Monday, June 29, 2009

நடனத்தின் எல்லை மைக்கேல் ஜாக்சன் -ஒரு சகாப்தம்!




                            தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். 1958ல் அமெரிக்காவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன்,  1970 ல் அந்தசக்  குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின்  மிகச்  சிறந்த பாடகராகவும்  பார்க்கப்பட்டார். அப்போது  அவருக்கு வயது 12.

1972 ம் ஆண்டு 'பென்'  எனும்  பெயரில்     தனது     தனி  ஆல்பத்த வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான 'தி விஸ்'ஸில் நடித்தார். பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979 ல் ஆஃப் தி வால் மற்றும் 1982 ல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்றைக்கு உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது. த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்ரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது.  த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்றுத் தீர்ந்தன. இன்றும் பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.
இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.



1992 ம் ஆண்டு ஹீல் த வேர்ல்டு எனும் அறக்கட்டளையைத் துவங்கினார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த அமைப்பு மூலம், உடலால் மனதால் நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை செய்வதாக அறிவித்தார்.
ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் நெவர்லாண்ட் எனும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார். அங்கேயே இந்த சிறுவனர்களுடன் பொழுதைக் கழித்தார். இங்குதான் வந்தது வம்பு. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன, வழக்குகள் தொடுக்கப்பட்டன, கோர்ட்டுக்கு வெளியே செட்டில்மெண்டுகள் நடந்தன. இந்த சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்ஸனால் மீண்டும் ஒரு இசை ஆல்பத்தைத் தர முடியாமல் போனது. ஆனாலும் பாப் உலகின் மன்னனாகவே கடைசி வரை அவர் பார்க்கப்பட்டார்.


1994 ல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்து கொண்டு, தன்மீதான 'சிறுவர் பாலியல் தொந்தரவு' புகார்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். ஆனால் இந்தத் திருமணமும் இரு ஆண்டுகள்தான் நீடித்தது.
லிசா மேரியை விவாகரத்து செய்த கையோடு 1996 ல் டெபி ரோவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தனர். 1999 ம் வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது. பின்னர் வேறொரு பெண் மூலம் மூன்றாவது குழந்தையும் பிறந்தது அவருக்கு. மூவருமே ஆண் குழந்தைகள். ஜாக்ஸன் மகன்களின் பெயர் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2. 2005 ம் ஆண்டு அனைத்து பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன்.  மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், வரும் ஜூலை 13 ம் தேதி முதல் லண்டன் மற்றும் பிரிட்டனின் குறிப்பிட்ட நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது இமேஜை திரும்பப் பெற முடியும், புதிய இசை ஆல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.


மைக்கேல் ஜாக்சன் அடுத்த மாதம் 13ந் தேதி தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார். லண்டன் நகரில் 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த இருந்த மைக்கேல் ஜாக்சன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
பயிற்சிக்கு நடுவே மைக்கேல் ஜாக்சன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவருடைய சுவாசம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய உயிரை காப்பதற்காக போராடினர். பின்னர் யு.சி.எல்.ஏ. மருத்துவ மையத்திற்கு மைக்கேல் ஜாக்சன் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உயிரை மீட்க மருத்துவர்கள் போராடினர். பின்னர் மைக்கேல் ஜாக்சன் உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க நேரப்படி மாலை 2.26 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. (இந்திய நேரப்படி 26.06.09 அதிகாலை 2.56 மணி)


மைக்கேல் ஜாக்சன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் மரணத்திற்கான உண்மையான காரணம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
மைக்கேல் ஜாக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த இடத்தில் திரண்டனர். பதட்டத்தோடு காத்திருந்த அவர்கள், ஜாக்சன் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதும் கேவி அழுதனர். ஜாக்சன் மரணமடைந்த செய்தி பரவியதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன் கூடினர். ரசிகர்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். பலர் கண்ணீர் விட்டபடி இருந்தனர். மைக்கேல் ஜாக்சன் மரணத்தை அடுத்து எம்டிவி தன்னுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு மைக்கேல் ஜாக்சனின் புகழ் பெற்ற பாடல்களை ஒளிபரப்பியது. வானொலி நிலையங்களும் மைக்கேல் ஜாக்சனின் சாகாவரம் பெற்ற பாடல்களை ஒளிபரப்பி வருகிறது.
மைக்கேல் ஜாக்சனின் மரணம் இசையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய முதல் ஆல்பத்தை தயாரித்த நிறுவனத்தை சேர்ந்த குவின்சி ஜோன்ஸ், இத்தனை இளம் வயதில் மைக்கேல் ஜாக்சன் உலகை விட்டு பிரிந்தது வேதனையை தருவதாகவும், அதனை விளக்க வார்த்தைகளே இல்லையென்றும் கூறியுள்ளார்.


மைக்கேல் ஜாக்சன் இசையுலகில் செலுத்திய தாக்கமும், பாதிப்பும் என்றென்றும் உணரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மைக்கேல் ஜாக்சனுக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். மேலும் ஜாக்சனுக்கு ஜெர்மினி, டிட்டோ, ராண்டி ஆகிய மூன்று சகோதரர்களும், ஜேனே மற்றும் லாடோயோ ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர். 



பாப் இசையுலகம் கொண்டாடிய மைக்கேல் ஜாக்சனின் எதிர்பாராத மரணத்தை அடுத்து  அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே   சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails