு நஞ்சு அருந்தி அவர் மாண்டாரா என்பதற்கு குடல் சோதனை செய்யப் பட்டதா என்பது தெரியவில்லை.

6. பாகிஸ்தான் இராணுவத்தினால் கொலைசெய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோவின் உடலை இராணு வம் உடனடியாக எரித்து அவரைப் பற்றிய உண்மைகளை மறைத்துவிட்டது. அதைப் போல பிரபாகரனின் உடலை சிங்கள இராணுவம் எரித்துவிடக்கூடாது. (இவ்வாறு அவர் கூறிய சில மணி நேரங்களிலேயே உடலை சிங்கள இராணுவம் எரித்து சாம்பலையும் கடலில் கரைத்துவிட்டது).

தமிழக அரசின் தற்போதைய தடய அறிவியல் துறையின் இயக்குநர் விஜயகுமார் அவர்களும் டாக்டர் சந்திரசேகரன் கூறிய செய்திகளை உறுதிசெய்திருக்கிறார்.


முன்னுக்குப்பின் முரண்

தொடக்கத்திலிருந்தே முன்னுக் குப் பின் முரணான செய்திகளை சிங்கள இராணுவமும் அரசும் கூறிவந்ததை மேலே வெளியிட்டுள்ளோம்.

சிங்கள இராணுவத்தின் வெற்றி யைக் கொண்டாடும் வகையில் கூட்டப் பட்ட சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் இராசபக்சே சிங்கள இராணுவம் அடைந்த வெற்றி களின் சிகரமான பிரபாகரன் கொல்லப் பட்ட செய்தியை அறிவிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளு மன்றத்தில் பொய்யை அரங்கேற்றுவது உலக நாடுகளின் மத்தியில் இழிவாகக் கருதப்படும் என அவர் அவ்வாறு செய்யவில்லை.

உண்மையில் பிரபாகரன் கொல் லப்பட்டு இருந்தால் சிங்கள அரசு அவ ரது உடலை கொழும்புக்கு கொண்டு வந்து சிங்கள மக்களின் பார்வைக்கு வைத்திருக்கும். அதுமட்டுமல்ல கொழும் பில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களையும் சர்வதேச பத்திரிகையாளர்களையும் அழைத்து அந்த உடலைக் காட்டி யிருக்கும்.

சிங்கள மக்கள் மத்தியில் வெற்றிக் களிப்பையும் பெரும் உற்சாகத்தையும் ஊட்டக்கூடிய இந்தச் செயலை ஏன் இராசபக்சே செய்யவில்லை என்பது கேள்விக்குரிய மர்மமாகும்.

பொய்யான உடலை அவ்வாறு காட்டும்போது அது அம்பலமாகி விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தின் காரணமாக அத்தகைய முயற்சியை சிங்கள அரசு செய்யவில்லை என்பதுதான் உண்மை.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails