ஐ.நா. கையாலாகாதது, ஒன்றுக்கும் உதவாதது, அதனால் அது கலைக்கப்படவேண்டும் – ஐநா இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல்
ஐ.நா சிறுபான்மையினரைக் காக்கத் தனது அடிப்படைக் கடமைகளைச் செய்யத் தவறி விட்டது என ஒபாமாவுக்கான தமிழர்கள் மே 29, 2009 அன்று கூறினர். விடுதலைப்புலிகளைக் கண்டனம் செய்தும் ஸ்ரீலங்காவின் அட்டூழியங்களைப் பற்றி ஏதும் குறிப்பிடாமலும் ஸ்ரீலங்கா முன்மொழிந்த தீர்மானத்தை ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆலோசனைச் சபையில் நிறைவேற்றியது "ஏற்கனவே பாதிப்படைந்துள்ள ஐ.நா.வின் நம்பகத்தன்மைக்கு இன்னும் குந்தகம் விளைவிக்கக் கூடியதாகக் கருதப்படும்" என தி ஃபைனான்சியல் டைம்ஸ் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய சிறுபான்மையினரைக் காக்க வேண்டிய தெளிவான கடமையை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் ஐ.நா. மந்தமாகவும், மௌனம் காத்தும் வந்துள்ளது எனத் தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஐ.நா. தனது பணியைச் செய்யவில்லை, ஒபாமாவுக்கான தமிழர்கள் கூறுகிறார்கள்.
"மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணும் கடமை ஐ.நா.வுக்கு உள்ளது" எனத் தமிழ்க் குழுவின் பேச்சுத் தொடர்பாளர் ஒருவர் கூறினார். "தங்களது கடமையைச் செய்யாதிருக்க என்னென்ன சாக்குப்போக்குகளைச் சொல்லலாம் என்பதிலேயே ஐ.நா அதிகாரிகள் குறியாக இருக்கிறார்கள்."
1992-ல் தேசிய சிறுபான்மையினரின் உரிமைகள் பிரகடனத்தை ஐ.நா. ஏற்றுக் கொண்டது. தங்களது சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்ற தார்மீகக் கடமையை ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் மீதும், தனது உறுப்பினர்கள் அவ்வாறு செய்வதை உறுதி செய்யும் கடமையை ஐ.நா.வின் மீதும் இப்பிரகடனம் விதிக்கிறது.
ஒரு இலண்டன் டைம்ஸ் பகுத்தாய்வின்படி "சர்வாதிகாரிகள் அல்லது இனப்படுகொலை புரிபவர்கள் ஆகியோரை எதிர்த்து நிற்கத் தவறிய கையாலாகாத்தனத்தால் ஐ.நா சீரமைக்கப்படவேண்டும் அல்லது கலைக்கப்பட வேண்டும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் ஐ.நா 1994-ல் நடைபெற்ற ருவாண்டா இனப்படுகொலையை தடுத்து நிறுத்தத் தவறியதையும், ஸ்ரெப்ரெனிகா படுகொலையைத் தடுக்கத் தவறியதையும், இஸ்ரேலை மட்டும் விமர்சனம் செய்யும் பிடிவாதப் போக்கையும், சூடான் இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியதையும் சுட்டிக் காட்டுகின்றனர்."
"நமது தலைமுறையில் நடந்த பெரும்பாலான முக்கிய நிகழ்வுகளில் ஐ.நா கையாலாகாத்தனமாகவே இருந்துள்ளது" என்கிறார் ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டின் ஐ.நா நிபுணர் ஆன் பேயெவ்ஸ்கி. ஐ.நா இலங்கையில் கொடூரங்களைக் கண்டிருந்தும் பார்க்காதிருப்பது போல் நடிப்பதற்கு முடிந்தளவுக்கு முயன்றது எனத் தமிழர்கள் இன்னொரு குற்றச்சாற்றைச் சேர்க்கப் போகிறார்கள்.
ஐ.நா மனிதநேய ஒருங்கிணைப்பு அலுவலகம் பேச்சுத் தொடர்பாளர் எலிசபெத் பிர்ஸ் ஏ.எப்.பி-க்குக் கூறியது:
"கடந்த மாதங்களில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு அதிகமானது என ஐ.நா வெளிப்படையாக மீண்டும் மீண்டும் கூறியது மட்டுமல்லாமல் அத்தகவல்களை அரசாங்கத்தோடும் மற்றும் இவ்விடயத்தில் தொடர்புடைய அனைவரோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறது."
ஒபாமாவுக்கான தமிழர்கள் பேச்சுத் தொடர்பாளர் கூறியது:"ஐ.நா இறந்தவர்களின் எண்ணிக்கை 'ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு அதிகமானது' எனக் கூறியது உண்மைதான். ஆனால் எந்த எண்ணிக்கையும் 'ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு அதிகமானது' ஆக இருக்கலாமே.
பத்து சாவுகள் கூட 'ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு அதிகமானது' ஆகலாம். இது ஒரு வகையில் எண்ணிக்கையை வெளியிடாமலிருக்கச் செய்யும் தந்திரம், பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ளாமலிருக்கக் கடைபிடிக்கும் உபாயம்."
"டைம்ஸ் இதழுக்குக் கிடைத்த இரகசியமான ஐக்கிய நாடுகள் ஆவணங்களின் படி கிட்டத்தட்ட 7,000 அப்பாவிப் பொது மக்கள் ஏப்ரல் இறுதி வரையில் கொல்லப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. ஐ.நா மூலங்களின் படி அதன் பின்னர் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்தது, ஏறக்குறைய ஒரு நாளைக்கு 1,000 அப்பாவிப் பொது மக்கள் என விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட அடுத்த நாளான மே 19 வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சாவுத்தொகை போர்-விலக்குப் பகுதியிலிருந்து ஓடிவந்து தற்போது மனிக்ஃபார்ம் ஏதிலிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் கத்தோலிக்கக் குருவான தந்தை.அமல்ராஜ் தி டைம்ஸ் நாளிதழுக்குக் கொடுத்த எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறது.
இது கொல்லப்பட்டோரின் இறுதி எண்ணிக்கையை 20இ000-க்கும் மேலே கொண்டு செல்லும். 'இன்னும் அதிகம்' என ஒரு ஐ.நா மூலம் டைம்ஸ்க்கு தெரிவித்தது.
'இந்த இறப்பு எண்ணிக்கை மேலும் கூடிச்செல்லும் '." ஒபாமாவுக்கான தமிழர்களின் பேச்சுத் தொடர்பாளர் தெரிவித்ததாவது:
"இவை ஐ.நாவின் இரகசிய ஆவணங்களிலிருந்து வரும் எண்ணிக்கைகள். ஆகையால் ஐ.நா இவற்றை வெளியிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்."
டைம்ஸ் இன்னும் கூறுவது "சீனா, எகிப்து, இந்தியா மற்றும் கியூபா உட்பட்ட நாடுகளின் ஆதரவினால் புதன்கிழமை ஸ்ரீலங்கா எந்தத் தவறும் இழைக்கவில்லை என ஐநா மனித உரிமைகள் ஆலோசனைக் குழுவினால் விடுவிக்கப்பட்டது.
"இது ஒரு குற்றவாளிக் கும்பல் இன்னொரு குற்றவாளிக் கும்பலைப் பாதுகாக்கும் செயலுக்கு ஒப்பானது என ஒபாமாவுக்கான தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாதுகாப்பு வலயத்தில் தங்களுக்கென்று செய்தி மூலங்கள் இருப்பதாக ஒபாமாவுக்கான தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மூலங்களின் படி கடந்த ஜனவரியில் 3,60,000 தமிழ்ப் பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்தனர்.
இப்போது, செய்தியறிக்கைகளின் படி 2,90,000 பேர் மட்டுமே உள்ளனர். ஒபாமாவுக்கான தமிழர்களின் கணக்கு மிகத் தெளிவானது: கடந்த ஐந்து மாதங்களில் ஏறக்குறைய 70,000 அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் மாயமாகி விட்டார்கள்.
ஐநாவின் உண்மை மறுப்புப் போக்குக்கு முந்தைய எடுத்துக்காட்டாக, ஐ.நா பேச்சுத் தொடர்பாளர் கோர்டான் வெய்ஸ் இந்த மாதத்தில் இலங்கையின் வடபகுதி பாதுகாப்பு வலயத்தில் நடைபெற்ற 'அன்னையர் தினப் படுகொலை'யைப் பற்றிப் பேசியதாவது:
"வார இறுதியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டது, இரத்தக்களரி உண்மையாகி விட்டது என்பதைக் காட்டுகிறது." ஆனால் கடந்த வாரம் இலங்கைக்கு வந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி-மூனோ ஐ.நா பேச்சுத் தொடர்பாளர் சாட்சியம் பகர்ந்ததை மறுத்தார். இரத்தக்களரியைக் குறித்துப் பேசுகையில், "நான் அந்த வார்த்தையை குறிப்பிடவே இல்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன்" எனக் கூறினார்.
ஸ்ரீலங்கா 'பாதுகாப்பு வலயத்தில்' கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் யு.எஸ்ஸிடம் உள்ளன. "ஐ.நா பல மூலங்களிலிருந்து கசிய விட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களிலிருந்து போர் விலக்குப்பகுதி என அறிவிக்கப்பட்ட பின்னரும் ஸ்ரீலங்கா விமானப்படை அந்தப் பாதுகாப்புப் பகுதியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களைக் குண்டு வீசி அழித்ததைக் காட்டுகிறது" என இலண்டன் டைம்ஸ் ஆன்லைன் கூறுகிறது.
ஆனால் பான் கி-மூனோ CNN நேர்காணலில் அவர் பொதுமக்களுக்கெதிராகக் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கான 'தெளிவான ஆதாரங்கள் எதையும் தான் காணவில்லை' எனக் கூறினார்.
தனது ஸ்ரீலங்கா உபசாரத்திற்கு மரியாதையளிக்கும் விதமாக பதிலளித்து ஐ.நாவின் செயலாளர் நாயகம் ஸ்ரீலங்காவின் கொடூரங்களை நிரூபிக்கும் ஐ.நாவின் சாட்சியங்களையே புறந்தள்ளி தமிழ் மக்களைக் காக்கும் பொறுப்பைத் தட்டிக் கழித்தார்.
பான் கி-மூனின் தலைமை அலுவலரான விஜய் நம்பியார் கடந்த மாதம் வடக்கு இலங்கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மனிதப் பேரவலம் குறித்தத் தகவலறிய இலங்கைக்கு வருகை தந்தார். அதன்பின்னர் தான் அறிந்து கொண்டவற்றை தனது உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க மறுத்தார்.
ஒரு 'நடுநிலையாளராக' தான் ஸ்ரீலங்கா அதிபர் மற்றும் அவரது சகோதரர்களிடம் பேசியது பாதுகாப்பு அவைக்கும் தெரியப்படுத்த முடியாத அளவுக்கு "இரகசியத்தன்மை வாய்ந்தது" என்று முரட்டுவாதம் செய்தார்.
இரகசியாக மூடிய அறையில் அறிக்கை அளிக்கவும் முதலில் மறுத்தார், பின்னர் பன்னாட்டு அழுத்தத்திற்குப் பணிந்தார். அவரிடம் இலங்கையில் தமிழர்களின் மனிதப் பேரவலத்தைப் பற்றி சொல்ல ஏதாவது இருந்திருந்தாலும் அதை உலகிற்குச் சொல்ல அவர் தயாராக இல்லை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆலோசனைச் சபை இலங்கை முன்மொழிந்த "நாடுகள் தங்களது உள்நாட்டுப் பிரச்சனைகளை வெளித்தலையீடு இல்லாமல் கையாளும் உரிமையை மட்டும் வலியுறுத்தி" அரசுப் படைகள் செய்த கொடூரமான பாதகச் செயல்களைக் குறிப்பிடாத தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது என டைம்ஸ் ஆன்லைன் தெரிவித்தது.
அதேநேரத்தில் போர் நடைபெற்ற பகுதிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கும் பன்னாட்டு உதவி நிறுவனங்கள் செல்லும் உரிமை கோரும் சுவிட்சர்லாந்தால் முன்மொழிந்து ஐரோப்பிய நாடுகளால் ஆதரிக்கப்பட்டதீர்மானம் சபையில் தோற்கடிக்கப்பட்டது.
சுவிஸ் தீர்மானம் ஸ்ரீலங்கா செய்திருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் மீது விசாரணை வேண்டும் எனவும் வேண்டியிருந்தது.
No comments:
Post a Comment